என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டி.ஐ.ஜி. விஜயகுமார் உடலுக்கு தேனியில் இன்று இறுதிச்சடங்கு- சோகத்தில் மூழ்கிய கிராமம்
- டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் இன்று பிற்பகலில் தேனிக்கு கொண்டு வரப்படுகிறது.
- டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
தேனி:
கோவையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் சொந்த ஊர் தேனி மாவட்டம் அன்னஞ்சி அருகில் உள்ள ரத்தினம் நகராகும். விஜயகுமார் தனது பள்ளி படிப்பை போடி அணைக்கரைப்பட்டியில் உள்ள பள்ளியில் முடித்தார். இவரது தந்தை செல்லையா கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் ராஜாத்தி பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருக்கு பிரேமலதா என்ற அக்காவும், நிர்மலா என்ற தங்கையும் உள்ளனர். நிர்மலா தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார். தேனி ரத்தினம் நகரில் விஜயகுமாரின் பெற்றோர் மட்டும் வசித்து வருகின்றனர். தனது மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து கதறி அழுதனர். தனது மகன் மிகவும் தைரியமானவன் என்றும், தற்கொலைக்கு யாரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அறிவுரைகள் வழங்கி தேற்றுவார் எனவும் தெரிவித்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது ஆச்சரியமாக உள்ளது எனவும் கூறினர். டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் இன்று பிற்பகலில் தேனிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






