என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • வோட்டர்ஸ் ஹெல்ப் லைன் என்ற மொபைல் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலுக்குட்பட்ட 2308 வாக்குச்சாவடிகளிலும் கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்திட ஏதுவாக தேர்தல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    தற்பொழுது இரண்டாம் கட்டமாக நாளை ( சனிக்கிழமை ) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 2308 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

    எனவே, கடந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ள தவறிய பொது மக்கள் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இச்சிறப்பு முகாமில் 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் அடுத்து வரும் நான்கு காலாண்டுகளின் மைய தகுதிநாளில் (அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1) 18 வயதினை பூர்த்தியடைபவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட, படிவம் எண் 6 பூர்த்தி செய்தும், இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களினால் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7 பூர்த்தி செய்தும், வாக்களார் பட்டியலில் அனைத்து வகையான திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8 பூர்த்தி செய்தும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு படிவம் 6பி பூர்த்தி செய்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும், மேற்படி முகாமினை பயன்படுத்திகொள்ள இயலாத வாக்காளர்கள் அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 9.12.2023 வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணைய தளம் மற்றும் Voters Help Line என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்

    மேலும் விபரங்கள் அறிய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • மருத்துவக்கல்லூரி சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே கரந்தை, பள்ளிஅக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுங்கான் திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப் பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம் பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
    • 16 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ள.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.

    நேற்று தஞ்சை, குருங்குளம், திருவையாறு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

    இருப்பினும் இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் மழை இல்லை.

    இருந்தாலும் இரவில் மீண்டும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 11 கூரை வீடுகள், 5 ஓட்டு வீடுகள் என மொத்தம் 16 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ள.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு:-

    தஞ்சாவூர்-9.50, அதிராம்பட்டினம் -9.20, ஒரத்தநாடு -9, திருவையாறு-7.

    • விளைநிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்திற்கு மேல்மா விவசாயிகளின் விளைநிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்.

    சிப்காட் வளாகத்தில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயிலடியில் சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பழனிராஜன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகளை விளக்கி உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம்.

    முருகேசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சி. பி. எம். எல் மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் விடுதலைகுமரன், மாவட்ட செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஜனநாயக விவசாய சங்க மாநில தலைவர் ராமர் , தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி தமிழ்ச்செல்வி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் இடதுசாரிகள் பொதுமேடை பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.

    • தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
    • விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரம், மருத்துவக் கல்லூரி பகுதி 46,47, 48,49- வது வார்டிற்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் மா. சேகர், மாநகர செயலாளர் என்.எஸ். சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    பகுதி பொறுப்பாளர் டி. மனோகரன் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி.ரத்தினவேல் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அ.தி.மு.க. தனித்துவம் வாய்ந்த கட்சியாகும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் கட்சியை எடப்பாடி பழனிச்சாமி திறம்பட வழி நடத்தி வருகிறார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் நிலம் எடுப்புக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தி.மு.க அரசு குண்டர் சட்டம் போட்டது.

    உடனடியாக இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டம் தெரிவித்து தானே தலைமை தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

    அதன் பிறகே விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டது.

    இதேபோல் தி.மு.க ஆட்சியில் கடுமையான மின்வெட்டு, வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.

    மேலும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இப்படி மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.

    இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    அடுத்து மக்களின் பேராதரவோடு மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமையும். எனவே பூத் கமிட்டி நிர்வாகிகள் சரியான முறையில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் பகுதி துணைச் செயலாளர் சிவகுமார், வட்ட செயலாளர்கள் கிருபாகரன் (46-வது வார்டு), மோகன் (47-வது வார்டு), பழனிவேல் (48-வது வார்டு), அண்ணாதுரை (49-வது வார்டு), தகவல் தொழில்நுட்ப பிரிவு நடராஜன், மருத்துவக் கல்லூரி பகுதி சிறுபான்மை பிரிவு சையது முகமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கும்ப கலசத்திற்கும், மூலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இடையிருப்பு ஊராட்சி, நெடுஞ்சேரி கிராமத்தில் மதுர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகாபூர்ணஹீதி யாத்ரா ஹோமம், சோமகும்பபூஜை உள்பட யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபா ராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து திவ்ய கடங்கள் புறப்பட்டு நடைபெற்றது.

    பின்னர் கும்ப கலசத்திற்கும், மூலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    இந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
    • மீன்பிடிக்க செல்லும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்து செல்ல வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே காரங்குடா, மல்லிப்பட்டிணம் ஆகிய இடங்களில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மீன்வளத்துறை ஆகியோர் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக் கூடாது.

    தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது. கடத்தல் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

    கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படை பிரதான அதிகாரி பி.வி.வினு, ரமேஷ்ராஜா மற்றும் அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழும காவல் துணைக் கண்காணிப்பபாளர் பிரான்சிஸ், காவல் ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், ஆய்வாளர் கெங்கேஸ்வரி மற்றும் மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    • செங்கமங்கலம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது
    • 26 பேருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் கிராமத்தில் தெய்வாங்கப் பெருமாள் திருக்கோயில் திடலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

    தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இம்முகாமில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி எம்.பி பழனிமாணிக்கம் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது.

    சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு ரூபாய் 34 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் உதவி தொகையும் வேளாண்மை துறை சார்பில் 4 பயனாளிகளுக்கும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செங்கமங்கலம் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 15 லட்சம், தோட்டக்கலை துறை மூலம் மானியம் பெறும் மூன்று பயனாளிகளுக்கு ரூபாய் 33 ஆயிரத்து 625 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வருவாய் துறை சார்பில் 26 பேருக்கு பட்டா மாறுதல் ( உட்பிரிவு) இம்முகாமில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    முன்னதாக தோட்டக்கலை துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

    வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர் அலி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் உ.துரை மாணிக்கம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜரத்தினம், செங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செல்வம், காலகம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராவூரணி வட்டாட்சியர் ரா.தெய்வானை நன்றி கூறினார்.

    • அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
    • விழாவில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலா ளருமான உதயநிதிஸ்டாலின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகர தி.மு.க. சார்பில் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

    மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் ஏற்பாட்டில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, பகுதி செயலாளர்கள் சதாசிவம், மேத்தா, நீலகண்டன், கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணிகண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா, மாநகர பொருளாளர் காளையார் சரவணன், கவுன்சிலர்கள் உஷா, அண்ணா.பிரகாஷ், லெனின். இளைஞரணி வாசிம்ராஜா மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
    • சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது.

    இது தவிர கோடைகால சாகுபடியும் நடைபெறும்.

    இங்கு விளைவிக்கப்படும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படுகிறது.

    அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து 1000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.
    • கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி, புத்தூர், குடிகாடு கிராமத்தில் தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.

    இந்த மணல் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைன் மூலமாக புதுப்பிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இருந்தும் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நடப்பு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை டிராக்டர் எளிமையாக கிடைக்கப்பெற்றது. தற்போது டிராக்டர் மணல் கிடைப்பதில்லை.

    ஆகவே மீண்டும் டிராக்டரில் மணல் வேண்டி கனிம வள அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட டிராக்டர் உரிமையாளர்கள் சென்று முறையிட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

    எனவே மணல் குவாரியில் டிராக்டரில் மணல் அள்ள அனுமதிக்க கோரி வருகின்ற 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மணல் குவாரி முன்பு மறியல், முற்றுகை போராட்டம் நடத்துவதென கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு குறு கட்டுமான பணியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

    • வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகள் சுற்றி திரிகிறது.
    • இதுநாள் வரை 43 மாடுகள், 42 கன்றுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மாடுகளின் உரிமைதாரர்களுக்கு அபராத தொகையாக முதல்முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு அபராதம் ரூ.3000- மற்றும் கன்று ஒன்றுக்கு ரூ.1500, இரண்டாவது முறை அதே மாடு பிடிக்கப்படும் நிலையில் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.4000, கன்று ஒன்றுக்கு ரூ.2000, மூன்றாவது முறை அதே மாடு பிடிக்கப்பட்டால் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.5000, கன்று ஒன்றுக்கு ரூ.2500 வசூலிக்கப்பட்டு வந்தது.

    இதுநாள் வரை 43 மாடுகள், 42 கன்றுகள் பிடித்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மாநகராட்சியில் தொடர்ந்து சாலையோரத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பராமரிப்பதற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதினால் முதல்முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு அபராதம் ரூ.5000, கன்று ஒன்றுக்கு ரூ.1500 வசூலி க்கப்படும்.

    இரண்டாவது முறை அதே மாடு பிடிக்கப்படும் நிலையில் ரூ.10000-ம் கன்று ஒன்றுக்கு ரூ.5000 வசூலிக்கப்படும். மூன்றாவது முறை அதே மாடு பிடிக்கப்பட்டால் ரூ.15000, கன்று ஒன்றுக்கு ரூ.10000 வசூலிக்கப்படும்.

    நான்காவது முறை அதே மாடு தொடர்ந்து பிடிக்கப்பட்டால் கோசாலைக்கு அனுப்பப்படும்.

    எனவே கால்நடை உரிமைதாரர்கள் தங்கள் கால்நடைகளை தங்களுக்கு உரிய இடத்தில் பராமரித்து, பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×