என் மலர்
சிவகங்கை
காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீசார் கானாடுகாத்தான் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தினர். இதைப்பார்த்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் ஆறுமுகம் என்பவரை தேடிவருகின்றனர்.
இதேபோல சிவலங்குடி அருகே சாக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்த போது, அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த குளத்தூர் பகுதியை சேர்ந்த பிரகாசை (வயது 35) கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது தலைமையிலான போலீசார் நேற்று திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமறம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரித்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி புதுக்கோட்டையிலிருந்து காளையார்கோவிலுக்கு மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, புதுக்கோட்டையைச்சேர்ந்த செந்தில்குமார் (32), காளையார்கோவில் அருகே உள்ள புல்லுக்கோட்டையைச்சேர்ந்த ரஞ்சித்(26) ஆகிய இருவரையும் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் நகர் போலீசாரிடம் ஒப்புடைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் சிவகங்கை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு காரைக்குடி போலீஸ் காலனியில் உள்ளது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு வருமான வரித்துறை மூலம் பான் கார்டு பெற்றுள்ளார். அதன் எண் CCOPS0932F. இந்த எண்ணையே தனது வங்கி கணக்குகளுடன் இணைத்து உள்ளார்.
இந்த நிலையில் சேகர், வீடு கட்டுவதற்கு திட்டமிட்டு அங்குள்ள வங்கியில் வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பித்தார். அதனை ஆய்வு செய்த வங்கி மேலாளர், “பல இடங்களில் நீங்கள் கடன் வாங்கி நிலுவை வைத்து இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு கடன் தர இயலாது” என மறுத்துவிட்டார். ஆனால் சேகர், “நான் எங்கும் இதுவரை கடன் வாங்க வில்லை” என்று மறுத்துள்ளார்.
உடனே வங்கி மேலாளர், அதற்கு ஆதாரமாக சிபில் (ஒருவரின் கடன் பற்றிய தகவல்கள்) அறிக்கையை கொடுத்துள்ளார். அதில் சேகர் காஞ்சீபுரம் மாவட்டம் ஏனாத்தூர் வங்கி ஒன்றில் கடன் வாங்கி நிலுவை வைத்திருப்பதாக தகவல் இருந்தது. உடனே சேகர், ஏனாத்தூரில் உள்ள வங்கிக்கு நேரிடையாக சென்று மேலாளரிடம், “நான் உங்கள் வங்கியில் கடன் வாங்கவே இல்லை. ஆனால் எனது பெயரில் உங்களது வங்கியில் எப்படி கடன் நிலுவை உள்ளது” என்று கேட்டு உள்ளார்.
அதன் அடிப்படையில் வங்கி மேலாளர் இதுகுறித்து ஆய்வு செய்தார். அப்போது அந்த வங்கியில் கடன் வாங்கி நிலுவை வைத்திருப்பது ஏனாத்தூர் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் சேகர் என்ற காண்டிராக்டர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வங்கிக்கு வழங்கிய பான்கார்டு எண்ணும், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் பான்கார்டு நம்பரும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது. இருவருக்கும் ஒரே எண்ணில் பான்கார்டு இருந்ததால் தான் காண்டிராக்டர் சேகர் வாங்கிய கடன், சப்-இன்ஸ்பெக்டர் சேகரின் சிபில் அறிக்கையில் எதிரொலித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரே எண்ணில் இருவருக்கும் எப்படி பான்கார்டு வழங்கப்பட்டது என்பது குறித்து நடந்த மேல் விசாரணையில் பல அதிசயங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது காண்டிராக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரின் பெயரும் சேகர் என்பது தான். அடுத்ததாக இவர்கள் இருவரும் ஒரே தேதியில் பிறந்துள்ளனர். இவர்கள் பிறந்த தேதி 17-05-1966. அதன் தொடர்ச்சியாக இருவரின் பெற்றோர் பெயரும் ஒன்றே. இருவரின் தந்தை பெயரும் சுப்பிரமணியன். தாய் பெயர் சரோஜா.
இந்த காரணங்களால் தான் இரண்டு பேருக்கும் ஒரே எண்ணில் வருமான வரித்துறை பான்கார்டு வழங்கி உள்ளது. இந்த குளறுபடி குறித்து சப்-இன்ஸ்பெக்டர் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக அவர் வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்த மனுவும் நிலுவையில் உள்ளது. #PANCard
சிவகங்கை அம்மன் நகரை சேர்ந்தவர் சிவனேசன். அவருடைய மகள் சுவேதா (வயது 16). சிவகங்கையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இவர் பள்ளிக்கூடத்துக்கு செல்போன் எடுத்து வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதை ஆசிரியர்கள் கண்டுபிடித்து கண்டித்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் அந்த மாணவியின் தந்தையை அழைத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த மாணவி விபரீதமாக பள்ளியின் மாடியில் இருந்து குதித்தார். இந்த சம்பவத்தால் பள்ளிக்கூடத்தில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மாணவியை சிகிச்சைக்காக உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் மாணவியின் உடல்நிலை மோசம் அடைந்தது. எனவே மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி நேற்று இறந்து போனார்.
இந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினரையும், சக மாணவர்கள், ஆசிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிங்கம்புணரி கீழக்காட்டு சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 78). ஓய்வு பெற்ற அரசு வட்டார வளர்ச்சி அதிகாரியான இவரின் மகன்கள், மகள்கள் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டனர். இந்தநிலையில் மனைவி ஆறுமுகத்தம்மாளுடன் அதிகாரி தனியாக வசித்து வந்தார். தற்போது இவரின் 2-வது மகன் பாண்டியராஜன் மாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன், தனது மனைவியுடன் மதுரையில் சிகிச்சை பெற சென்றார். இதைநோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பீரோவில் 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனராம்.
மறுநாள் காலை பாண்டியராஜன் எழுந்த பார்த்த போது, கீழே உள்ள தந்தை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோடீஸ்வரன், சந்திரசேகன் உள்ளிட்ட போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கீழக்காட்டு சாலை சிங்கம்புணரி பிரதான சாலைகளில் முக்கியமானது. இங்கு அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், ஆன்மிக இடங்கள், பெண்கள் விடுதி போன்றவை உள்ளன.
இதனால் இந்த சாலையில் எந்நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. தொடர்ந்து இரவு, பகல் என போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கம்புணரி கீழைக்காடு சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. உடல்நலம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சிகிச்சை பெறுவதற்காக மதுரைக்கு சென்றார். இதனை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் சுப்பிரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார். சுப்பிரமணியன் மதுரைக்கு சென்றிருப்பதை அறிந்தே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 37). கூலி தொழிலாளியான இவர் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன், முத்தையா மீது மோதியதில் காயமடைந்து அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அதைத்தொடர்ந்து அவரின் உறவினர்கள் மோதிய வேன் குறித்த விவரத்தை மானாமதுரை போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் போலீசாரை கண்டித்து மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்ய விடாமல் தடுத்து, ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். தகவலறிந்து வந்த மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்தி, சேகர், தவமுனி தலைமையில் போலீசார் சமரச பேச்சு நடத்தினர்.
அதில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்து உடலை வாங்கி சென்றனர்
சிவகங்கை:
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:-
நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும். பயிர் காப்பீடு செய்யாதவர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் பயிர் சேதங்களுக்கு ஏற்ப கணக்கிட்டு உரிய இழப்புகள் வழங்கப்படும்.
கண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின்சாரம் வரிசைப்படி வழங்கப்படும். சேதமடைந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்படும். ஊராட்சி சாலைகளை சீரமைக்கவும், நெடுஞ் சாலைகளை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் சேதமடைந்த வீடுகளில் பராமரிப்பு மேற்கொள்ளப்படும். வீடுகளும் கட்டித்தரப்படும்.
நெடுஞ்சாலை அமைப்பதற்கு விளை நிலங்கள் வழங்கியவர்கள் வருவாய்த் துறையின் மூலம் கணக்கிட்டு உரிய தொகை விரைவில் வழங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைக்கேற்ப வருவாய்த்துறை சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலர் மூலம் உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நீர்வரத்துக் கால்வாய் சீரமைக்க எந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறும்போது அந்தந்த பகுதி விவசாயிகள் கண்காணித்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை கால்வாய்களாக இருந்தாலும் அவர்களிடம் தடையின்மை சான்று வாங்கி உள்ளாட்சி அமைப்புக்கள் மூலம் வரத்துக்கால்வாய்கள் சீர மைக்கப்படும். மேலும் நீர்நிலைகளிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய இயக்குநர் செந்தில்குமரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி ஒன்றியம் வடக்கு கீரனூர் கிராமத்தில் மணல் அள்ளுவதாக இளையான்குடி தாசில்தார் தமிழரசனுக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவர், வருவாய் ஆய்வாளர் காசியம்மாள், கிராம உதவியாளர் பாலமுருகன் ஆகியோருடன் சென்று சோதனை நடத்தினார். அப்போது 3 லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் சென்று அதிகாரிகள் விசாரித்த போது, சவடு மண் அள்ள அனுமதி பெற்று, மணல் அள்ளியது தெரியவந்தது. இதை தடுக்க முயன்ற அதிகாரிகளை லாரி டிரைவர்கள் சிவகங்கையை சேர்ந்த சரவணன் (வயது 44), காளையார் கோவிலை சேர்ந்த ஆறுமுகம் (35) ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதையடுத்து அதிகாரிகள் இளையான்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் டிரைவர்களை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரும்பச்சேரியை சேர்ந்த ஒப்பந்தகாரர் முருகன், லாரி உரிமையாளர்கள் சிவகங்கையை சேர்ந்த புவியரசன், காளையார்கோவில் காளீஸ்வரன், மானாமதுரை சிங்காரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு லாரி டிரைவரை தேடி வருகின்றனர். #tamilnews
சிவகங்கை அருகே உள்ள பாகனேரியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் பிருந்தா (வயது 22). இவர் கல்லலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த அசோக் என்ற வாலிபரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதலுக்கு ஒரு தரப்பினர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே மதகுபட்டி, சிவகங்கை மகளிர் போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் மாணவி பிருந்தா கடந்த 24-ந்தேதி தேதி எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிருந்தா பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை மருத்துவமனை அருகில் மானாமதுரை சாலையில் மாணவியின் உறவினர்கள் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை தாசில்தார் ராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவி பிருந்தாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தால் தான் மாணவியின் உடலை வாங்கி செல்வோம் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
ஆனால் கைது நடவடிக்கை மேற்கொண்டதற்கு பின்பு உடலை வாங்கிச் செல்வதாக கூறிவிட்டு உறவினர்கள் கலைந்து சென்று விட்டனர். இதனால் மாணவியின் உடல் அரசு மருத்துவமனையின் பிணவறையிலேயே வைக்கப்பட்டு உள்ளது.
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை பகுதி மக்களை சந்திக்க சென்றார். வழியில் அவர் காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தேர்தலை சந்திக்க பயப்படுகின்றன. இடைத்தேர்தல் என்றாலே பணப்பட்டுவாடா என்ற நிலைமைக்கு தேர்தல் களம் வந்து விட்டது. போலீசார் பணியில் ஈடுபடும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தேவைப்பட்டால் மற்ற துறைகளிலும் அதனை அமல்படுத்தலாம். கல்வி நிறுவனங்களிலும் செல்போன் பயன்படுத்த விதிமுறைகளை அமல்படுத்தலாம். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு தே.மு.தி.க. எப்போதும் துணையாக நிற்கும். அரசு நேர்மையான அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டும்.
தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் முடிவு செய்வார். தேர்தல் கூட்டணி சம்பந்தமாக வைகோவின் நிலைப்பாடு குறித்து கருத்து சொல்ல வேண்டியது நான் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் திருவேங்கடம், நகரச் செயலாளர் சரவணன், மகளிரணி நிர்வாகி தெரசா ஆகியோர் உடன் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 60). இவர் குவைத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தியானம், சித்தர்கள் வழிபாடு என்று சென்று வருவாராம். இதை தெரிந்து கொண்ட குவைத்தில் வேலை செய்யும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அப்துல்அஜீஸ் என்பவர் ராமதாசிடம் சிவகங்கையில் ஒரு சித்தர் இருப்பதாகவும், அவர் தரும் மருந்தில் பல நோய்கள் குணமாகிறது என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய ராமதாஸ் கடந்த 2015–ம் ஆண்டு சிவகங்கைக்கு வந்துள்ளார். அவரிடம் சிவகங்கை அண்ணாமலை நகரை சேர்ந்த ரவி (46) என்பவரை சாமியார் என அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து சிவகங்கையில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்று கூறி ராமதாசிடம் பல தவணைகளில் ரூ.4 கோடியே 66 லட்சம் வாங்கினாராம்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆசிரமம் மற்றும் பணம் குறித்து ராமதாஸ் கேட்ட போது, சாமியார் ரவி சரிவர பதிலளிக்கவில்லையாம். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமதாஸ் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார்.
அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டிசெல்வம், இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்– இன்ஸ்பெக்டர்கள் சசிகலா, அருள்மொழிவர்மன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி, தவமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில் ரவி போலி சாமியார் என்பதும் இதுபோல் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் ரூ.40லட்சம் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது
அதைத்தொடர்ந்து போலி சாமியார் ரவி, அவரின் மனைவி புவனேஸ்வரி, உறவினர் மோதீஸ்வரன், அப்துல்அஜீஸ், பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம், சென்னையை சேர்ந்த தேவர் என்ற பொன்னியப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் போலி சாமியார் ரவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews






