என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிங்கம்புணரி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி வளந்து வரும் நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது. மேலும் தற்போது தனித்தாலுகா அந்தஸ்து பெற்றுள்ளது. இந்தநிலையில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ள பகுதியான நியூ காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் மற்றும் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் வீடு, முன்னாள் வங்கி ஊழியர் வீடு என அடுத்தடுத்தது தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.

    இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் தங்களின் வீடுகளிலும் கொள்ளையர்கள் புகுந்து விடுவார்களோ என்று அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மற்றும் வீடுகள் நெருக்கம் கொண்ட எங்கள் நியூ காலனி பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.

    இதனால் எங்கள் பகுதி பொதுமக்கள் உடமைகளையும், தங்களையும் பாதுகாக்க போலீசார் தினமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

    குறிப்பாக கீழக்காட்டு சாலை, நியூ காலனி மற்றும் கூத்தாடி அம்மன் கோவில் சாலை போன்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட வேண்டும் என்றார். இதையடுத்து இந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். #tamilnews
    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற துணை பதிவாளரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த சக்கந்தி மில்கேட் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் சிவகங்கை செந்தமிழ்நகரில் வசிக்கும் ராகவன்(வயது60) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாம். ராகவன் ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் துணை பதிவாளராக இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

    சுரேஷின் மனைவி சங்கீதாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ராகவன் கடந்த 1.9.2017-ம் ஆண்டு ரூ.8 லட்சம் பணம் பெற்றாராம். ஆனால் அவர் பேசியபடி வேலை வாங்கி கொடுக்காமல் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டாராம். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சங்கீதா புகார் செய்தார்.

    அப்போது முன் பணமாக ரூ.3 லட்சத்தை ராகவன் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.5லட்சத்தை திருப்பி கொடுக்க வில்லையாம். இது குறித்து சங்கீதா மீதி பணத்தை கேட்கும் போது அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து சங்கீதா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார்.

    அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்மொழிவர்மன், சசிகலா ஆகியோர் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணை பதிவாளர் ராகவன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் ஆயிரம் வைசிய மகாலில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்பு அவர் பேசியதாவது:- தமிழக அரசு மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

    குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் நடத்தப்படுகிறது. அதில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்களை கண்டறிந்து அங்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.

    காரைக்குடியில் நடந்த முகாமில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், நலிந்தோர் உதவித் தொகைக்காக 13 பயனாளிகளுக்கு ரூ.32 ஆயிரம், தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித் தொகை மற்றும் ஓய்வூதிய உதவித் தொகைக்காக 26 பயனாளிகளுக்கு ரூ.47 ஆயிரத்து 250, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் சக்கர நாற்காலிகள் மற்றும் மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்க 6 பயனாளிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 790, தோட்டக்கலை துறையின் மூலம் பவர் டில்லர் வாங்க 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

    மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மகளிர் தொழில் முனைவோர் கடன் மற்றும் பண்ணை சாராக் கடனாக 10 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம், மகளிர் திட்டத்தின் மூலம் 202 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 99 லட்சத்து 45 ஆயிரம், வட்டார வளர்ச்சி துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், தனிநபர் கழிப்பறை அமைக்க 20 பயனாளிகளுக்கு ரூ.ஒரு லட்சத்து 69ஆயிரத்து 872 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், உதவி கலெக்டர் ஆஷாஅஜித், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஆவின் சேர்மன் அசோகன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின்பு அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் கோவிலூர் சென்றனர்.

    அங்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் ஆகியோர் அந்த பகுதியில் இயங்கி வரும் ரசாயன ஆலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், நீர் நிலை, விவசாயம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி கூறினர். இதையடுத்து அமைச்சர், கலெக்டர் ஆகியோர் ஆலையின் பின் புறம் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்று, அங்கிருந்து மண் எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் மண் பரிசோதனை முடிவுக்கு பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
    காரைக்குடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ளி வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    காரைக்குடி:

    செட்டிநாடு போலீசார் நேமத்தான்பட்டி சோதனைச் சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை மறித்து நிறுத்தினர். அந்த லாரியை போலீசார் சோதனை செய்த போது, எவ்வித ஆவணமின்றி லாரியில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூசையப்பர்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22), மரக்காத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (33) பள்ளிதம்மம் பகுதியை சேர்ந்த செந்தில் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல வடக்கு போலீஸ் சரகம் என்.ஜி.ஓ. காலனி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காரைக்குடி பகுதியை சேர்ந்த மணிவேல் (40) என்பவர் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த காரைக்குடி வடக்கு போலீசார் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

    இதுபோன்று பள்ளத்தூர் போலீசார் கல்லூர் சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஸ்ரீராம் நகரை சேர்ந்த குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்து, லாரியுடன் மணலை பறிமுதல் செய்தனர். 
    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து இந்த மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனை கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அங்கும் மருத்துவ பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு 7 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதுதவிர இங்கு செவிலியர்கள், மருந்தாளுனர், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

    இங்கு பணியாற்றிய மருத்துவர்கள் தற்காலிக பணிக்காக அருகில் உள்ள வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டதால் தான் தற்போது போதிய மருத்துவர்கள் இல்லாமல் இந்த மருத்துவமனை உள்ளதாக தெரிகிறது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கூறியதாவது:-

    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால் இங்குள்ள அறிவிப்பு பலகையில் 7 மருத்துவர்கள் வரை உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினம்தோறும் இங்கு வரும் நோயாளிகளுக்கு 2 மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனால் நீண்டவரிசையில் நின்று நோயாளிகள் மருத்துவரை பார்க்க வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் ஒரு மாத காலத்தில் 50-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. ஆனால் பெண் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் தான் பிரசவங்கள் பார்க்கும் நிலை உள்ளது. அதேபோல் மருந்தாளுனர் ஒருவர் மட்டும் பணி செய்வதால் மருந்துகளை வாங்குவதற்கு பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகங்கையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், தமிழகம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து வருவாய் கிராமங்களிலும் அடிப்படை வசதிகளுடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகம் அமைத்து தர வேண்டும். கூடுதல் பணிக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ப் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதையொட்டி ஏற்கனவே ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விளக்க கூட்டங்கள் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட அளவில் கண்டன ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

    சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தொடங்கிய ஊர்வலத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் முத்துவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநிலப் பொதுச்செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் முக்கிய விதிகளின் வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு தங்களின் கோரிக்கை மனுவை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் வழங்கினர்.
    கட்டிட சுவர் இடிந்து விழுந்து அரசு ஊழியர் இறந்தார். இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துமுருகன் (வயது 58). இவர் மானாமதுரை நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் காலையில் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவர் மீது அந்த பகுதியில் இருந்த ஒருகட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.

    அதில் முத்துமுருகன் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இறந்தவரின் உறவினர்கள் செல்வகுமார் (வயது 42) கருப்பையா (48), நாகராஜ் (33) மற்றும் சரவணன் ஆகிய 4 பேர் சுவர் இடிந்து விழுந்த வீட்டிற்கு சென்றனர்.

    அங்கு வீட்டின் உரிமையாளரான சாதிக் அலி என்பவரிடம் 4 பேரும் தகராறு செய்தார்களாம். இதுகுறித்து அவரது மனைவி ஆயிஷாசித்திக் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் அழகர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, செல்வகுமார், கருப்பையா, நாகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
    எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    காரைக்குடி,

    காரைக்குடி பெரியார் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சினைக் கண்டித்தும், அதற்காக அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இளையகவுதமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நில உரிமை மீட்பு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் தமிழேந்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் கணேசன், காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் சேசு ராஜேந்திரன் உள்பட கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை மற்றும் சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற நிலையில் அவர்கள் திடீரென பஸ் மறியலுக்கு முயன்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து அனுப்பி வைத்தனர். அதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனை சந்தித்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
    அ.ம.மு.க.வை விட்டு விலகுபவர்கள் பூஜ்ஜியத்திற்கு சமம். செந்தில் பாலாஜி விலகியதால் பாதிப்பு எதுவும் இல்லை என்று மாரியப்பன் கென்னடி கூறினார். #MariappanKennedy
    மானாமதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர் மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தி.மு.க.விற்கு சென்றுள்ளது மிகப்பெரிய துரோகம். தி.மு.க.விற்கு செல்வது தற்கொலைக்கு சமம்.

    அ.ம.மு.க.வை பொறுத்தவரை யார் போனாலும் கவலை இல்லை. மக்களிடம் மட்டுமே ஆதரவு உள்ளது. செந்தில் பாலாஜி மட்டும் இல்லை. நான் சென்றால் கூட அ.ம.மு.க.விற்கு பாதிப்பு இல்லை.

    இதன் மூலம் அவர் டி.டி.வி. தினகரனுக்கு துரோகம் செய்து விட்டார். டி.டி.வி. தினகரனை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அதனால் தேர்தல் நடத்தக்கூட இந்த அரசு பயப்படுகிறது.

    எத்தனையோ துரோகங்களை பார்த்து விட்டோம். இது ஒன்றும் கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை விட பெரிய துரோகம் தி.மு.க.விற்கு அவர் செல்வது.

    அ.தி.மு.க.விற்கு சோதனை வந்தபோது சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக தேர்வு செய்தார். ஆனால் அவர் தான் துரோகத்திற்கு வித்திட்டவர். அ.ம.மு.க.வை விட்டு விலகுபவர்கள் பூஜ்ஜியத்திற்கு சமம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஒன்றிய செயலாளர்கள் வேலுச்சாமி, சரவணன், நிர்வாகிகள் மேட்டுமடை செந்தில் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். #MariappanKennedy
    காரைக்குடி பகுதியில் பன்றிக்காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 8 மாதமாக மர்ம காய்ச்சல் பரவி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனாலும் நோயின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. எதனால் காய்ச்சல் வந்தது நோய்க்கான பெயர் என்ன அதற்கான சிகிச்சை முறை என்ன என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிப்பது இல்லை. இதுகுறித்து கேட்டபோது மாவட்ட சுகாதாரத் துறையின் வாய்மொழி உத்தரவு இதற்கு காரணம் இது பற்றி வேறு எதுவும் கருத்து கூற இயலாது என டாக்டர்கள் கூறுகிறார்களாம்.

    இதனால் இதற்கு பெயர் மர்ம காய்ச்சல் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இக்காய்ச்சல் ஓரளவு குறைந்து வரும் நிலையில் தற்போது பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவும் சங்கராபுரம் ஊராட்சி பகுதியிலேயே பரவிவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்காய்ச்சலினால் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டது.

    தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் இதற்கான சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் நோயாளியிடமோ அவர்களின் குடும்பத்தாரிடமோ டாக்டர்கள் காய்ச்சல் குறித்து எதுவும் கூற மறுத்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து கேட்டால் இதற்கு மாவட்ட சுகாதாரத் துறையின் வாய்மொழி உத்தரவு என்று டாக்டர்கள் கூறுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். நோயாளிகளின் நிலைமை மோசமாக இருக்கிற போது அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் வாய்மொழி உத்தரவு உள்ளது என தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வந்த நோய் என்ன சிகிச்சை முறை என்ன என்பது குறித்து மருத்துவர்கள் யாரும் கூறுவதில்லை. இது மருத்துவ உலக தர்மத்திற்கு எதிரானது என மருத்துவர்களே கூறுகின்றனர்.

    இது குறித்து தி.மு.க. கட்சி சார்பில் தொழிற்சங்க நிர்வாகி மலையரசன் கூறியதாவது:- நோயாளியிடமோ அவர்களது குடும்பத்தினரிடமோ நோயின் தன்மையை அதற்கான சிகிக்சை முறையை கூற மறுப்பது மனித உரிமை மீறல். இது இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும். சுகாதாரத்துறையின் வாய்மொழி உத்தரவு உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது. ஏழை எளிய மக்களிடம் நற்பெயர் பெற்று உள்ள மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் மாவட்ட சுகாதாரத்துறை ஈடுபடுவது சரியான செயலாகும். இதனை விடுத்து சுகாதாரத் துறை மனித உரிமை மீறலை தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் வட்டார வளமையம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி திருப்பத்தூர் ஆர்.சி.பாத்திமா பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு வட்டார கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார்.

    கூடுதல் வட்டாரக்கல்வி அலுவலர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனியப்பன் விழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கு கொண்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பங்கு பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    மேலும் தேநீர், மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்லக்கண்ணு அனைவரையும் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் பிரியா, மார்‌ஷல், பிரகாஷ் மற்றும் ஆசிரியப் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.
    தேவகோட்டையில் பள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடப்பட்டது தொடர்பாக 7 மாணவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
    சிவகங்கை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதற்கான வினாத்தாள்கள் முன்னதாகவே அனுப்பி வைக்கப்பட்டன.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தேவகோட்டை தாலுகா முழுவதிலும் உள்ள 26 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வுக்கு உரிய வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டு, ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டது. இந்த நிலையில் அந்த அறை கதவை உடைத்து, பல்வேறு பாடங்களுக்குரிய மொத்தம் 30 வினாத்தாள்கள் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக 7 மாணவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் அந்த மேல் நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள். அவர்கள் அனைவரும் தேவகோட்டை போலீஸ்நிலையம் கொண்டு சென்று விசாரிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் சில அதிர்ச்சி தகவல்களை கூறினர்.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    சம்பவத்தன்று இரவில் பள்ளிக்கூடத்தின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து, அங்கிருந்த குழாய் வழியாக ஏறி அலுவலகத்தில் நுழைந்து, அங்கு தலைமையாசிரியர் அறைக்கான சாவியை எடுத்து சென்று திறந்துள்ளனர். ஆனால் வினாத்தாள்கள் இருந்த அறையின் சாவியை தலைமையாசிரியர் கொண்டு சென்றதால், அதன் கதவை உடைத்து உள்ளே புகுந்து 10, 11, பிளஸ்-2 வகுப்புகளுக்கான வினாத்தாள்களை திருடிச் சென்றது, அந்த 7 மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

    சம்பந்தப்பட்ட பள்ளிக் கூடத்தின் இரவு நேர காவலாளி சாப்பிட சென்ற நேரத்தில் இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். அந்த மாணவர்களிடமிருந்த வினாத்தாள்களை போலீசார் கைப்பற்றினர். நேற்று அரையாண்டு தேர்வு தொடங்கியதால், வினாத்தாள் திருட்டில் தொடர்புடைய 7 மாணவர்களும் தேர்வு எழுத பள்ளி நிர்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

    தேவகோட்டை கல்வி மாவட்ட அதிகாரி சாமி சத்தியமூர்த்தி, ‘7 மாணவர்களையும், வருகிற 17-ந் தேதிக்கு பின்பு பள்ளிக்கு வருமாறும், தற்போது தேர்வு எழுத அனுமதிக்க முடியாது“ என்றும் கூறி அனுப்பி வைத்தார். சிக்கியுள்ள 7 மாணவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    யாருடைய தூண்டுதலின் பேரிலும், இந்த 7 மாணவர்களும் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் இரவு நேரத்தில் புகுந்து கதவை உடைத்து வினாத்தாள்களை திருடிச் சென்றார்களா? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    ×