search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி
    X

    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து இந்த மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனை கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அங்கும் மருத்துவ பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு 7 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதுதவிர இங்கு செவிலியர்கள், மருந்தாளுனர், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

    இங்கு பணியாற்றிய மருத்துவர்கள் தற்காலிக பணிக்காக அருகில் உள்ள வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டதால் தான் தற்போது போதிய மருத்துவர்கள் இல்லாமல் இந்த மருத்துவமனை உள்ளதாக தெரிகிறது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கூறியதாவது:-

    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால் இங்குள்ள அறிவிப்பு பலகையில் 7 மருத்துவர்கள் வரை உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினம்தோறும் இங்கு வரும் நோயாளிகளுக்கு 2 மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனால் நீண்டவரிசையில் நின்று நோயாளிகள் மருத்துவரை பார்க்க வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் ஒரு மாத காலத்தில் 50-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. ஆனால் பெண் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் தான் பிரசவங்கள் பார்க்கும் நிலை உள்ளது. அதேபோல் மருந்தாளுனர் ஒருவர் மட்டும் பணி செய்வதால் மருந்துகளை வாங்குவதற்கு பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×