என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் பாண்டித்துரை.பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகியான இவரை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில இலைஞரணி துணைத்தலைவராக அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் ஆசி பெற்று காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

    இதில் காரைக்குடி நகர தலைவர் பாண்டியன், சிவகங்கை மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், இளைஞரணி நகர தலைவர் முத்து பாண்டியராஜா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர்கள் ராஜாராமன், சுப்பையா, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் பாண்டிய நாராயணன், ஒன்றிய மகளிரணி தலைவி சீத்தாலெட்சுமி, பொதுச் செயலாளர்கள் பழனிக்குமார், மணிக்குமார், ஒன்றிய பொருளாளர் ஆவுடையப்பன், கோட்டை யூர் பேரூராட்சி கவுன்சிலர் திவ்யா பாண்டித்துரை, கானாடுகாத்தான் கவுன்சிலர் குமார், கோட்டை யூர் சோலை, குமரேசன், ரவீந்திரன், நாகஜோதி, அமைப்பு சாரா அணி மணிகண்டன், காரைக்குடி ஆட்டோ பாலா உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வேலங்குடி கார்த்திகேயன் நன்றி கூறி னார்.

    • சிறுகூடல்பட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கவியரசர் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல் பட்டியில் நாட்டார் நகரத்தார்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தினர்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை உணர்த்தும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். கீழ்ச்செவல் பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • சிவகங்கையில் சமகோண ஆசனம் செய்து மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை ஐேகார்ட்டு நீதிபதி சுரேஷ் குமார் தொடங்கி வைத்தனர்.

    திருப்பத்தூர்

    சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 415 மாணவர்கள் பங்கேற்ற சமகோண ஆசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை ஐேகார்ட்டு நீதிபதி சுரேஷ் குமார் தொடங்கி வைத்தனர்.

    கடினமான இந்த ஆசனத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக 30 நிமிடம் செய்து மாணவர்கள் சாதனை படைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 21 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவர்களுக்கு உறுதுணையாக சிவகங்கை மாவட்ட பயிற்சியாளர்கள் அரவிந்த் மாணிக்கம் ஆகியோர் இருந்தனர்.

    • காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
    • இதில் பங்கேற்ற பெண்களிடம் மொத்த செலவில் நான்கில் ஒரு பங்காக ரூ.200 வசூலிக்கப்பட்டது.

    காரைக்குடி

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாதம் தோறும் பவுர்ணமி நாளில் தமிழகத்தில உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

    அதன்படிநேற்று காரைக்குடி மீனாட்சி புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    இதில் பங்கேற்ற பெண்களிடம் மொத்த செலவில் நான்கில் ஒரு பங்காக ரூ.200 வசூலிக்கப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு 125 கிராம் பித்தளை காமாட்சி விளக்கு, எவர்சில்வர் குங்குமச்சிமிழ், கற்பூரம், ஊதுபத்தி, தீப்பெட்டி, விளக்குத்திரி, தாலிக்கயிறு, தையல் இலை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை பழம், பூக்கள், பூச்சரம், 500 கிராம் பச்சரிசி, 100 மில்லி தீப எண்ணெய், பூஜை பை, சர்க்கரை பொங்கல், பிரசாதம், சேலை, ஜாக்கெட் துணி என ரூ.800 மதிப்பிலான பொருட்கள் வழஙகப்பட்டன.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணை தலைவர் குணசேகரன், இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ், ஆய்வாளர் வினோத்கமல், கவுன்சிலர்கள் கண்ணன், பசும்பொன் மனோகரன், மைக்கேல், கலா காசிநாதன், சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை செயல் அலுவர்கள் நாராயணி, கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • மானாமதுரை அருகே மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வரவேற்பு அளித்தனர்.
    • புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சி நடந்தது.

    தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் மற்றும் உதவி ஆசிரியர்கள் வருகை தந்த பள்ளி நிர்வாக குழு தலைவர் சத்தியசீலன் செயலாளர் அன்பழகன் உறுப்பினர்கள் தங்கராசு சத்தியமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்றனர்.

    புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். 5 வயது முடிந்த குழந்தைகளை முதல் வகுப்பில் சேர பெற்றோர்கள் அழைத்து வந்தனர். அவர்களை வரவேற்று குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல்களை சரிபார்த்து முதல் வகுப்பில் 26 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள் அனை வருக்கும் தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    பள்ளியின் சார்பில் பெற்றோர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள், மாணவர்களுக்கான 23 வழிகாட்டி நெறி முறைகள் கொண்ட குறிப்பு வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை தேவி 1 முதல் 5 வகுப்பு மாண வர்கள் 150 பேருக்கு மதிய உணவு சாப்பிடும் எவர்சில்வர் தட்டுகள் வழங்கி னார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • திருப்பத்தூர் அருகே பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பாலவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் எதிரில் காமாட்சி சன்மீனா வளாகத்தில் பிள்ளையார்பட்டி சாலையில் அமைந்துள்ள பால விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி யாகசாலை பூஜைகள் வைரவன்பட்டி குருக்கள் தலைமையில் நடந்தது. கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. கோ.பூஜை, விக்னேசுவர பூஜை நடந்தது. புனித தீா்த்தம் வைக்கப்பட்ட கும்ப கலசங்களுக்கு 3 கால பூஜைகள் நடத்தப்பட்டது.

    பின்பு மகாபூா்ணாகுதி, தீபாராதனை நிறைவு பெற்று புனித நீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

    தொடா்ந்து மூலவா் பாலவிநாயகருக்கு பால், பன்னீா், இளநீா், திரவியம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்கள் தீபாராதனை நடந்தன. சிறப்பு பூஜைகளும் நடந்தன. பாலவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

    விழா ஏற்பாடுகளை காமாட்சி சன்மீனா நாக ராஜன் குடும்பத்தினர் செய்திருந்தனா். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    • சிவகங்கையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டினார்.

    சிவகங்கை

    சிவகங்கை ராணி ரங்கநாச்சியார் பஸ் நிலையத்தில், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். மேலும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டினார்.

    பின்னர் கலெக்டர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிடவும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கல்வி கற்பதனை உறுதி செய்திடவும், அவர்களின் பாதுகாப்பு, எதிர்காலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைளை தொழிலாளர் துறையின் மூலம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில், 14 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர்கள் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவற்றில் பணியில் அமர்த்துவதை தடுத்து அவர்கள் கல்வி கற்றிடவும், 14 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர் அபாயகரமான செங்கல்சூளை, கல்குவாரி, பட்டாசு தொழில் போன்ற தொழில்களில் பணியமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்பு குழுவினர்கள் தொடர்கள ஆய்வு மேற்கொண்டு குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தால் அவர்களை மீட்டு கல்வி கற்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்திய 14 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்திய 25 கடை, நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை வருமானம் தேடித்தரும் எந்திரமாக கருதாமல் அவர்களின் எதிர்கால நலன், பாதுகாப்பு, சுதந்திரம், தனித்திறன் போன்றவற்றிற்கு மதிப்பளித்து, அவர்கள் கல்வி கற்க ஊக்கப்படுத்த வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், தொழிலாளர் நல அலுவலர் ராஜ்கு மார், நகர்மன்றத் துணை த்தலைவர் கார்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், சரவணன், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.
    • கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி சமேத திருத்தளிநாதர் சுவாமி கோவிலில் வைகாசி விசாகப்பெருந்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    10-வது நாளான நேற்று தெப்பத்திருவிழா விமரிசையாக நடந்தது. மழை இல்லாததால் தெப்பத்தில் போதுமான தண்ணீர் இல்லாததாலும், கொரோனா காரணமாகவும் கடந்த 2 ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    இந்தாண்டு பெய்த கனமழையால், சீதளி கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதையொட்டி, தெப்பத்திருவிழா நேற்று இரவு நடந்தது. கோவிலில் இருந்து சுவாமி தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனைகள் காட்டப்பட்டது.

    பின்னர் ஓம் நமச்சிவாயா, ஓம் சக்தி கோஷங்கள் முழங்க தெப்பத்திற்கு சுவாமிகள் கொண்டுவரப்பட்டு சோமஸ்கந்தர், பிரியாவிடை அம்மன், சிவகாமி அம்பாள் ஆகியோர் இணைந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்பு தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்தனர். அப்போது வான வேடிக்கைகளும் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.

    விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு தெப்பத் திருவிழாவை தொடங்கி வைத்தார். விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • பெரியநாச்சி அம்மன்கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் தனிசன்னதியில் வைகாசி விசாக விழா நடந்தது,
    • 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன்கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் தனிசன்னதியில் வைகாசி விசாகவிழா நடந்தது. இதில் 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை, அன்னதானமும் மாலையில் கோவிலில் உள்ள காசிவிஸ்வநாதர்-காசிநந்திக்கு பிரதோஷ வழிபாடு, பூஜைகள் நடந்தன.

    ஏராளமான பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதேபோல் தாயமங்கலம் ரோட்டில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலிலும், இடைக்காட்டூர் பாலமுருகன், வைகைஆற்றுகரையில் உள்ள சிருங்கேரி சங்கரமடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    • காரைக்குடியில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தமிழரசி எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
    • அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் காரைக்குடி அருகே விபத்தில் சிக்கினர். இதில் பூச்சியனேந்தல் கிராமத்தைசேர்ந்த 4 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்து காரைக்குடி, மதுரை, சிவகங்கை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதை அறிந்த மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

    மேலும் அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ. காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சந்தித்து ஆறுதல்கூறினார். மேலும் பூச்சி யனேந்தல் கிராமம், இந்திராநகர் பகுதிகளுக்குசென்று விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.

    அப்போது இளையான்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்- முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், கண்ண மங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் தமிழரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மானாமதுரையில் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை சிப்காட் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முகமது தாரிக் மற்றும் காவலர்கள் சுந்தர், ரமேஷ் ஆகியோர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருச்சுழியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திகேயன், ஜெயவீரபாண்டியன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தப்பியோடிய மகேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைதான இருவரிடமும் மதுவிலக்கு தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பாண்டி யன், தலைமை காவலர் மலையரசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தேவகோட்டை அருகே உள்ள எழுவங்கோட்டை கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத விஸ்வநாதசுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் வைகாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவில் தேரோட்டம்நடந்தது. முன்னதாக கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி யானை, குதிரை, காளை, மயில் வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் மற்றும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடை பெற்றது.

    கோவிலை சுற்றி 4 வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. தேர் நிலையை அடைந்ததும் மாம்பழம், வாழைப்பழங்களை சூறை விட்டனர். அதனை பக்தர்கள் பிடித்து எடுத்து சென்றனர்.

    இதில் எழுவன்கோட்டையை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களான தென்னிலை நாட்டைச் சேர்ந்த ஏராளமானவர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    ×