என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • தேவகோட்டையில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உஞ்சனை அரசு ஆதி திராவிடர் நல தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி அருகருகே உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர்.

    அது படிப்படியாக சரிந்து கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளியில் 13 மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியில் 9 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் உள்ளனர்.

    பள்ளிகள் மூடும் நிலையில் இருந்தததால் ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முயன்று வருகின்றனர். மேலும் உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமி 6 முதல் 10-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவச மாக ஸ்மார்ட் போன், டேப் தருவதாக அறிவித்துள்ளார்.

    அதேபோல் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் தருவதாக தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியர் லாசர் அறிவித்துள்ளார். மேலும் மங்கலம் என்ற கிராமத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாண வர்களுக்கு ஆட்டோ வாடகையும் ஆசிரியர்களே வழங்குகின்றனர். உயர்நிலைப்பள்ளியில் இணையத்துடன் கணினி வசதி, புரெஜெக்டர் போன்றவற்றையும் ஏற்படுத்தி உள்ளனர்.

    ஆசிரியர்கள் போட்டி போட்டு இலவசங்களை அறிவித்து வருவதால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளியில் சேரும் மாணவர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்மனச்செம்மல் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் கிராமமக்கள் மாலை அணிவித்து வர வேற்கின்றனர். தற்போது இரு பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை 30-ஐ கடந்துள்ளது. மேலும் எண்ணிக்கை உயரும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • மின்சாரம் தாக்கி பலியான ஊழியருக்கு நிதி உதவி-அரசு வேலை வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டனர்.

    சிவகங்கை

    தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியை சேர்ந்த வர் வினோத்குமார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கேங் மேனாக கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்தார். வினோத்குமாருக்கு திருமணமாகி மனைவியும், 34 நாட்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளது.

    நேற்று காலை வினோத்குமார் சிலை யான் ஊரணி கிராமத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்து வக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் வினோத்குமார் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடம் வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்த வினோத்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிங்கம்புணரியில் உள்ள ஆர். 75 திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செய்திருந்தது.

    சிங்கம்புணரி

    கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை சிங்கம்புணரி, கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    சிங்கம்புணரி தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை கழகத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஆர்- 75 திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகப் பகுதியில் சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி கூட்டம் நடத்தப் பட்டது.

    கூட்டத்திற்கு வந்த அனைவரையும் திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பொதுமேலாளர் குமரகுருபரன் வரவேற்றார். சங்கத்தின் துணைத் தலைவர் இந்தியன் செந்தில்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    பயிற்சியாளர் சோமசுந்தரம் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். சிவகங்கை கூட்டுறவு மேளாண்மை பயிற்சி கழகத்தில் படிக்கும் சுமார் 60 மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர்களுக்கான 10 மாதம் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் நகை மதிப்பீட்டாளர் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

    மாணவ-மாணவிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த செயல்விளக்க முறைகள் மற்றும் பயிற்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் சிவகங்கை தென்னை உற்பத்தியாளர் கம்பெனியை பார்வையிட்டனர். கம்பெனி இயக்குனர் மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிங்கம்புணரியில் உள்ள ஆர். 75 திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செய்திருந்தது.

    • நில உரிமையாளருக்கு தெரியாமல் மணல் கடத்துவதாக கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
    • நடவடிக்கை எடுக்காத நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அயன்குறிச்சியை சேர்ந்தவர் முனியசாமி. விவசாயி. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. உடல் நலக் குறைவு காரணமாக முனியசாமி மானாமதுரையில் உள்ள மகன் வீட்டில் தங்கியுள்ளார்.

    சில வாரங்களுக்கு முன்பு தனது நிலத்தை பார்க்க சென்றபோது அவருக்கு தெரியாமல் 10 அடி ஆழத்திற்கு நிலத்தைத் தோண்டி மர்ம நபர்கள் மணல் அள்ளியது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த முனியசாமி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புகார் அனுப்பினார். அதில் நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

    • குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்; உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    • உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையம் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகங்கை டவுன் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது மாதவன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட 50 பாக்கெட் குட்கா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அதனை பறிமுதல் செய்ததுடன் உணவு பாதுகாப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    மேலும் கடை உரிமையாளர் மாதவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் அருகில் இருந்த மலைச்சாமி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் 5 பாக்கெட் குட்கா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

    அவற்றையும் பறிமுதல் செய்து உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • மறைந்த நகைச்சுவை நடிகரின் பிறந்தநாள் கொண்டாடினர்.
    • பொதுமக்கள் புகைப்படங்களை பார்வையிட்டு சென்றனர்.

    சிவகங்கை

    தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகர் ஒரு விரல் கிருஷ்ணராவ். வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, சின்னத்தம்பி, காலம் மாறி போச்சு உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இவருக்கு 3 மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்கள் இறந்த நிலையில் ராஜேந்திர ராவ் என்ற மகன் மட்டும் சிவகங்கை இந்திரா நகரில் வசித்து வருகிறார். தந்தையின் நினைவாக இவர் ஆண்டுதோறும் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள சமுதாய கூடத்தில் நடிகர் ஒரு விரல் கிருஷ்ணராவின் வாழ்க்கை குறித்த புகைப்படங்களை பொது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தி இருந்தார்.

    அந்த படத்திற்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மலர் தூவி கண்காட்சியை திறந்துவைத்தார். பொதுமக்கள் புகைப்படங்களை பார்வையிட்டு சென்றனர்.

    • கால்பிரவு ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தலைமையில் நடைபெற்றது.
    • அனைத்து மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கால்பிரவு ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மானா

    மதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தலைமையில் நடைபெற்றது .இதில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, இலவச வேளாண் பொருட்கள் மற்றும் அனைத்து மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

    இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி. முருகேசன், ஒன்றியதலைவர்லதா, ஒன்றியகவுன்சிலர்கள். ராதா, அண்ணாதுரை, ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, தாசில்தார் தமிழரசன் மற்றும் அனைத்து துறைஅரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • 25-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தில் வராவிட்டால் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.
    • தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற முடியும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வுகள் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 4,160 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வு எழுதுவதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பில் இருப்பார். மேலும் 20 பேருக்கு ஒரு போலீஸ்காரர் கண்காணிப்பாளராக இருப்பார்.தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டும் கொண்டு வரவேண்டும். தேர்வு நடைபெறும் இடத்திற்கு 8.30 மணிக்கு வர வேண்டும். 9.50 மணிக்கு மேல் யாருக்கும் தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். ஹால் டிக்கெட்டில் தவறுகள் ஏதும் இருந்தால் பதட்டப்படாமல் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தபோது கொடுத்த புகைப்படத்துடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் போதும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் வழக்கமாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு பொது அறிவு தேர்வுக்கு 70 மதிப்பெண்ணும், உடல் தகுதி தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

    இந்த முறை புதிதாக இந்த மதிப்பெண் தவிர தமிழ் தகுதித் தேர்வு தனியாக நடத்தப்படும்.இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்துகொள்ள தகுதி உடையோர் ஆவார்கள். இதன்படி 25-ந்் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுஅறிவுத் தேர்வும், மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெறும்.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழ் தகுதி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணி நடந்தது.
    • கலெக்டர் மணிவண்ணன் தலைமையில், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியினை சரிபார்த்து, பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடந்தது.

    கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன.

    இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒன்றான வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியினை சரிபார்த்து பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடடுள்ளது.

    அதனடிப்படையில், 1,288 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியும், 17 வாக்குப்பதிவு எந்திரங்களும், 49 கட்டுப்பாட்டுக்கருவிகள் என மொத்தம் 1,354 எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த பணிகள் சிவகங்கை வட்டாட்சியார் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்வில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர்சுகிதா, வட்டாட்சியர்கள் தங்கமணி, ராஜா உட்பட அரசியல் கட்சிப்பிரமுகர்கள் கலந்து கொண்டனா்.

    • 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியங்கா (26) இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று பிரியங்காவின் மாமனார் சேதுபாண்டியன் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார். அப்போது சிவ மணிகண்டன் அதனை எடுத்து வைக்கும்படி மனைவியிடம் கூறியுள்ளார்.

    ஆனால் அவர் உடனடியாக காய்கறிகளை எடுத்து வைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவமணிகண்டன் மனைவியை கண்டித்துள்ளார்.

    இதை தொடர்ந்து மனமுடைந்த நிலையில் பிரியங்கா வீட்டின் மாடிக்கு சென்று சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவ மணிகண்டன் இதுபற்றி எஸ்வி.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியங்காவின் உடல மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரியங்காவிற்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆன நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பிரியங்கா தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தொடர்பாக சிங்கம்புணரிபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 23 கஞ்சா வழக்குகளும், 86 குட்கா வழக்குகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிவகங்கை:

    தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் அடிப்படையில் ஒரே நாளில் காரைக்குடியில் உள்ள கடைகளிலும் சிவகங்கை மற்றும் தேவகோட்டை கடைகளிலும் திருப்பத்தூர் பகுதியில் ஒரு கடையிலும் சேர்த்து மாவட்டத்தில் 18 கடைகளில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் தேவகோட்டையில் ஒரு கடையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    இதேபோல சிவகங்கை பஸ் நிலைய பகுதியில் ஒரு கடையை உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி பூட்டி சீல் வைத்தார்.

    இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 23 கஞ்சா வழக்குகளும், 86 குட்கா வழக்குகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில் 139 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே ஒரு கிடங்கு பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 30 பேரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு உள்ளன. இதுபோல் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    போதை பொருட்கள் விற்பனை மூலம் அவர்கள் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அத்துடன் அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் அத்துடன் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலாற்றின் குறுக்கே ரூ. 7 கோடி மதிப்பில் அணைக்கட்டு அமைக்கும் திட்டத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • நீர் மட்டம் உயர்ந்து விவசாயப்பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மாதவராயன்பட்டி கிராமம் அருகே ரூ. 7 கோடி மதிப்பில் அணைக்கட்டு அமைத்து கோட்டையிருப்பு மற்றும் நாட்டார்மங்கலம் கண்மாய்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் நடைபெறும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கார்த்திகேயன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முக வடிவேல், உதவி செயற்பொறியாளர்கள் பஞ்சவர்ணம், சங்கர், ஊராட்சி மன்றத்தலைவர்கள் திலகவதி பாண்டியன், சத்தியகலா, சுசிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறும்போது, இந்த திட்டத்தின் மூலம் நாட்டார்மங்கலம், கோட்டையிருப்பு, மாதவராயன்பட்டி, கீழ்நிலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இந்தப்பகுதியில் நீர் மட்டம் உயர்ந்து விவசாயப்பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றார்.

    ×