என் மலர்
சேலம்
- அஸ்தம்பட்டி கங்கா நகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 32). இவர் சமூக இணையதளமான டெலிகிராம் செல்போனில் பயன்படுத்தி வருகிறார்.
- ஜாபர் தனது வங்கி கணக்கு மூலமாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை அனுப்பினார்.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி கங்கா நகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 32). இவர் சமூக இணையதளமான டெலிகிராம் செல்போனில் பயன்படுத்தி வருகிறார். இதில் கடந்த 4-ந்தேதி ஒரு விளம்பர லிங்க் வந்தது. அதில் உங்களுக்கு பகுதி நேரம் வேலை வழங்கப்படும். அதற்கு முன்பு சில பதிவுகளை நிரப்பி கொடுக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு திருப்திகரமான சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த கவர்ச்சிகர அறிவிப்பை நம்பி லிங்கை கிளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து கொடுத்தார். இதையடுத்து அவரிடம் உங்களுக்கு வேலை வேண்டுமானால் பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. மேலும் அதற்கான லிங்கும் ஜாபரின் செல்போனுக்கு டெலிகிராம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஜாபர் தனது வங்கி கணக்கு மூலமாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை அனுப்பினார். இதையடுத்து அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. தான் அனுப்பிய பணமும் கிடைக்கவில்லை.
தான் ஏமாற்றம் அடைந்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்த ஜாபர் இது குறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சைபர்கிைரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள், வாகனப் பதிவு எண் வழங்குதல், புதிய வாகனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தலைவாசல் வட்டத்திற்கு உட்பட்ட காமக்காபாளையம் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் மஞ்சினி ஓடையின் குறுக்கே ரூ.22.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலப் பணியினை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு இருக்கிறதா? என்பது குறித்தும், சிகிச்சைகள் அளிக்கும் முறை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தலைவாசல் தாசில்தார் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடு களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள், வாகனப் பதிவு எண் வழங்குதல், புதிய வாகனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வார்டு எண் 15-ல் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்காப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து வாழப்பாடி வட்டம் காட்டுவேப்பிலை ப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆழ்துளைக் கிணறுகள், சொட்டு நீர் பாசனம், பழ சாகுபடிகள் மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காளாண் வளர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளார்கள்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (பொறுப்பு) யோகானந்த் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
- சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
- உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மணியனூர் காந்தி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை சிலர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இது குறித்த தகவலின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்து கடத்தலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (60) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பலகாரம், தின்பண்டங்கள் விற்கும் கடைகளுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பராமரிப்பு பணிகள் நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை ஆகிய 4 நாட்களுக்கு நடைபெறுகின்றது.
- மாநகராட்சிப் பகுதிகளில் இந்த 4 நாட்களும் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும்.
சேலம்:
சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை ஆகிய 4 நாட்களுக்கு நடைபெறுகின்றது.
அதன்படி மாநகராட்சிப் பகுதிகளில் இந்த 4 நாட்களும் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- ஓமலூர் வட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- சேலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கு 5.24 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 50.70 மில்லியன் லிட்டர் அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் ஓமலூர் வட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-
முதல்-அமைச்சர் கடந்த 11.6.2023 அன்று திறந்து வைத்த எடப்பாடி வட்டம் கோரணம்பட்டியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இடைநிலை நீருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிடப்பட்டது.
இந்நீருந்து நிலையத்திலிருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை, ஆட்டை யாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கணச்சாலை பேரூராட்சிகள் மற்றும் வீரபாண்டி, சேலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கு 5.24 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 50.70 மில்லியன் லிட்டர் அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இத்திட்டத்தின் கீழ் இடங்கணச்சாலை நகராட்சி, இளம்பிள்ளை, ஆட்டை யாம்பட்டி, பன மரத்துப்பட்டி, மல்லூர் பேரூராட்சிகளில் 620 குடியிருப்புகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி களில் சோதனை ஓட்டம் மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 1.11.2023-க்குள் 778 குடியிருப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவுள்ளது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 11 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள், 4,475 கிராம குடியிருப்புகள் என 29.21 லட்சம் மக்களுக்கு நாள்தோறும் 180 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ரூ.347.47 கோடி மதிப்பீட்டில் ஊரக பகுதிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை 40 லிட்டரிலிருந்து 55 லிட்டராக உயர்த்தி வழங்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவால் 5 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ராசிபுரம்- எடப்பாடி கூட்டுக் குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.9.48 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளது. கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள காவேரி புரம் மற்றும் 141 குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.89.87 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
மேலும், இருப்பாளியில் 236 குடியிருப்புகள் மற்றும் 1,237 வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.119.62 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. சங்ககிரி, தேவூர் பேரூராட்சிகள் மற்றும் சங்ககிரி ஒன்றியத்தின் 248 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.42.87 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
அதேபோன்று காடை யாம்பட்டி மற்றும் 3 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 136 குடியிருப்புகள் மற்றும் 604 வழியோர குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்ட சீரமைப்பு பணிகளுக்கு ரூ.85.63 கோடி மதிப்பீட்டில் தற்பொழுது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சின்னப்பம்பட்டியில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப்பணிகள் குறித்தும், அப்பகுதியில் பொது மக்களை சந்தித்து கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெற்ற மகளிர் மற்றும் மேல்முறையீடு செய்துள்ளவர்களின் விபரம் குறித்தும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது எடப்பாடி தாசில்தார் (பொறுப்பு) வாசுகி, ஓமலூர் தாசில்தார்புருஷோத்தமன், சங்ககிரி தாசில்தார் அறிவுடை நம்பி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு
- ரம்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் தர்மபுரி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாைதயன். இவரது மகள் ரம்யா (30),
இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூரை சேர்ந்த சீனிவாச பெருமாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மாதையன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ரம்யா தனது கணவருடன் ஓமலூரை அடுத்த காமாண்டபட்டியில் வசித்து வந்தார். மேலும் ரம்யா பெற்றோர் வீட்டிற்கு வந்து தாய் ராணியிடம் அடிக்கடி பணம் பெற்று செல்வது வழக்கம், அதன்படி கடந்த 10-ந் தேதி பணம் பெற்று சென்றார்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மேலும் அவரது மாமியார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரம்யா வீட்டில் இருந்த தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ரம்யாவின் தந்தை மாதையன் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உ ள்ளார். அதன் பேரில் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு
- வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி
வாழப்பாடி:
பள்ளி குழந்தைகளிடையே சரிவிகித ஊட்டச்சத்து உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா தேவி, மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மாணவிகளிடையே போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து சரிவிகித சத்துணவு, சுகாதாரம் மற்றும் ரத்த சோகை தவிர்ப்பு இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர். நிறைவாக, அங்கன்வாடி பணியாளர் வசந்தி நன்றி கூறினார்.
- மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
- சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 5 மணியளவில் சேலம் மாநகரில் திடீரென மழை பெய்தது.
அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை , ஜங்சன். கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியே சாலைகளில் சென்றனர்.
ஏற்காட்டில் நேற்று மாலை 5 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இன்று காலையும் குளிர் நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 5.6 மி.மீ. மழையும், ஓமலூரில் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 7.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழையை தொடர்ந்து நேற்றிரவு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
- பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- மேட்டூர் அணைக்கு ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா மாவட்டத்தில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
இந்த ஆண்டு குறிப்பிட்ட நாளில், அதாவது ஜூன் 12-ந் தேதியே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத் தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வந்தது.
அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந்தேதி 30.99 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 7.88 டி.எம்.சி.யாக இருந்தது.
இதனால் டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடந்த 10-ந்தேதி காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு பெயரளவிலேயே அம்மாநில அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
இதனிடையே பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,528 கன அடியாக இருந்த நிலையில் நேற்று காலையில் 9,345 கன அடியாக அதிகரித்தது.
மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து மாலை முதல் 18,978 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்தது.
இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து அணைக்கு 15,606 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 10.11 டி.எம்.சி. ஆக உள்ளது.
அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
கடந்த 10-ந்தேதி 30.99 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 35.98 அடியாக உயர்ந்தது. 4 நாட்களில் 4.99 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
- அமாவாசையை முன்னிட்டு பல்வேறு வழித் தடங்களில் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
150 சிறப்பு பஸ்கள்
இந்த நிலையில் வார இறுதி நாளான நாளை மறுநாள் (14-ந்தேதி) மற்றும் அமாவாசையை முன்னிட்டு பல்வேறு வழித் தடங்களில் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.
மேலும் முன்பதிவு பஸ்கள் பெங்களுருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.
சித்தர்கோவில்
அமாவாசையை முன்னிட்டு சேலம் நகர பஸ் நிலையத்தில் இருந்து சித்தர்கோவிலுக்கும், சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் மற்றும் தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து மாதேஷ்வரன்மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டும் போட்டிகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
- இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீட்டர், 15, 17 வயதிற்குட்பட்ட வர்கள் 20 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டும் போட்டிகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி யில் பங்கேற்கும் 13 வயது, 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 1.1.2011, 1.1.2009 மற்றும் 1.1.2007-க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீட்டர், 15, 17 வயதிற்குட்பட்ட வர்கள் 20 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.
அதேபோல் 13 வயது, 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் 1.1.2011, 1.1.2009 மற்றும் 1.1.2007- க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 10 கி.மீ. 15,17 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல்ப ரிசாக ரூ.5,000, 2-ம் பரிசாக ரூ.3,000, 3-ம் பரிசாக ரூ.2,000 மற்றும் 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வழங்கப்படும்.
போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள் தலைமை யாசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றுடன் போட்டி நடக்கும் தேதிக்கு முன்னரோ அல்லது போட்டி நடக்கும் அன்றோ பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகல கிராங்க் பொருத்தப்பட்டி ருத்தல் கூடாது.
சைக்கிள் பந்தயத்தில் ஏதேனும் தனிப்பட்ட பொது இழப்பு ஏற்படின் பங்குபெறும் மாணவ, மாணவியரே பொறுப்பாவர். போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அலுவலக நேரத்தில் அணுகி பெயரினைப் பதிவு செய்து கொள்ளலாம்.
13 வயதிற்குட்பட்ட மாணவிகள் 10 கி.மீ. தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்ட ரங்கத்தில் தொடங்கி கோரிமேடு சென்று மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்ட ரங்கத்தில் நிறைவடைகிறது. 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 15 கி.மீ. தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் தொடங்கி ஏற்காடு அடிவாரம் வழியாக மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- கார்த்திகேயன் (21). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
- சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
சேலம்:
சேலம் காடையாம்பட்டி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்குமார். இவரது மகன் கார்த்திகேயன் (21). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயம் அடைந்த அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






