என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "180 மில்லியன் லிட்டர்"

    • ஓமலூர் வட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • சேலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கு 5.24 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 50.70 மில்லியன் லிட்டர் அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் ஓமலூர் வட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் கடந்த 11.6.2023 அன்று திறந்து வைத்த எடப்பாடி வட்டம் கோரணம்பட்டியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இடைநிலை நீருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிடப்பட்டது.

    இந்நீருந்து நிலையத்திலிருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை, ஆட்டை யாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கணச்சாலை பேரூராட்சிகள் மற்றும் வீரபாண்டி, சேலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கு 5.24 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 50.70 மில்லியன் லிட்டர் அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இத்திட்டத்தின் கீழ் இடங்கணச்சாலை நகராட்சி, இளம்பிள்ளை, ஆட்டை யாம்பட்டி, பன மரத்துப்பட்டி, மல்லூர் பேரூராட்சிகளில் 620 குடியிருப்புகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி களில் சோதனை ஓட்டம் மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 1.11.2023-க்குள் 778 குடியிருப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவுள்ளது.

    சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 11 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள், 4,475 கிராம குடியிருப்புகள் என 29.21 லட்சம் மக்களுக்கு நாள்தோறும் 180 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக ரூ.347.47 கோடி மதிப்பீட்டில் ஊரக பகுதிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை 40 லிட்டரிலிருந்து 55 லிட்டராக உயர்த்தி வழங்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவால் 5 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் ராசிபுரம்- எடப்பாடி கூட்டுக் குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.9.48 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளது. கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள காவேரி புரம் மற்றும் 141 குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.89.87 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    மேலும், இருப்பாளியில் 236 குடியிருப்புகள் மற்றும் 1,237 வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.119.62 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. சங்ககிரி, தேவூர் பேரூராட்சிகள் மற்றும் சங்ககிரி ஒன்றியத்தின் 248 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.42.87 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    அதேபோன்று காடை யாம்பட்டி மற்றும் 3 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 136 குடியிருப்புகள் மற்றும் 604 வழியோர குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்ட சீரமைப்பு பணிகளுக்கு ரூ.85.63 கோடி மதிப்பீட்டில் தற்பொழுது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சின்னப்பம்பட்டியில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப்பணிகள் குறித்தும், அப்பகுதியில் பொது மக்களை சந்தித்து கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெற்ற மகளிர் மற்றும் மேல்முறையீடு செய்துள்ளவர்களின் விபரம் குறித்தும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது எடப்பாடி தாசில்தார் (பொறுப்பு) வாசுகி, ஓமலூர் தாசில்தார்புருஷோத்தமன், சங்ககிரி தாசில்தார் அறிவுடை நம்பி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

    ×