என் மலர்tooltip icon

    சேலம்

    • ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்ததையொட்டி வ.உ.சி பூ மார்கெட் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மாநகராட்சி வணிக வளாகம் முன்பு கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
    • இதனால் வணிக வளாகத்தில் கடை எடுத்து தொழில் நடத்தி வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் போஸ் மைதானத்தில் தற்காலிக வ.உ.சி. பூ மார்க்கெட் இயங்கி வந்தது. இதற்காக தற்காலிக ஷெட் போடப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது.

    தற்காலிக கடைகள்

    இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைத்ததையொட்டி வ.உ.சி பூ மார்கெட் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மாநகராட்சி வணிக வளாகம் முன்பு கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    இதற்கு பூ மார்க்கெட் வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேறு வழி இல்லாமல் அங்கேயே கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வணிக வளாகத்தில் கடை எடுத்து தொழில் நடத்தி வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வியாபாரம் பாதிப்பு

    காலை மற்றும் மாலை நேரங்களில் வளாகத்திற்குள் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பூக்கடைகளும் இருப்பதால் வாடிக்கையாளர் தங்கள் கடைக்கு வருவது பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் கடை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உடனடியாக பூக்கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தர்ணா போராட்டம்

    ஆனால் சேலம் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் வணிக வளாக வியாபாரிகள் கடையை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து வணிக வளாக வியாபாரிகள் இன்று வணிக வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலம் மாநகராட்சி வணிக வளாகப் பகுதியில் பூக்கடைகள் வைக்க அனுமதி அளித்ததால் தங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

    வாடிக்கையாளர் குறைவு

    இது குறித்து சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. மாநகராட்சி வணிக வளாகமும், பூ மார்க்கெட்டும் ஒரு இடத்தில் செயல்படுவதால் வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வணிக வளாகத்தில் உள்ள பூக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் வணிக வளாகத்தை காலி செய்யப் போவதாகவும் அறிவித்தனர்.

    பேச்சுவார்த்தை

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பூ மார்க்கெடடை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுவரையில் பொறுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சில் உடன்படாத வியாபாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சங்ககிரி அருகே துளுக்கன் காட்டை சேர்ந்த வாலிபர் தனியார் நூல் மில்லில் கூலி வேலை செய்து வந்தபோது சங்ககிரியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்து.
    • கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி சங்ககிரி- ஈரோடு பிரிவு சாலையில் உள்ள விநாயகர் கோவில் வைத்து பெற்றோர்க ளுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே துளுக்கன் காட்டை சேர்ந்த வாலிபர் தனியார் நூல் மில்லில் கூலி வேலை செய்து வந்தபோது சங்ககிரியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்து.

    காதல்

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய கொள்ள முடிவு செய்து கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி சங்ககிரி- ஈரோடு பிரிவு சாலையில் உள்ள விநாயகர் கோவில் வைத்து பெற்றோர்க ளுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

    நாளடை வில் இது பற்றி இரு வீட்டு பெற்றோர்க ளுக்கும் தெரிந்ததை அடுத்து ஏற்றுக் கொள்ளாத தால் வாலிபர் சிறுமியை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கர்ப்பமான சிறுமி கடந்த 9-ந் தேதி பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    போக்சோ பாய்ந்தது

    இது குறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் வளர்மதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி ஆகியோர் குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 8.30 மணியளவில் கண்ணன் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (32). கார்பென்டராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று காலை வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 8.30 மணியளவில் கண்ணன் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த கண்ணன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கண்ணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      வாழப்பாடி:

      மத்திய அரசின் ஆயுஷ்மான் பவ- சேவா பக்வாடா திட்டத்தின் கீழ், ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ முகாம், வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூரில் நடைபெற்றது.

      இம்முகாமில், வாழப்பாடி அரசு சித்த மருத்துவர் செந்தில்குமார், தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான ஆயுஷ் மருத்துவ முறைகள் குறித்து விளக்கினார். யோகா பயிற்சியாளர் அருள் மணிகண்டன், பொதுமக்க ளுக்கு எளிய முறை யோகா பயிற்சி அளித்தார்.

      இந்த முகாமில், ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு கபசுர குடிநீர், உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன.

        சேலம்:

        சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.

        பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

        உதான் -5 திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. வருகிற 16-ந்தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு-சேலம் - கொச்சின் வழித்தடத்தில் விமா னம் இயக்கப்பட உள்ளது. அதேபோல் கொச்சின்- சேலம்- பெங்களூரு வழித்தடத்தில் மீண்டும் விமானம் இயக்கப்படும்.

        வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும்.

        இதே போன்று இன்டிகோ நிறுவனம் சார்பில் வருகிற 29-ந் தேதி முதல் பெங்களூரு-சேலம்-ஐதராபாத் வழித்தடத்திலும், மறுமார்க்கமாக மீண்டும் ஐதராபாத்-சேலம்- பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்கப்படும். திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்தின் 4 நாட்களுக்கு இண்டிகோ விமான சேவை நடைபெறும்.

        அதே சமயம் வாரத்தின் 7 நாட்களிலும் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன் வந்துள்ளது.

        சேலம்- சென்னை விமான சேவை மீண்டும் 29-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடங்குவதால் தேவையானஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

        சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சேலத்திற்கு நாள் ஒன்றுக்கு 5 முறை விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு கடும் முயற்சிக்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இரவு நேர விமான சேவையும், சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையிலான சேவைகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

        இவ்வாறு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கூறினார்.

        இந்த பேட்டியின் போது விமான நிலைய இயக்குனர் ரமேஷ், வக்கீல்கள் லட்சுமணபெருமாள், அய்யப்பமணி, குட்டி, பனமரத்துபட்டி ராஜா, ஆலோசனை குழு உறுபினர் சிங்கால் உள்பட பலர் உடனிருந்தனர்.

        • சங்ககிரியில் வருவாய்த்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
        • சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

        சங்ககிரி:

        சங்ககிரியில் வருவாய்த்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சங்ககிரி தாசில்தார் அறிவுடைநம்பி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

        இதில் இந்திய குடிமகன் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் ஆகியவற்றின் மூலம் எந்தவிதமான தகவலாக இருப்பினும் அதனை உரிய மனு செய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

        பேரணி

        தொடர்ந்து பேரணி சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கி பவானி சாலை, புதிய எடப்பாடி சாலை வழியாக சென்று மீண்டும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் செந்தில்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் கீதா, பி.எஸ்.ஜி. கல்லுாரி மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்புமலர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

        • தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
        • ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் சேலம் மாவட்ட துணை தலைவர் ஜான் பெர்ணான்டஸ் தலைமை வகித்தார்.

        மேட்டூர்:

        மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

        ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் சேலம் மாவட்ட துணை தலைவர் ஜான் பெர்ணான்டஸ் தலைமை வகித்தார். மேட்டூர் வட்ட தலைவர் அம்மாச்சி கண்டன உரை ஆற்றினார். இதில் 100 நாள் வேலை ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும், பண்டிகை காலம் நெருங்குவதால் தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் மகாத்மா தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டம் சம்பந்தமாக மாற்றுத்திறனாளிகளுக்காக குறை கூட்டம் நடத்த வேண்டும், வீடு, கழிப்பிடம் போன்ற துறை சார்ந்த பயனுள்ள திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

        ஆர்ப்பாட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் கோபால், பவுல்ராஜ், நடராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

        • சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
        • இத்தகவலை மின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

        சேலம்:

        சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கிபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, மேற்குராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

        • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் அந்தந்த பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
        • தாரமங்கலம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு கிளை தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.

        தாரமங்கலம்:

        தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் அந்தந்த பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தாரமங்கலம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு கிளை தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மைய சங்க பொருளாளர் சேகர், கிளைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியா ளர்களை நியமிக்க கூடாது, போதுமான பணியாளர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கிளை பொருளாளர் விஸ்வ நாதன், முருகன், காளிதாஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

        • மர்மநபர் ஒருவர் தான் உணவு பாதுகாப்பு அலுவலர் எனவும், உனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததால் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்தார்.
        • நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மளிகை கடை உரிமையாளர் குமார் நைசாக போலீசாருக்கு போன் செய்ய முயற்சி செய்துள்ளார்.

        எடப்பாடி:

        சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர் செட்டிமாங்குறிச்சி அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

        சோதனை

        இந்த நிலையில் அண்மையில் குமாரின் மளிகை கடைக்கு டிப்-டாப்பாக உடை அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் தான் உணவு பாதுகாப்பு அலுவலர் எனவும், உனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததால் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்தார்.

        அப்போது அந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மளிகை கடை உரிமையாளர் குமார் நைசாக போலீசாருக்கு போன் செய்ய முயற்சி செய்துள்ளார். இதை கண்ட அந்த நபர் கடைக்குள் இருந்த குளிர்பான பாட்டிலை எடுத்து உடைத்து குமாரின் கழுத்தில் வைத்து மிரட்டி, கடையில் பணப்பெட்டியில் இருந்த ரொக்க பணம் ரூ.21 ஆயிரத்து 500 -ஐ கொள்ளை அடித்துக் கொண்டு தான் வந்த மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

        இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எடப்பாடி போலீசார் அப்பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மளிகை கடையில் கொள்ளை அடித்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

        குமாரபாளையத்தை சேர்ந்தவர்

        போலீசாரின் விசார ணையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பதும், இவர் மீது இதேபோன்று 13 -க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

        இவர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே தனது கூட்டாளியான அங்கப்பன் என்பவருடன் சேர்ந்து போலி அதிகாரியாக நடித்து பெருந்தொகையினை கொள்ளை அடித்துச் சென்ற வழக்கில் தலைறைவாக இருந்து வருவதும், அவரை போலீசார் தேடி வருவதும் தெரியவந்தது.

        கைது- ஜெயிலில் அடைப்பு

        இந்த நிலையில் தான் செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த குமாரின் மளிகை கடையில் மணிகண்டன் போலி அதிகாரியாக நடித்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

        நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

        மேலும் இது போன்ற போலி நபர்கள் அதிகாரிகள் எனக்கூறி சோதனை செய்ய முற்படும் போது சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்மாறு வியாபாரிகளை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

        • பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் மழை பெய்து வருகிறது.
        • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

        சேலம்:

        மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா பாசன பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பயன்பெறும்.

        டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்தாலும் பாசனத்தின் தேவையை கருதி போதுமான அளவு தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தது.

        அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 31 அடிக்கு கீழே சென்றது. இதனால் டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

        இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 2,688 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

        அதுபோல் பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் மழை பெய்து வருகிறது.

        இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,528 கன அடியாக வந்த நிலையில் இன்று 9,345 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்மட்டம் 33.10 அடியாகயும், நீர் இருப்பு 8.81 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

        நீர்வரத்து இதே நிலை தொடர்ச்சியாக நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

        • கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது.
        • கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

        சேலம்:

        கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 76.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 64 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

        இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 682 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2ஆயிரத்து 688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

        கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று நீர்திறப்பு 5ஆயிரத்து 598 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 2ஆயிரத்து 688 கனஅடியாக குறைக்கப்பட்டது.

        ×