என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாகவும், ஜாதி ரீதியாகவும் பேசி தொல்லை தருவதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக அந்த பேராசிரியர் மாணவிகளிடம் பேசிய ஆடியோவும் வெளியானது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலம் நூதனமாக பணம் திருடிய மர்மநபரை தேடி வருகிறார்கள்.
    • மோசடிகள் நடப்பது பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள புதுவலசை கிராமத்தை சேர்ந்தவர் ஹமீது களஞ்சியம்(வயது 32). இவர் ராமநாதபுரத்தில் ஆவண எழுத்தரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு குறுந்த தகவல் வந்தது. அதில் தங்களது வங்கி கணக்கு முடக்கப்போவதாகவும், அதை தவிர்க்க பான் கார்டு விவரங்கள் கொடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஹமீது களஞ்சியம் உடனே குறிப்பிட்ட எண்ணில் இருந்து வந்திருந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். பின்னர் குறிப்பிட்ட இணையதளத்தில் தனது வங்கி விவரம், பான்கார்டு விவரம் ஆகியவற்றை பதிவேற்றியுள்ளார். அப்போது அவர் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்துள்ளது. அதையும் பதிவேற்றிவிட்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஹமீது களஞ்சியத்தின் வங்கி கணக்கில் இருந்து 2 தவணைகளாக மொத்தம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலம் நூதனமாக பணம் திருடிய மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    எந்த ஒரு வங்கியும் வாடிக்கையாளரிடம் போனில் தகவல்களை கேட்பதில்லை வங்கி நிர்வாகங்கள் அறிவுத்துள்ளது. அவ்வாறு யாரேனும் போனில் வங்கி கணக்கு குறித்த தகவல்களை கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும், ஓ.டி.பி. எண்களை யாரிடம் பகிராமல் கவனமாக கையாளவேண்டும் எனவும் காவல்துறையும், வங்கி அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

    ஆனாலும் இது போன்ற மோசடிகள் நடப்பது பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது.

    • 1 கிலோ மீன்கள் ரூ.600 வரை விற்பனையாகிறது.
    • வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்து இருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், மாயாகுளம், முத்துப் பேட்டை, மற்றும் திருப்பா லைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, காரங் காடு, வட்டாணம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்பட 20–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை. இதனால் மீன்மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்து. மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் நகரை மீன், ஊடகம், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட் களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப் பட்டது.

    நகரை, செங்கனி, பாறை மீன்கள் 1 கிலோ ரூ.500–க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடற்கரைப் பகுதியில் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் வந்து செல்வதால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

    ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் போன்ற மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்து இருந்தது. இதனால் மீன் உணவு பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக பிப்ரவரியில் கணவாய், நண்டு அதிகமாக வலையில் சிக்கும். தற்போது வாடைக்காற்று இல்லாத நிலையிலும் மீன்கள் அதிகமாக கிடைக்காததால் நாள்தோறும் ஏமாற்றத்துடன் கரை திரும்பி வருகின்றனர். இதனால் நஷ்டமடைந்துள்ள மீனவர்கள் தங்கள் குடும்ப செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். டீசல் உட்பட படகில் வரும் சக ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து கேட்ட கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
    • ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கிணங்க முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி டி.ராஜகுமார் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் குணசேகர பாண்டியன் அமர்வு வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் வங்கியில் வாரா கடனாக நிலுவையில் இருந்த 4 வழக்குகளில் சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்து 252 வழங்க உத்தரவிடப்பட்டது. வாகன் விபத்து இழப்பீட்டு வழக்கில் 9 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு இழப்பீட்டுத்தொகையாக ரூ. 38 லட்சத்து 55 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. சிவில் வழக்குகளில் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 13 லட்சத்து 53 ஆயிரத்து 546 என அறிவிக்கப்பட்டது.

    ஒரு விவகாரத்து வழக்கு விசாரணை முடிவில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சிறு குற்ற வழக்குகளில் 21 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

    • சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து மண்டபத்தில் எழுந்தருளினர்
    • கோவில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். 2-ம் நாளான நேற்று இரவு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.

    விழாவின் 3-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடை பெற்றது. தொடர்ந்து பிரியா விடையுடன், ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

    காலை 6 மணிக்கு சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடானார்கள். முக்கிய வீதிகள் வழியாக சென்ற சுவாமி-அம்பாள் காலை 9 மணியளவில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு சுவாமி-அம்பாள் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைகிறார்கள்.

    இன்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் புறப்பாடான பின் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமலும் தீர்த்த கிணறுகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றமடைந்தனர்.

    • ராமநாதபுரத்தில் ஓட்டலில் ரூ.36 லட்சம் பொருட்கள் திருடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன், முகமது ஷரீப் சேட் இடையே கடை நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் சேக் முகம்மது மகன் முகமது அசாருதீன். இவர் தேவிபட்டினம் முகமது ஷரீப் சேட் என்பவருடன் இணைந்து ராமநாதபுரம் அரசு பஸ் டெப்போ எதிரே ஓட்டல் நடத்திவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன், முகமது ஷரீப் சேட் இடையே கடை நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் தேவிபட்டினம் பெரிய கடை தெருவை சேர்ந்த முகமது ஷரீப் சேட், வாணி இப்ராஹிம், ராமநாதபுரத்தை சேர்ந்த அசரப் அலி, ராமநாதன், ஜகுபர் பரக்கத் ஆகியோர் கடையில் இருந்த சுமார் ரூ.36 லட்சம் மதிப்புள்ள மின்சாதனங்கள், டேபிள் சேர், குளிர்சாதன பெட்டி, சமையல் பாத்திரங்கள், தளவாடப் பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    இந்த நிலையில் தனக்கு சொந்தமான பொருட்களை அபகரித்துக் கொண்டதாகவும், தனக்கு செலுத்த வேண்டிய பங்குத்தொகை ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்தை தராமல் கூட்டுச்சதி செய்ததாகவும் ராமநாதபுரம் கோர்ட்டில் அசாருதீன் வழக்கு தாக்கல் செய்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் முகமது ஷரீப் சேட், வாணி இப்ராஹிம், ராமநாதபுரத்தை சேர்ந்த அசரப் அலி, ராமநாதன், ஜகுபர் பரக்கத் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாயல்குடி அருகே காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது.
    • வட்டாரத் தலைவர் (பொறுப்பு) சிக்கல் நூருல் அமீன் நன்றி கூறினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட பொறுப்புக் குழு தலைவருமான மலேசியா பாண்டியன் தலைமை வகித்தார். அமைப்பு சாரா தொழிலாளர் மாநில பொதுச் செயலாளர் தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், கோபால் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், மாவட்ட சேவா தள தலைவர் கணேசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன், சிறுபான்மை மாநில செயலாளர் ஜெய்னுல் ஆலம், வழக்கறிஞர் சரவணா காந்தி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விக்னேசுவரன் ஆகியோர் பேசினர். வட்டாரச் செயலாளர் கனி வரவேற்றார். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறப்பு பேச்சாளர் அலிம்அல் புஹாரி சிறப்புரை ஆற்றினர்.

    கடலாடி தெற்கு வட்டாரத் தலைவர் அப்துல் சத்தார், கடலாடி மேற்கு சுரேஷ் காந்தி, நரிப்பையூர் ஞானசேகரன், முன்னாள் வட்டாரத் தலைவர் சேசு மனோகரன், சாயல்குடி நகர தலைவர் காமராஜ், மாவட்ட செயலாளர்கள் போஸ், கலைச்செல்வன், சகாயராஜ், சையது இப்ராஹிம், அமிர்தராஜ், கொக்காடி, கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டாரத் தலைவர் (பொறுப்பு) சிக்கல் நூருல் அமீன் நன்றி கூறினார்.

    • 25 ஆண்டுகளாக முடங்கிப்போன மலட்டாறு அணை திட்டம் முழுமையடைய நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 54 கிராம மக்கள் பயனடைவார்கள்.

    அபிராமம்

    மதுரை மாவட்டம் சாப்டூர் மற்றும் எழுமலை பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கவுண்ட நதி திருமங்கலம் தாலுகா மற்றும் திருச்சுழி தாலுகா வழியாக குண்டாறு என்னும் பெயரில் ராமநாதபுர மாவட்டத்தில் நுழைகிறது.

    இந்த குண்டாறு கமுதியில் ரெகுநாத காவேரி எனும் கால்வாய் வழியாக மலட்டாறு என்னும் பெயரில் கமுதி மற்றும் கடலாடி தாலுகாக்கள் வழியே பாய்ந்து முடிவில் சாயல்குடி அருகே மூக்கையூர்அருகில் கடலுடன் கலக்கிறது.

    இங்குதான் பாக்கு வெட்டி கீழவலசை மக்கள் ஆற்றினை ஒட்டிய புறம்போக்கு பகுதிகளில் பயிரிட்டும் கிணறு தோண்டி பாசனம் செய்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மலட்டாறு திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் முடங்கி உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 54 கிராம மக்கள் பயனடைவார்கள்.

    மலட்டாறு திட்ட ஆய்வுப் பணிகள் 1965-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நீர்த்தேக்க திட்டம் மூலம் பாசன வசதி நிலங்கள், பாதிப்படை யக்கூடிய நிலங்கள், மூழ்கும் அபாயம் ஏற்படக்கூடிய கிராமங்கள் ஆய்வு செய்யப்பட்டு இந்த பகுதியில் அணை ஒன்று கட்டுவதற்கு அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக கண்டறியப்பட்டு மலட்டாறு அணை கட்டும் திட்டத்திற்கு முழுவடிவம் தரப்பட்டது.இந்த அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு முறைப்படி ஒப்புதல் வழங்கியது. எனினும் மலட்டாறு அணை திட்டம் நிறைவு பெற வில்லை.

    இந்த திட்டத்திற்கான உபரி நீர்ப்போக்கி தலை மதகுகள், மணற்போக்கி மதகுகள் முதலியவை கட்டும் பகுதி, இடது மற்றும் வலதுபக்க மண் கரைகள் ஏற்படுத்தப்படும் பகுதி இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள் மேலும் சுவற்றின் கிளை வாய்க்கால்கள் தோண்டப் படும் பகுதி அனைத்திற்கும் சேர்த்து சுமார் 425 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும்.

    இத்திட்டத்திற்கான அனைத்துப் பணிகளுக்கும் 1994ம் ஆண்டு நிலவரப் படி சுமார் ரூ.17 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.

    1991-ம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு இந்த திட்டத்தினை செயல்படுத்துவதாக அறிவித்து முதல்கட்டமாக ரூ.40 லட்சம் ஒதுக்கி நிலம் கையகப்படுத்த உத்தர விட்டது.

    அன்றிலிருந்துஇன்று வரையிலும் மாறி வருகின்ற ஒவ்வொரு அரசியல் சூழ்நிலை களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தப்போவதாக ஒவ்வொரு அரசியல்வாதி யும் கூறிவருகின்றனர். ஆனால் திட்டம் செயல் படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தின் செயல் பாட்டுக்கென பரமக்குடியை தலைமையகமாகக் கொண்டு பொது கோட்ட அலுவலகம் கட்ட 4 ஆண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் செயலாக்கத்திலுள்ள மெத்தனம் காரணமாக இக்கோட்டமானது சுற்றுச்சூழல் குழுமக் கோட்டம் என மாற்றப் ப ட்டது.

    இந்த திட்டத்திற்காக ஒரேயொரு பிரிவு அலுவலரைக் கொண்டு கமுதியில் உபகோட்டம் ஒன்று இருந்து வருகிறது. முதலில் இந்த திட்டத்தை அ.தி.மு.க . அரசு தொடங்கு வதாக அறிவி த்ததால் இந்த திட்டத்தினை செயல் படுத்துவதில் அதற்கு பின்பு வந்த தி.மு.க. அரசு ஆர்வம் காட்டவில்லை.

    இந்த திட்டம் பற்றி அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்தால் இந்த பகுதி விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மலட்டாறு அணைக்கட்டு திட்டம் செயல் படுத்தப் பட்டால் இந்த பகுதியில் விவசாயம் செழிக்கும். எனவே விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

    சமூக ஆர்வலர் அருணாசலம் கூறுகையில், பருவமழை பெய்யாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில் மலட்டாறு அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டால் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி. அபிராமம் உள்ளிட்ட பகுதிகள் பயனடையும் என்றார்.

    விவசாய சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய பகுதி. முழுக்க முழுக்க விவசாயமே முழுநேர தொழிலாக உள்ளது. கமுதி, கடலாடி. முதுகுளத்தூர், திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதி களும் மலட்டாறு திட்டம் செயல்படுத்தப்பட்டால் செழிக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் குடிநீர் ஆதாரம் பெருகும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.

    • ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கட்டிட டெண்டர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்புத் திட்டம் 2022-23-ன் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் மிகவும் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்தி புதிய பள்ளிக் கட்டிடங்களை கட்டுவதற்கும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்ப டையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 77 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 78 புதிய பள்ளி கட்டிடங்கள், 18 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கோடைகால விடுமுறை முடிந்து ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் துவங்கும் போது புதிய கட்டிடத்தில் இயங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி 28.1.2022 அன்று வழங்கப்பட்டது. நல்லிருக்கை மற்றும் கொம்பூதி கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட பின்னரே பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நல்லிருக்கை மற்றும் கொம்பூதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை இடிப்ப தற்கு கடந்த 8-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

    ஆனால் அதற்கு முன்பே இந்தப் பள்ளிகளில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்தப் பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்காக வழங்கிய ஒப்பந்தப்புள்ளி நிறுத்தம் செய்யப்பட்டு, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தொடர்புடைய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சிைய பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
    • முதல்- அமைச்சரால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அமைக்க ள்ள முதல்-அமைச்சரின் முத்தான திட்டங்கள் குறித்த அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

    இதனை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று திறந்து வைத்தார், ராம நாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதல்-அமைச்சர் முத்தான திட்டங்கள் குறித்த ''ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த புகைப்பட கண்காட்சியில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் முதல்- அமைச்சரால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

    மேலும் முதல்-அமைச்சர் தலைவர்களுடன் சந்தித்த புகைப்படங்கள், தொழில் முதலீட்டாளர்களுடன் சந்தித்த புகைப்படங்கள், தொழில் முதலீட்டருக்கான வெளிநாடு சென்று தலைவர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவன அதிபர்களுடன் சந்தித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இதே போல் அரசின் மற்ற துறைகளில் வழங்கப்பட்ட திட்டங்களின் பயன்கள் குறித்து கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி ஆலோசனையின் பேரில் செய்தி-மக்கள் தொடர்பு பணியாளர்கள் புகைப்படகண்காட்சி அரங்கில் நின்று கொண்டு புகைப்பட விளக்கத்தினை பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.

    ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் புகைப்பட கண்காட்சியினை கண்டுகளித்தனர்.

    • அபிராமம் தெருக்களில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி. அபிராமம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர், கிடைக்காமல் குரங்குகள் வெளியேறி அபிராமம் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றிதிரிகின்றன.

    அபிராமம், வல்லகுளம், விரதக்குளம், பள்ளபச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தென்னைமரங்களில் தாவி குதித்து வருவதுடன் தென்னை மரங்களையும், தென்னங்காய்களையும் நாசம் செய்து வருகின்றன. மேலும் அபிராமம் தெருக்களில் குரங்குகள் சுற்றிதிரிவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.

    அபிராமம் தெருக்க ளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர்ஹாரன் பொருத்தி வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
    • வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகமது கூறியதாவது:-

    மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றி இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். அதன்படியே வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக இருசக்கர வாகனங்களில் சைலன்சர் மற்றும் கைப்பிடிகளில் தாங்களாகவே மாற்றம் செய்து ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் சைலன்சர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதிக ஒலியுடனோ, விசித்திரமான ஒலிகளுடனோ மாற்றம் செய்து அதிக ஒலி மாசு ஏற்படும் வகையில் இயக்கினால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல மோட்டார் சைக்கிளில் ஹேண்டில் பார்களில் மாற்றம் செய்து இயக்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் அதிக ஒலி கொண்ட ஏர்ஹாரன்களை இயக்கி வருகின்றனர். இத்தகைய ஏர்ஹாரன்களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இதுதவிர காரில் முன் இருக்கைகள் மற்றும் பின் இருக்கைகளில் பயணம் செய்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட்பெல்ட் அணிய தவறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் காவல்துறையுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டு மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×