என் மலர்
ராமநாதபுரம்
- மக்களுக்கு பயன்படும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட வேண்டும் என இணை செயலாளர் கூறினார்.
- கூட்டுறவு சங்க செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் இணைச்செயலர் பங்கஜ்குமார் பன்சால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 131 கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பங்கஜ்குமார் பன்சால் பேசும்போது கூறியதாவது:-
ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் 10-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி பொதுவாக கூட்டுறவு வங்கிகளின் மூலம் நியாய விலை கடை நடத்துதல், பெட்ரோல் பங்கு நடத்துதல், உரம் விற்பனை செய்தல், இ-சேவை மையம் செயல்படுத்துதல், கூட்டுறவு வங்கியின் மூலம் தனிநபர் கடனுதவிகள் வழங்குதல், நகை கடன் வழங்குதல், விவசாயிகளுக்கான கடன் திட்டம் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் அந்தந்த கூட்டுறவு சங்க வங்கிகளின் வளர்ச்சிக்கு பயனளித்து வருகின்றன.
மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கியும் முழுமை யான வளர்ச்சி பெறுகின்ற வகையில் திட்டமிடுதல் வேண்டும். பொதுவாக நியாய விலைக்கடைகளில் 5 நாட்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் விற்பனை செய்யலாம்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெரிய அளவில் வணிக நிறுவன கட்டி டங்கள் கட்டி மக்க ளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யலாம். அதேபோல் விவசாயிகளுக்கு தேவை யான வேளாண் கருவிகளை வாடகைக்கு விடலாம்.
அதே போல் விவசாயி களுக்கு தானிய பொருட்கள் வைப்பதற்கான கிடங்குகள் கட்டி மாதந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம். ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் பாதுகாப்பு பெட்டக வசதி கூடுதலாக அமைத்து வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம்.
ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 25 வகையான பணிகளை செயல்படுத்தி வங்கியின் வளர்ச்சிக்கு இந்த வருவாயை பயன்படுத்தும் பொழுது பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர்களின் தேவையை உள்ளூரில் இருந்து நிறைவேற்றும்போது வாடிக்கையாளர்கள் மன நிறைவு பெற்று ஒவ்வொரு சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். அதேபோல் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு அரசு தேவையான வழிகாட்டு தலை செயல்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு வளர்ச்சிக் கழக முதன்மை இயக்குநர் சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் மனோகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமார், பொது மேலாளர் கருணாகரன், சரக துணைப்பதிவாளர் சுப்பையா மற்றும் உதவி பொது மேலாளர்கள், சரக மேலாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி நடந்தது.
- தொழில் நுட்ப மேலாளர் கோசலாதேவி செய்திருந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள உழவர் மையத்தில் விதை உற்பத்தி பயிற்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி நடந்தது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) விஜயலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) முருகேசன் கலந்து கொண்டு வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உபயோகித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.
ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி, விதைச்சான்று அலுவலர் சீராளன் ஆகியோர் விதைகள் வாங்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டிய விபரங்கள், விதைகளின் குணங்கள், விதைகள் தேர்வு விதை தரம் பிரித்தல், விதை உற்பத்தி ஏற்ற ரகங்கள், பருவங்கள், விதை முளைப்புத்திறன், விதை தூய்மை கணக்கிடும் முறைகள், விதைப்பு அறிக்கை பதிவு செய்தல், சான்று கட்டணம், வயலாய்வுக்கட்டணம் மற்றும் கலவன் நீக்குதல், விதைப்பண்ணை அமைக்கும் பொழுது விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதைச்சான்று நடைமுறைகள் குறித்தும் பயிற்சியளித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். ராமநாதபுரம் உதவி விதை அலுவலர் பாஸ்கரன், உச்சிப்புளி உதவி விதை அலுவலர் ஆனந்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் கோசலாதேவி செய்திருந்தார்.
- அரசு எந்திரத்தை வைத்து வழக்கு தொடருவது, மிரட்டுவது என்பது தொடர்ந்து நடந்து வரக்கூடிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.
- எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை தவறான முறையில் பாய்கிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரிய இயற்கை கடல் பாசி எடுக்கும் மீனவ பெண்களுக்கு தனித்துவ அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க, கூட்டணி வேட்பாளரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரவு பெற்றவருமான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்கக்கூடிய ஊடகங்களை அச்சுறுத்தும் விதமாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை பயன்படுத்தி மிரட்டி, அவர்கள் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அரசு எந்திரத்தை வைத்து வழக்கு தொடருவது, மிரட்டுவது என்பது தொடர்ந்து நடந்து வரக்கூடிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை தவறான முறையில் பாய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆம்னி பஸ், லாரிகள் நுழைய அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட வேண்டும்.
- இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.
ராமநாதபுரம்
கீழக்கரையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் கீழக்கரை கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி சார்பில் மனு அளித்தனர்.
இது குறித்து அந்த நிர்வாகிகளை அழைத்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி அவைத்தலைவர் சீனா தானா (எ) செய்யது அப்துல் காதர் தலைமையில் குழுவினர் கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து கீழக்க ரையில் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த வி. ஏ. ஓ. அலுவலகம் மற்றும் பீசா பேக்கரி பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து கண்காணிப்பதோடு அதன் மூலம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.
கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஊருக்குள் வரும் கனரக வாகனங்கள், லாரிகள், ஆம்னி பஸ்களை ஊருக்குள் அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசுக்கு கலெக்டர் பரிந்துரைத்தார்.
திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி செல்லும் தொலைதூர பஸ்கள் கீழக்கரை புதிய பஸ் நிலையம் வரை வந்து செல்லவும் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். விரைவில் கீழக்கரையில் போக்குவரத்து காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் கீழக்கரை காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி தலைவர் சாகுல்ஹமீது ஆலிம், துணை தலைவர்கள் உமர் களஞ்சியம், செய்யது அபுதாஹிர், பொருளாளர் ஷபீக், சமூக ஆர்வலர் ஜஹாங்கீர் ஆலிம், ஏர்வாடி தீயணைப்பு நிலைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் கூறு கையில், கலெக்டரின் அறிவுரையின்படி, முதற்கட்டமாக நகராட்சி சேர்மன், அதிகாரிகள், மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வாகனங்கள் நகருக்குள் வந்து செல்ல நேர கட்டுப்பாடு தீர்மானிக்கப்படும். அதன் பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் உள்ளே செல்வதற்கு தடை ஏற்படுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது என்றார்.
- ராமநாதபுரத்தில் பிடிபட்ட அரியவகை ஆந்தைகள் சரணாலய பகுதியில் விடப்பட்டன
- அரசு போக்குவரத்து பணிமனை பின்பகுதியில் வித்தியாசமான தோற்றத்தில் ஆந்தைகள் இருப்பது தெரியவந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை பின்பகுதியில் உள்ள பழைய கட்டிட பகுதியில் நேற்று வித்தியாசமான தோற்றத்தில் ஆந்தைகள் இருப்பது தெரியவந்தது.
அதனை கண்ட சமூக ஆர்வலர் பாண்டி முருகன் உள்பட 4 பேர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனவர் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த 5 ஆந்தைகளையும் மீட்டு சென்று வனத்துறை அலுவலகத்தில் வனச்சரகர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தார். ராமநாதபுரத்தில் மீட்கப்பட்ட ஆந்தைகள் அரிய வகையை சேர்ந்தவை. அவை ஆப்பிரிக்க பகுதியில் இருந்து வந்துள்ளன. மீட்கப்பட்ட ஆந்தைகள் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் நேற்று முழுவதும் வைத்து பாதுகாக்கப்பட்டது. இரவில் தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலய பகுதியில் அவைகள் பறக்கவிடப்பட்டது.
- தேவிபட்டினத்தில் 4முனை சாலை சந்திப்பில் சிக்னல்கள் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
- ஒளிரும் விளக்குகள் இன்றி எந்த வாகனம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ரோட்டில் ஈ.சி.ஆர். ஜங்ஷனில் ராமேசுவரம் ரோடு, மதுரை ரோடு, தேவிப்பட்டினம் ரோடு மற்றும் ராமநாதபுரம் ரோடு ஆகிய 4 முக்கிய சாலைகள் சந்திக்கினறன.
பஸ், ஆட்டோ, வேன், லாரி தவிர கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோட்டில் தேவிபட்டினம் நவபாஷாண கோவில், ராமேசுவரம் மற்றும் திருப்புல்லாணி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகன போக்குவரத்தும் அதிகம் இருக்கிறது. இந்த சந்திப்பில் 4 புறமும் இருந்து வரும் வாகனங்க ளுக்கு தெரியும் வகையில் தானியங்கி சிக்னல்கள் இருந்தன. இவை அனைத்தும் தற்போது செயல்படாமல் பழுதாகியுள்ளது.
பல மாதங்களாகியும் சிக்னல்களை சரி செய்யவில்லை. இங்கு ரவுண்டானாவும் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஒளிரும் விளக்குகள் இன்றி எந்த வாகனம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெரிய அளவில் விபத்துக்கள் நடக்காமல் தடுக்க முடியும், என இப்பகுதி மக்கள் தெரி வித்தனர்.
- மாணவிகளிடம் ஆபாசபேச்சு விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் சத்திய சேகரன் என்பவர் மாணவிகளிடம் செல்போ னில் ஆபாசமாகவும், சாதிரீதியாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பேராசிரியர், மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகாரின் பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாசமாக பேசுதல், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல் என்பது உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பேராசிரியரை தேடி வருகின்றனர்.
மேலும் பள்ளி-கல்வித்துறை சார்பில் பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகார்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. இதுதவிர, அந்த பேராசி ரியர் மீது பள்ளி கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுப்பதற்காக மூத்த பேராசிரியர்களை கொண்ட 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் பரமக்குடி அரசு கலைக்கல்லூரிக்கு மறுதேதி அறிவிக்கப்படாமல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள் வாழ்வாதார பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை என நவாஸ்கனி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
- கடந்த 8 ஆண்டுகளில் அந்த பன்முக தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான நவாஸ்கனி பேசியதாவது:-
பா.ஜனதா ஆட்சி நடைபெறாத தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கவர்னர்களின் மூலம் மத்திய அரசு ஒருவித அழுத்தத்தை மாநில அரசுகளுக்கு கொடுக்க முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் கவர்னர்களுக்கு வலியுறுத்தல்களை வழங்க வேண்டும். நாம் காலம் காலமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக நம்முடைய நாட்டை உலக அரங்கில் உயர்த்தி வைத்துள்ளோம்.
ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அந்த பன்முக தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு மத்திய அரசு 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம்' என்று பன்முகத்தன்மைக்கு எதிரான மிகப்பெரிய விவாதத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
பன்முகத்தன்மை உள்ள இறையாண்மை மிக்கது நம்முடைய தேசம். இது சுதந்திரநாடு ஜனநாயக நாடு. இங்கு மக்கள்தான் எஜமானர்கள் அவர்கள் மீது எதையும் எவரும் திணிக்கவோ, வற்புறுத்தவோ முடியாது.
எங்களுக்கு ஒன்றை வேண்டாம் என்று கூறும்போது, அதனை திணிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. அதுதான் சுதந்திர தேசத்தின் அடிப்படை உரிமை.
ஒருவர் இந்த மொழியில் தான் பேசவேண்டும், இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று திணிப்பது சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
உலக நாடுகளுக்கு மத்தியில் நம்முடைய நாடு பெருமிதத்தோடு உயர்ந்து நிற்பது நமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிதான். ஆனால் அண்டையில் இருக்கும் நம்மை விட மிக மிக சிறிய நாடு இலங்கையிடம் இருந்து நம்முடைய மீனவர்களை காப்பதற்கு இன்னாள் வரை ஒரு நிரந்தர தீர்வை காண முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம் என்ற உண்மையையும் இந்த அரசு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பலமுறை இதே அவையில் பேசியிருக்கிறேன். தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். எங்களுடைய பகுதிகளின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையி னரால் தாக்கப்பட்டு வருகி றார்கள். அவர்களின் படகுகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சூழலுக்கு தள்ளப்படு கிறார்கள். இன்று நீங்கள் எங்களுக்கு பதில் உரைக்க மறுத்தாலும் இன்னும் 1½ ஆண்டு காலத்தில் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தொடர்ந்து 2முறை உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய மக்களை மீண்டும் ஒருமுறை நீங்கள் சந்திக்க வேண்டும். அப்போது அவர்கள் உங்களுக்கு தகுந்த பதிலை வழங்குவார்கள்.
வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் உங்களுடைய வளர்ச்சியை காட்டுங்கள் என்பதை வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஏர்வாடி தர்கா தாயத்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- இந்த தாயத்தை கையில் கட்டி கொண்டால் பில்லி, சூன்யம், பேய், பிசாசு நெருங்க முடியாது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இந்த தர்காவின் மகிமையை அறிந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இங்கு சாதி, மதம், இனம் கிடையாது. அனைத்து சமுதாயத்தினர் நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் வருகின்றனர். பிரார்த்தனை செய்கி ன்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.
இந்த தர்காவில் பாதுஷா நாயகம் அடங்கியுள்ள மண்டபத்தின் ஹாலில் தர்கா ஹக்தார்களால் விற்பனை செய்யப்படும் தாயத்து அபூர்வ சக்தி படைத்தது என பக்தர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக இங்கு பிரார்த்தனைக்கு வரும் பக்தர்கள் தாயத்தை மறக்காமல் வாங்கி செல்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தாயத்து களை வாங்கி அனுப்பி வருகின்றனர். தாயத்தின் மகிமை குறித்து தர்கா நிர்வாக கமிட்டி முன்னாள் தலைவர் துல்கருணை பாட்சா கூறியதாவது:-
ஆன்மீக சக்தியின் மீது பக்தர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். ஏர்வாடியில் நாள்தோறும் பல்வேறு அதிசயங்கள், அற்புதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. தர்காவிற்கு நேரடியாக வந்தால் இதனை காணலாம். முகமது நபி (ஸல்) கட்டளையை பாதுஷா நாயகம் ஏற்று அல்லாவுக்காக பல்வேறு தியாகங்களை செய்தார்.
இதன் காரணமாக பாதுஷா நாயகம் அவர்களுக்கு இறைவன் பல்வேறு மகிமைகளை அளித்தார். அந்த மகிமைகள் தான் தற்போது தர்காவில் நடந்து வருகிறது. இந்த தாயத்தில் பாதுஷா நாயகத்தின் பெயர் நாமம் உள்ளது. இதை கையில் கட்டி கொண்டால் பில்லி, சூன்யம், பேய், பிசாசு நெருங்க முடியாது.
குறிப்பாக கேரள மாநில மக்கள் இதன் மகிமையை நன்கு அறிந்துள்ளனர். இந்த தாயத்து உள்ளே எழுதப்பட்டுள்ள பெயர் நாமம் சிறப்பு ஆலிம்களை கொண்டு எழுதப்பட்டு பாதுஷா நாயகத்தின் சமாதியில் வைத்து முறையாக பிரார்த்தனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தண்ணீர் புகாத வகையில் தாயத்து தயாரிக்கப்படுகிறது.
ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இதை கட்டிக் கொள்ளலாம். சபரிமலை பம்பையில் உள்ள வாவர் சாகிப் தர்காவிற்கு ஆயிரக் கணக்கில் இங்கிருந்து ஆர்டர் செய்து பெற்று சென்று அங்கு ஏர்வாடி தர்கா தாயத்து விற்பனை செய்கின்றனர். தர்கா கமிட்டி வழியாகவும் வெளிநாடு மற்றும் உள் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாராகின்றன.
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, திருப்புல்லாணி, உச்சிப்புளி, தேவிபட்டினம் உள்பட பல்வேறு நகரங்களில் பெரும்பாலான உண வகங்கள், சாலையோர தள்ளு வண்டிகள், இறைச்சி விற்பனை கடைகளில் சுகாதாரம் கடைபிடிக்கப்படுவதில்லை. சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவை உண்பதால் பொது மக்களுக்கு நாள்பட்ட வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் தொடர்கின்றன.
ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்கள் சுமார் 300க்கும் மேல் உள்ளன. இவற்றில் அசைவ சாப்பாடு, பிரியாணி என காலை, பகல், இரவு நேரங்களில் விற்பனை செய்யப் படுகின்றன. பெரும்பாலான உணவகங்கள் சுகாதார மற்ற நிலையில் உள்ளது.
தண்ணீர் தொட்டி, உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமற்ற நிலை, விதிமுறைப்படி பாத்தி ரங்கள் கழுவப்படாதது, திறந்தவெளியில் உணவு பண்டங்கள், பயன் படுத்தப்பட்ட எண்ணைகள், காலாவதியான இறைச்சி என பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது.
நகர் பகுதியில் மட்டும் அதிகம் இருந்த துரித உணவகங்கள் தற்போது பல்வேறு இடங்களில் அதிகரித்து உள்ளன. இவற்றை கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை யினர் மற்றும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் கண்துடைப்பு ஆய்வு பணிகளை பெயரளவில் மேற்கொண்டு வருகின்றனர்.
ரோட்டோர திறந்த வெளிக்கடைகள் பாதுகாப்பு இல்லாமல் உணவுகளை வைத்து விற்பனை செய்வது தொடர்கிறது. உணவு பாதுகாப்புத்துறையினரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு வருவது சாமானிய பொதுமக்கள் மட்டுமே.
சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவோருக்கு உபாதைகள் ஏற்படுவதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமநாதபுரம் அருகே கோவில் கும்பாபிஷேக யாகசாலை சேதமடைந்தது.
- இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தேர்போகியில் சுடலை மாடன் சுவாமி கோவிலில் ஆவணி மாத அமாவாசை நாளில் விழா நடந்து வந்தது. இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் விழா எடுப்பதில் சிக்கல் எழுந்தது.
இதனால், இவர்களில் ஒருவரான மாடசாமி என்பவர் தனது உறவினர்களுடன் பிரிந்து சென்று புதியதாக கட்டிய கோவிலுக்கு வருகிற 16-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த உள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் பார்த்தபோது புதிய கோவில் சேதப்பட்டு கிடந்தது. இது குறித்து புதிய கோயில் பூசாரி மாடசாமி கூறுகையில், சுடலை மாடன் சுவாமி கோயிலில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கிருந்து விலகி எனது பட்டா நிலத்தில் புதிய கோவில் கட்டி, வரும் 16-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த உள்ளேன்.
இந்நிலையில், நேற்று காலையில் பார்த்தபோது கலசங்கள் எடுத்துச் செல்ல அமைத்த சாரம், யாகசால கூடங்கள் ஆகியவற்றை மர்ம கும்பல் சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து தேவிபட்டினம் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக தேவிபட்டினம் போலீசார் விசாரித்து தேர்போகி மாடசாமி கோவிலை சேர்ந்த கர்ணன், சாமிநாதன், மோகன், நாகேந்திரன், சுகா, முருகன், தட்சிணாமூர்த்தி, ஈஸ்வரன், வெள்ளைச்சாமி, வெங்கடேஷ், ராஜ்குமார் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக அதிகாரி ஆய்வு நடத்தினர்.
- கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், மத்திய அரசின் கூட்டுறவு மற்றும் நிர்வாக இயக்குநர் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் இணைச் செயலர் பங்கஜ்குமார் பன்சால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவ மனையை பார்வையிட்டார். கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கையாக தேவையான சிகிச்சை முறைகளை கையாண்டு கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்க மருத்து வர்கள் கண்காணிப்பில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மருச்சுக்கட்டி ஊராட்சி யில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பொதுமக்களிடம் தனி நபர் கழிவறை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிவறை கட்டிடம் கட்டி வழங்கப்படுகிறது. கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கும் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் ஆய்வகம் உட்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டதுடன் பொது மக்களுக்கு தேவையான சிகிச்சைகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
பரமக்குடி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பார்வையிட்டு அங்கு விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ள தானிய பொருட்களை இருப்பு வைத்துள்ளதை பார்வையிட்டார். அரிய னேந்தல் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குறுங்காடுகள் அமைத்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் திட்டம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு இதேபோல் மற்ற ஊராட்சிகளிலும் செயல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்க ளுடன் ஆலோசனை நடத்தி னார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு வளர்ச்சிக் கழக முதன்மை இயக்குநர் சந்திரசேகரன், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் முத்துக்குமார், ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






