என் மலர்
ராமநாதபுரம்
- திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தலைவர்-துணைத்தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
- ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழக்கரை
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியத்தலைவர் புல்லாணி தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கமிஷனர் ராஜேந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி:- தமிழக அரசு தற்போது பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் வர்ணம் பூசுதல், மராமத்து உள்பட 80 பணிகள் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டது.
ஆனால் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க. சேர்மன் எதிர் கட்சி சேர்மன்போல் செயல்படுகிறார். "தி.மு.க. சேர்மனா அல்லது எதிர்கட்சி சேர்மனா" என்பதை தெளிவுபடுத்த வேண்டும். குழப்பம் ஏற்படுத்தி பள்ளிப் பணியை நிறுத்திவிட்டார். இந்த திட்டத்தை திசை திருப்புவதற்கு காரணம் என்ன?
தலைவர்:- நான் எந்த சேர்மன் என்று மக்களுக்கு தெரியும்.
துணைத்தலைவர் சிவ லிங்கம்:- திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மிகவும் மோசமாக செயல்படுகிறது. இங்கு தி.மு.க. சேர்மனா? அல்லது அ.தி.மு.க.சேர்மனா? என்பது குழப்பமாக உள்ளது எந்த கட்சி சேர்மன் என்றே தெரியவில்லை?
கவுன்சிலர் பைரோஸ் கான்:- டெண்டர் வைத்து ரத்து செய்ததற்கான காரணத்தை முதலில் கூறுங்கள். பள்ளி வர்ணம் பூசுதல் குறித்து கடந்த 4 மாதங்களுக்கு மேலாகவே உரிய நடவடிக்கை மேற் கொண்ட நிலையில் தற்போது நிறுத்தியது ஏன்?
கவுன்சிலர் பைரோஸ் கான்:- என்னை ஓட்டு போட்டு வெற்றி பெறச்செய்த மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இங்கு நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளால் நான் கடந்த 3 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே செல்லவில்லை.
துணைத்தலைவர் சிவ லிங்கம்:- எதற்கெடுத்தா லும் தலைவர் தடை போடக்கூடாது. நாங்கள் கேட்பது உங்கள் சொந்த நிதியை அல்ல, அரசு நிதியைத்தான் திட்ட பணி களுக்கு ஒதுக்கீடு செய்ய கேட்கிறோம்.
இதைத்தொடர்ந்து தலை வர், துணைத்தலைவரை ஒருமையில் பேசியதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே துணைத்தலைவர் அவரது இருக்கை விட்டு எழுந்து பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டார். மதியம் 12 மணிக்கு தொடங்கிய ஒன்றிய கவுன்சில் கூட்டம் 2½ மணிநேரம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.79 லட்சம் மதிப்பில் 61 பணிகளுக்கு வருகிற 28-ந் தேதி டெண்டர் விட முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தொடங்கியது முதல் கடைசி வரை தொடர்ந்து தலைவருக்கு எதிராக விவாதங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க.கவுன்சிலர்கள்- தி.மு.க.சேர்மன் இடையே பணிகள் குறித்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்த நிலையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு தேவையான பணிகளை செய்ய வற்புறுத்தாமல் கூட்டம் முடியும் வரை மவுனம் காத்தது புரியாத புதிராக இருந்தது.
- செல்போன் செயலிகள் மூலம் வங்கி விவரங்கள் திருட வாய்ப்பு உள்ளது.
- www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் புகாரை பதிவிடலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது வங்கிக் கணக்கில் மர்மநபர்கள் ஆன்லைன் மூலம் மோசடி செய்து ரூ.85 ஆயிரத்து 798-ஐ 3 தவணைகளாக எடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை முடக்கம் செய்து ரூ.72 ஆயிரத்து 99-ஐ மீட்டனர். அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மீட்கப்பட்ட பணத்தை முத்துக்குமாரிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:
பொது மக்கள், கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயன்படுத்தும் செல்போன்களை கவனமாக கையாள வேண்டும், மேற்படி சம்பவம் செல்போனில் மனுதாரரின் மகன் கேம் ஆப்பை டவுன் லோடு செய்து அதில் வந்த தேவையற்ற லிங்கை தொட்டதால் தான் வங்கி விபரங்கள் லிங்க் மூலம் செல்போனில் உள்ள வங்கி விபரங்கள் திருடி உள்ளதாக தெரிகிறது. தேவையற்ற அப்ளிகேஷன் நமது செல்போனில் பயன்படுத்துவதால் நமது தனிப்பட்ட விபரங்கள் மற்றும் வங்கி விபரங்கள் திருட வாய்ப்புள்ளது ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பணம் பரிவர்த்தனையில் ஏமாற்றங்கள் நடந்து விட்டதாக கருதினால் உடனே சைபர் கிரைம் உதவி 1930 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் புகாரை பதிவிடலாம். இவ்வாறு அவர் பேசினார்.
- மீன்பிடிப்பதில் விதி மீறல் செய்ததாக ஒரே மாதத்தில் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- படகுகளுக்கான எரிபொருளும் ரத்து செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறியதாவது:-
தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவது குற்றமாகும். எனவே தடை மீறும் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. மீன்வள சட்ட அமலாக்க துறையினர், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ராமேசுவரம், மண்டபம், தொண்டி, புதுமடம் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் தடையை மீறி இரட்டை மடி, சுருக்குமடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் மீது 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மீனவர்களின் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளும் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஜன.23-ந்தேதி வரை 16 லட்சத்து 70ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பிடிபட்ட மீன்கள் ஒரு லட்சத்து 67 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. படகுகளுக்கான எரிபொருளும் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 20 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடியாக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக கீழ்க்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் அரசு நேரடி நெல் கொள்மு தல் நிலையங்கள் துவங்கப்பட்டு செயல்படுகிறது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், மங்களக்குடி, திருவாடானை, பாண்டுக்குடி, திரு வொற்றியூர், நெய்வயல், மாவூர், அஞ்சு க்கோட்டை, புல்லூர்(வெள்ளை யாபுரம்), கட்டவிளாகம் (நீர்க்குன்றம்), கவ்வூர், டி.கிளியூர். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், கற்காத்தக்குடி, ஆனந்தூர், கூடலூர், பகவதிமங்கலம், கோவிந்தமங்கலம் (ராதானூர்), சோழந்தூர்.கமுதி ஊராட்சி ஒன்றி யத்தில், கமுதி, டி.புன வாசல், எ.தரக்குடி.போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில், சேமனூர், பாண்டிக்கண்மாய், அரியக்குடி.நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், நயினார் கோவில், காரடர்ந்தகுடி, வல்லம், பொட்டக வயல், பி.கொடிக்குளம், எஸ்.வி.மங்கலம்.பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில், விளத்தூர், பரமக்குடி, பாம்பூர், கமுதகுடி (பொது வக்குடி), களையூர் (வெங்களக்குறிச்சி), தடுத்தலாங்கோட்டை, கள்ளிக்குடி, தேவனேரி, நெல்மடூர், கீழப்பருத்தியூர், கொளந்தபூரி. ராமநா தபுரம் ஊராட்சி ஒன்றி யத்தில் புத்தேந்தல், கடலாடி ஊராட்சி ஒன்றி யத்தில் ஆப்பனூர், கடலாடி (கடுகு சந்தை), சாயல்குடி.திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில், களரி (மாலங்குடி), உத்த ரகோசமங்கை.முது குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், மேலக்கொடுமலூர், புளியங்குடி (காக்கூர்) ஆகிய 50 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கூடுதலாக 20 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன. ஒவ்வொரு நெல் கொள்மு தல் நிலையமும் தொடர்ந்து தினந்தோறும் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும், தொடர்ந்து மதியம் 2:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை செயல்படும். விவசாய பெருமக்கள் தங்கள் விலை நிலத்தில் விளைந்த நெல்லை நேரடியாக கொள்முதல் நிலையத்தில் விற்று அரசு நிர்ணயித்துள்ள தொகையினை தங்கள் வங்கி கணக்கின் மூலமாக பெற்று பயனடையும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் நெல் கொள்மு தல் நிலையத்தில் யாருக்கும் எந்த வகையிலும் பணம் செலுத்த வேண்டிய அவசி யம் கிடையாது. நெல் கொள்முதல் நிலையத்தில் குறைகள் ஏதும் இருப்பின் கீழ்கண்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.
மண்டல மேலாளர் அலுவலக தொலைபேசி எண்: 94422 30767
உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) தொலைபேசி எண்: 97915 61006
துணை மண்டல மேலாளர் தொலைபேசி எண்: 97860 76408
விழிப்புப்பணி அலுவலக தொலைபேசி எண்: 044-26424560
பொது மேலாளர் (சந்தை) அலுவலக தொலைபேசி எண்: 044-26422448
மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077-ல் விவசாயிகள் தொடர்பு கொண்டு நெல் கொள்முதல் நிலையம் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதல் கூறப்பட்டுள்ளது.
- பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
- 19-ந்தேதி சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 6-வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் 7-ம் நாள் விழா இன்று நடக்கிறது.
திருவிழாவின் 8-வது நாளான நாளை(சனிக்கிழமை) மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை பகல் 1 மணிக்கு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும். மாசி சிவராத்திரியையொட்டி பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அதுபோல் நாளை மறுநாள் 19-ந் தேதி அன்று பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது.
திருவிழாவின் 9-வது நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.39 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இதே போல் ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர்கோவில், திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில், திருவாடானை
ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது.
- ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதே போல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.
இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை 17-ந் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து
செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும், மேலும் தனியார் துறை நிறுவனங்கள்மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- 70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
- அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மாலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்
அப்போது அவர் தெரிவிக்கையில்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க 70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கி 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட துவங்கி உள்ளது. தொடர்ந்து திட்டமிட்டபடி மேலும் 20 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்படும். இதன் நோக்கம் இடைத் தரர்களை தடுத்து நேரடியாக அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து அதிக லாபம் பெற வேண்டும் என்பதே ஆகும்.
அந்த வகையில் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் அந்தந்த பகுதி விவசாயிகள் பதிவு செய்து தங்களது நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்திடும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் 125 டன்னுக்கு மேல் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து பெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நடப்பாண்டிற்கு விவசாயிகளிடமிருந்து 50,000 மெட்ரிக் டன் நெல் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். வியாபாரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி உரிய விலைக்கு விற்பனை செய்து சரியான லாபத்தை பெற்று பயனடைய வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஜோதி பாசு, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர் செல்வம், துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 2 பெண்களிடம் நகை பறிப்பு நடந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே அரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சத்யா (வயது23). இவர் ஸ்கூட்டரில் அரசனூரி லிருந்து தேவிபட்டினம் கம்ப்யூட்டர் சென்டருக்கு போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு விண்ணப்பிக்க சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அரசனூர் காலனி சுடுகாடு அருகே வந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பைக் மீது மோதி கீழே தள்ளி விட்டனர். இதில் சத்யா கீழே விழுந்தும் கழுத்தில் அணிந்திருந்த 5 ½ பவுன் தாலிச்செயினை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசில் சத்யா புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்தவர் அமரல்பீவி என்ற சக்கரை யம்மாள் (60). இவர் நேற்று மேலூர் கணேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறியபோது அவரது கட்டைபையில் இருந்த 3 பவுன் தங்க செயினைமர்ம நபர் திருடிச்சென்று விட்டார்.
இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உடற்கல்வியியல் கல்லூரிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
- இயக்குனர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் இறுதிப்போட்டி கல்லூரி முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அழகப்பா பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியின் முதல் பரிசை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியும், 2-ம் பரிசை செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர் செந்தில்குமரன் வெற்றிக்கான கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் செய்திருந்தார். வெற்றிபெற்ற அணிகளுக்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் யூசுப், செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குனர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர்.
- விவசாயிகள்- மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புகளில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 17-ந்தேதி காலை 10.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகளால் மாவட்ட கலெக்டரை கேட்டுக் கொண்டதினைத் தொடர்ந்து நாளை 17-ந் தேதி அன்று பிற்பகல் 3.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள இருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- கீழக்கரை மரைன் காவல் நிலையத்திற்கு செல்ல வழியில்லாமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மரைன் காவல் நிலையம் இல்லாமல் இருந்ததை தொடர்ந்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
கீழக்கரை தொழிலதிபர் சலாவுதீன் தனது சொந்த இடத்தில் 30 சென்ட் இடத்தை மரைன் காவல் நிலையம் கட்ட அரசுக்கு தான மாக வழங்கினார். அந்த இடத்தில் 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது முதல் இன்று வரை காவல் நிலை யத்திற்கு சென்று வர வழி ஏற்படுத்தவில்லை. இதனால் மரைன் காவல் நிலையத்திற்கு கடற்கரை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் காவல் நிலையத்திற்கு நடந்தோ, வாகனத்திலோ செல்வதற்கு முடியாமல் போலீசார் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே காவல் நிலையத்திற்கு கடற்கரை வழியை தவிர்த்து மாற்று வழியை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மக்களுக்கு பயன்படும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட வேண்டும் என இணை செயலாளர் கூறினார்.
- கூட்டுறவு சங்க செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் இணைச்செயலர் பங்கஜ்குமார் பன்சால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 131 கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பங்கஜ்குமார் பன்சால் பேசும்போது கூறியதாவது:-
ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் 10-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி பொதுவாக கூட்டுறவு வங்கிகளின் மூலம் நியாய விலை கடை நடத்துதல், பெட்ரோல் பங்கு நடத்துதல், உரம் விற்பனை செய்தல், இ-சேவை மையம் செயல்படுத்துதல், கூட்டுறவு வங்கியின் மூலம் தனிநபர் கடனுதவிகள் வழங்குதல், நகை கடன் வழங்குதல், விவசாயிகளுக்கான கடன் திட்டம் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் அந்தந்த கூட்டுறவு சங்க வங்கிகளின் வளர்ச்சிக்கு பயனளித்து வருகின்றன.
மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கியும் முழுமை யான வளர்ச்சி பெறுகின்ற வகையில் திட்டமிடுதல் வேண்டும். பொதுவாக நியாய விலைக்கடைகளில் 5 நாட்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் விற்பனை செய்யலாம்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெரிய அளவில் வணிக நிறுவன கட்டி டங்கள் கட்டி மக்க ளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யலாம். அதேபோல் விவசாயிகளுக்கு தேவை யான வேளாண் கருவிகளை வாடகைக்கு விடலாம்.
அதே போல் விவசாயி களுக்கு தானிய பொருட்கள் வைப்பதற்கான கிடங்குகள் கட்டி மாதந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம். ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் பாதுகாப்பு பெட்டக வசதி கூடுதலாக அமைத்து வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம்.
ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 25 வகையான பணிகளை செயல்படுத்தி வங்கியின் வளர்ச்சிக்கு இந்த வருவாயை பயன்படுத்தும் பொழுது பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர்களின் தேவையை உள்ளூரில் இருந்து நிறைவேற்றும்போது வாடிக்கையாளர்கள் மன நிறைவு பெற்று ஒவ்வொரு சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். அதேபோல் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு அரசு தேவையான வழிகாட்டு தலை செயல்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு வளர்ச்சிக் கழக முதன்மை இயக்குநர் சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் மனோகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமார், பொது மேலாளர் கருணாகரன், சரக துணைப்பதிவாளர் சுப்பையா மற்றும் உதவி பொது மேலாளர்கள், சரக மேலாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






