என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.78 கோடி தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.
    • 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

    ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான விஜயா தலைமை வகித்தார்.

    இதில் எடுத்துக்கொண்ட 337 வழக்குகளில் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. ரூ.2 கோடியை 78 ஆயிரம் தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.

    நிரந்தர மக்கள் மன்ற மாவட்ட நீதிபதி பரணிதரன், மகிளா கோர்ட்டு மாவட்ட நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர்கள் பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா, வழக்க றிஞர் சங்க பொருளாளர் பாபு, இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கமுதியில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதியில் உள்ள வளையக்கம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. நேற்று ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். முன்னதாக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தலைசுமையாக பூஜை பெட்டியை சுமந்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    மேலும் சாட்டையால் அடித்துக் கொண்டும் பலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • தொண்டி புதிய பஸ் நிலையத்தில் நடந்த கலைஞர் நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
    • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியின் புதிய பஸ் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ.வும், தி.மு,க. மாவட்ட செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், கரு.மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை வகித்தனர்.

    யூனியன் சேர்மன் முகமது முக்தார், தொண்டி பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர், தொண்டி நகர் தி.மு.க. சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நாட்டுப்படகுகளுக்கான படகுப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, மெடல் மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலி கான், ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், செங்கமடை ரவி, பேரூராட்சி துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். அதனைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • ஏர்வாடியை குப்பையில்லா நகரமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என கீழக்கரை வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • கடைக்காரர்கள்தான் சாலையில் கொட்டுகிறார்கள்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி ஏர்வாடி பகுதியில் உள்ள லாட்ஜ் உரிமையாளர் களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தங்கும் விடுதியில் இருந்து குப்பைகளை வெளியே கொட்டக்கூடாது. நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை போட வேண்டும். சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏர்வாடியை குப்பையில்லா நகரமாக்க லாட்ஜ் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது லாட்ஜ் உரிமையாளர்கள் கூறும்போது, குப்பைகளை நாங்கள் வெளியில் கொட்டுவதில்லை. டீ கப், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகளை இதர கடைக்காரர்கள் தான்சாலை யில் கொட்டுகிறார்கள்.

    போலீசார் லாட்ஜ் முன்பு நிறுத்தப்படும் வாகன ங்களை அப்புறப்படுத்து கிறார்கள். ஆனால் போக்கு வரத்துக்கு இடையூறாக கடைகளை வைக்க போலீசார் அனுமதிக் கிறார்கள். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர். அப்போது வட்டாட்சியர் பழனிக்குமார், போலீசாரி டம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பரமசிவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரையில் கள்ள மார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் அரசு மதுபான கடைகள் இல்லாத தால் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப் புல்லாணி பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளில் இருந்து வா கனங்களில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கீழக்க ரையில் மது விற்பனை களைகட்டி நடந்து வருகிறது.

    கீழக்கரையில் புதிய பஸ் நிலையம், வள்ளல் சீதக்காதி சாலை, ஏர்வாடி முக்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை போல் அமைத்து கள்ள மார்க்கெட்டில் மது பாட்டில் விற்பனை நடக்கி றது. மேலும் பெண்கள் நடந்து செல்லும் பல்வேறு பாதை களில் மது பிரியர்கள் சர்வ சாதாரணமாக அமர்ந்து திறந்த வெளியில் மது அருந்து வருகின்றனர். இதனால் கீழக்கரையில் ரோந்து பணியில் போலீசார் உள்ளனரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள தனிப்பிரிவு போலீசார் உறக்கத்தில் உள்ளனர். சட்ட விரோதமான செயல்கள் குறித்து தலைமை இடத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக் காமல் மறைத்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

    மது பிரியர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தும் கோர்ட்டு, வழக்கு, விசாரணைக்கு பயந்து எவ்வித புகார் தெரிவிக்கா மல் சென்று விடுகின்றனர். இது சட்ட விரோதமான மது பான விற்பனையாளர்க ளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சுவாமி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு பாலம் அருகே சக்தி பாபா கோவில் உள்ளது. இங்கு ஆதிவராஹி அம்மன், நரசிம்மர் நூதன விக்கிரக பிரதிஷ்டை விழா நடந்தது.

    முன்னதாக கணபதி நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, 2-ம் கால பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து ஆதிவராகி அம்மன், நரசிம்மருக்கு சிறப்பு கும்ப நீர் அபிஷேகம் மற்றும் பால், தயிர். சந்தனம் இளநீர் பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. கமுதி, கோட்டைமேடு, கண்ணார்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.

    • கருணாநிதி 100-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • உதவிப்பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச் சாலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில், கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராம் மரக்கன்றுகளை நட்டார். உடன் பரமக்குடி உதவிக் கோட்டப் பொறியாளர் கண்ணன், பரமக்குடி உதவிப்பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ெதாண்டி அருகே தலையில் கல்லை போட்டு மூதாட்டியை கொன்றது யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தளிர் மருங்கூர் பாகனவயல் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலி(வயது75). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன், மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.

    இதன் காரணமாக ஜெயசீலி தனியாக வசித்து வந்தார். மேலும் பிழைப்புக்காக ஆடு வளர்ப்பு தொழிலை ஜெயசீலி செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று தனது வீட்டின் முன்பு ரத்தவெள்ளத்தில் ஜெயசீலி பிணமாக கிடந்தார். அவரை யாரோ மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டும், கட்டையால் தாக்கியும் கொடுரமாக கொலை செய்துள்ளனர்.

    இதுகுறித்து அவரது மகள் கொடுத்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

    தனியாக வசித்துவந்த மூதாட்டி ஜெயசீலியை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    முதற்கட்டமாக ஆடு திருட வந்த சிலர் ஜெயசீலியை கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் கொலையாளிகள் யார்? என்று துப்புதுலக்க கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    • உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா வில் உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில் உள்ளது. 3ஆயிரம் ஆண்டு கள் பழமையான கோவிலில் உள்ள வெயில் உகந்த விநாயகரை ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் வழியில் பூஜித்து சென்றதாக ராமாயண புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் உப்பு வெயில் உகந்த விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவானது கடந்த 5-ந்தேதி அன்று முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. கடந்த 8-ந்தேதி 6-ம் கால யாகபூஜை தொடங்கி நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 9.45 மணிக்கு மகா பூர்ணகுதி நடைபெற்று 10.45 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 11.20மணிக்கு ராஜகோபுரம், விமானம் மற்றும் உப சன்னதிகளின் கலசங்களிலும் ஒரே நேரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு விநாயகருக்கு சித்தி புத்தி ஆகிய தெய்வங்களுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி வீதி உலாவை தொடர்ந்து உலக நன்மைக் காக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாதாரனையும் நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம், ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவாடானை அருகே நடந்த விபத்தில் அரசு ஊழியர் பலியானார்.
    • மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திரகுமார்(வயது37). இவர் திருவாடானை பாரதி நகர் பகுதியில் தங்கி, ராமநாதபுரம் சார்நிலை கருவூல அலுவலகத்தில் அலுவ லராக பணிபுரிந்து வருகிறார்.

    பணி முடித்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். திருச்சி-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் கற்காத்த குடி அருகே வந்த போது, ஒரு நாய் குறுக்கே வந்துள்ளது. அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக பிரேக் பிடித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயம டைந்த நரேந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • சிறப்பு விதி 2012-யை கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-24 பள்ளி வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பள்ளி வாகனங்கள் சிறப்பு விதி 2012-யை கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன்படி பள்ளி வாகனங்களை தினந்தோறும் முழுமையாக பரிசோதித்து குறைகளை அறிந்து முறையாக பராமரித்து சீரிய முறையில் பள்ளி வாகனத்தினை இயக்க இம்மாவட்ட தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள், பள்ளி பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பள்ளி பேருந்தின் நடத்துனர்கள் பள்ளி குழந்தைகளை பாதுகாப்பான முறையில் ஏற்றி இறக்கிச்செல்ல கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும், பள்ளி வாகனங்கள் நகர எல்லையில் 40 கி.மீ வேகத்தில் மிகாலும், பிற அனுமதிக்கப்பட்ட சாலைகளில் 50கி.மீ என்ற வேகத்தில் மிகாமலும் இயக்கப்பட வேண்டும். 2023-2024 கல்வி ஆண்டில் இம்மாவட்டத்தில் கூட்டாய்வு செய்து சரியாக உள்ள பள்ளி வாகனங்கள் கீழ்கண்ட ஸ்டிக்கர் மூலமாக வாகனத்தினுடைய காற்றுத்தடை கண்ணாடியில் ஒட்டப்பட அறிவுறுத்தி அதன்படி ஒட்டி இயக்கப்படுகிறது. சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் வருகிற 12-ந்தேதி வங்கி கல்வி கடன் முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் வங்கி கல்விக்கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 12-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம். இந்த வங்கி கடன் முகாமில் தேசியமய மாக்கப்பட்ட அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்ட 17 வங்கிகள் பங்கேற்கின்றன.

    17 வங்கிகள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து ஆவணங்களை சரிபார்த்து விரைந்து கல்வி கடன் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. பொருளாதார சூழல் காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம்.

    ஏற்கனவே ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 700 மாணவர்களுக்கான உயர் கல்விக்கான உதவியை தன்னுடைய சொந்த நிதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வரும் நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வங்கிகளில் கல்வி கடன் பெற்று பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாணவர்களின் சிரமத்தை இலகுவாக்கும் வகையில் இந்த கல்வி கடன் முகாமை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருங்கிணைத்துள்ளார்.

    ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் பொருளாதார தடையால் உயர் கல்வி தொடர முடியாத நிலையில் இருக்கக்கூடாது. வங்கிகளின் மூலம் கல்வி கடன் பெற்று உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவ-மாணவிகள் இது தொடர்பான விவரங்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகி கேட்டு அறியலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது உயர்கல்வியை தொடர பயனுள்ள வகையில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார். 

    ×