என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்குழுவின் சார்பில் ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவ.வீ. மெய்யநாதன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு மெய்யநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படமாட்டாது என்றும், எரிபொருள் பரிசோதனைக்காக ஓ.என். ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் கடந்த ஆண்டு டிசம்பருக்குள் விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதையும் மீறி 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கும், நிலத்தை திருப்பி கொடுக்காததற்கும் தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
இத்தகைய நிலையை தெரிவிப்பதோடு, நெடுவாசல் திட்டத்தை கைவிடுவதாக ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனமே விருப்பம் தெரிவித்துள்ளதால், மத்திய அரசு இத்திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை 14-ந்தேதி கலெக்டரை சந்திக்க உள்ளோம்.
அதன்பிறகு இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தையும் சந்திக்க உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 100 கிராம மக்களை திரட்டி மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #neduvasalprotest #Hydrocarbonproject
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் நாட்டுப்படகு மீன்பிடிதளம் உள்ளது. விசைப்படகு மீனவர்களுக்கு தடைக்காலம் உள்ளதால் நாட்டுப் படகு மீனவர்கள் மட்டும் கடலில் மீன் பிடித்து வருகின்றனர். குறைந்த அளவிலான நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டும் கட்டுமாவடி,மணமேல்குடி மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருவதால் மீன்களின் விலை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது நாட்டுப்படகு மீனவர்கள் நண்டு வலையுடன் கடலுக்கு செல்வதால் நண்டுகளின் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு நண்டுகள் அதிகமாக விற்பனைக்கு வருகிறது.
இதனை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி அதனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். மருத்துவகுணம் வாய்ந்த இந்த நண்டுகள் வெளிமாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனையாவதால் உள்ளூர் வியாபாரிகள் ஏராளமாக வாங்கி அனுப்பி வருகின்றனர். மேலும் நண்டுகளின் தேவையும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு நண்டு வலையுடன் சென்று பிடித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொன்னமராவதி:
சிவகங்கை மாவட்டத்தில் வி.ஏ.ஓ.க்களுக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டதை கண்டித்து தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னமராவதியில் தாலுகா தலைவர் முருகேசன் தலைமை வகித்தார், செயலர் ஹேமலதா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாண்டியன், கோட்டச் செயலர் விஜயா, பொருளாளர் சண்முகம் துணைத்தலைவர் சரவணன், துணைச் செயலர் ரெங்கராஜ், அமைப்புச் செயலர் சவுந்திர பாண்டியன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் காளையார் கோயில்,இளையான்குடி தாலுகாக்களில் முறைகேடுகள் நடந்ததாக வி.ஏ.ஓ க்களுக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க முடிவு செய்த மத்திய அரசு அதற்கான அனுமதியை ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி வழங்கியது.
இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நெடுவாசல் நாடியம்மன் கோவில் திடலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு என்ற அமைப்பினை தொடங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 22 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதியளித்ததை தொடர்ந்து இரண்டு கட்டங்களாக நடந்த 175 நாள் போராட்டத்தை தற்காலிகமாக பொதுமக்கள் கைவிட்டனர்.
இந்த திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என கூறியிருந்தனர்.
இந்தநிலையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக ஜெம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று 180 நாட்களுக்குள் அதனை தொடங்கவேண்டும் என்று சட்டவிதிகள் உள்ளது.
ஆனால் தற்போது வரை அந்த திட்டம் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. நெடுவாசல் உள்ளிட்ட கிராம மக்களின் தொடர் போராட்டங்கள் திட்டம் தொடங்க காலதாமதம் ஆவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

எனவே ஜெம் நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு தங்களுக்கு நெடுவாசலை தவிர்த்து வேறு இடம் வழங்க வேண்டும் என்று மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு பதில் கூற தொடர்ந்து அந்த அமைச்சகம் காலதாமதம் செய்ததும் காரணமாக கூறப்படுகிறது.
மேலும் தமிழக அரசும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு வழங்கிய குத்தகையை தங்களுக்கு மாற்றித்தர இழுத்தடிப்பு செய்து வருவதால் தங்கள் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசல் கிராமத்தில் கைவிட முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினரும், தமிழர் நலன் பேரியக்க பொதுச்செயலாளருமான பழ.திருமுருகன் கூறியதாவது:-
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அனுமதியை ஜெம் நிறுவனத்திற்கு வழங்கிய மத்திய அரசு, 180 நாட்கள் ஆகியும் திட்டத்தை தொடங்காததால் அனுமதியை ஏற்கனவே ரத்து செய்து விட்டது. அதன்பிறகு அதே மத்திய அரசு சர்வதேச அனுமதியை வழங்கியுள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை தொடங்கலாம். எனவே ஜெம் நிறுவனம் திட்டத்தை கைவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறது.
மத்திய அரசின் எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும். நாளை மறுநாள் (12-ந்தேதி) நெடுவாசலில் ஆலோசனை கூட் டம் நடத்தி அடுத்த கட்ட தொடர் போராட்டம் குறித்து அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #HydrocarbonProject
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா தலைநகரமாகவும், சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமாகவும் விளங்குகிறது. கந்தர்வக்கோட்டையில் பல்வேறு அரசு அலுவலகங்களும் ஆண்கள்,பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மேலும் கந்தர்வக்கோட்டை அருகில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கலைக் கல்லூரி,பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
கந்தர்வக்கோட்டையில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு பணிகள் நிமித்தமாக தினசரி 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கந்தர்வக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். கந்தர்வக்கோட்டை ஊராட்சிக்கு மிகவும் குறைவான துப்புரவு பணியாளர்களே உள்ளனர். துப்புரவு பணிக்கு குறைவான சம்பளம் வழங்குவதால் புதிதாக ஆட்கள் வேலைக்கு வருவதில்லை.
குறைவான பணியாளர்களால் கடைவீதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள நீண்ட நேரமாகிறது. 7 ஆண்டுகளுக்கு முன்புவாங்கிய குப்பை அள்ளும் டிராக்டர் வாகனம் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது.
இதனால் கடைவீதிகளில் தூய்மை பணிகள் நடை பெறாமல் நகர் முழுவதும் குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன.எனவே கந்தர்வக்கோட்டைக்கு கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்கவும், குப்பை அள்ளுவதற்க்கு புதிய டிராக்டர் வாகனம் வழங்கியும் சுகாதாரத்தை காக்கா மாவட்ட ஆட்சியருக்கு வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஓட்டக்குளம், மோசக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
போட்டிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
இப்போட்டிகளில் அமைச்சர் ஜல்லிக்கட்டு உறுதி மொழியினை வாசிக்க அனைத்து மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டாக ஜல்லிகட்டு திகழ்கிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் ஓட்டக்குளம், மோசக் குடியில் ஜல்லிக் போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஓட்டக்குளம், மோசக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில் பெரும் முயற்சி எடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஓட்டக்குளம் ஜல்லிக்கட்டு போட்டியில் 700மாடுகளும், 250 மாடு பிடி வீரர்கள், மோசக்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் 1500 காளைகளும், 300 மாடுப் பிடி வீரர்களும் கலந்து கொண்டு உள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி அரசு விதிமுறைகளின் படி சிறப்பாக நடத்தி முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #Jallikattu
கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மட்டையன் பெட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி (வயது 70). இவர் நேற்று மாலை மட்டையன்பெட்டி அருகே தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையை கடக்க முயன்றார். அப்போது தஞ்சாவூரில் இருந்து வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக வெள்ளைசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெள்ளைசாமியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளைசாமி இறந்தார்.
இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் ஆரோக்கிய சாமியை கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள முனியன்வயல் பகுதியைச் சேர்ந்தவர் ஜகுபர் அலி (வயது 50). இவரது மனைவி சகர்பானு. தலால் ஆஸ்மி, ஜமீனாபானு என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ம.தி.மு.க.வின் தீவிர தொண்டரான ஜகுபர் அலி வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். பின்னர் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம், காவிரி விவகாரம் போன்ற பிரச்சனைகளில் கட்சி சார்பில் நடைபெற்று வந்த போராட்டங்களில் பங்கேற்று வந்தார். நேற்று வீட்டில் இருந்த ஜகுபர்அலி, தனது குடும்பத்தினரிடம் நீட் தேர்வு குளறுபடி குறித்து கவலையுடன் பேசியுள்ளார்.
பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற அவர், திடீரென துண்டால் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஜகுபர்அலி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீட் தேர்வு விவகாரத்தினால் ஜகுபர் அலி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சி தொண்டர் ஜகுபர்அலி தற்கொலைக்கு முயன்ற தகவல் அறிந்ததும், நேற்று நள்ளிரவு தஞ்சையில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் ஜகுபர் அலியை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

சமீப காலமாக நியூட்ரினோ, காவிரி விவகாரம், நீட் பிரச்சனை தொடர்பாக பல இளைஞர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இது வேதனைக்குரியதாக உள்ளது. இளைஞர்கள் தங்களுடைய உயிர்களை மாய்த்து கொள்ளக்கூடாது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. போராடுவோம், வாழ்ந்து போராடுவோம்.
மத்திய அரசு தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வு என்பது தமிழகத்தின் சமூக நீதிக்கான கேடு. தமிழகத்திலா இல்லை தேர்வு மையங்கள். மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடுதான் திட்டமிட்டு தேர்வு மையங்களை வேறு மாநிலத்தில் அமைத்து மாணவர்களை மத்திய அரசு பழி வாங்கியுள்ளது.
தற்போது மனித உரிமை ஆணையம் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை தற்போது கூறமுடியாது. ஆனால் நீட் தமிழகத்திற்கு தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் இருந்து வைகோ நடைபயணம் மேற்கொண்டபோது ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்தார். மேலும் விருதுநகரில் வைகோவின் உறவினர் ஒருவர் தற்கொலை செய்தார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக புதுக்கோட்டையில் ம.தி.மு.க. தொண்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #MDMK #Vaiko #NEET #NEETExam
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அனைத்து பள்ளி வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆய்வு நேற்று புதுக்கோட்டை, இலுப்பூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் பள்ளி வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கலெக்டர் கணேஷ் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், தீயணைப்புக்கருவி, முதலுதவிப்பெட்டி, டயர், சீட், கண்ணாடி, பிரேக், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் கணேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 52 பள்ளிகளை சேர்ந்த 326 பள்ளி வாகனங்களும், அறந்தாங்கி வட்டாரத்தில் உள்ள 38 பள்ளிகளை சேர்ந்த 178 பள்ளி வாகனங்களும், இலுப்பூர் வட்டாரத்தில் உள்ள 16 பள்ளிகளை சேர்ந்த 76 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 106 பள்ளிகளை சேர்ந்த 580 பள்ளி வாகனங்கள் நேற்று முதல் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் 14 பள்ளி வாகனங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சட்டரீதியான கடும் நடவடிக்கையினை உடனுக்குடன் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி வாகனங்களை பள்ளி வாகனங்களாக இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அனைத்து பள்ளிகளிலும் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய பள்ளி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தாலுகா செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச்செயலர் தினேஷ் குமார் தொடக்கவுரை ஆற்றினார். போராட்டத்தில் கந்தர்வக் கோட்டை ஊராட்சி ஒன்றியம் முழுவதும் தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தை செயல்படுத்தக்கோரியும், கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம், காந்திசிலை நிறுத்தம்,கறம்பக்குடி முக்கம் ஆகிய இடங்களில் கழிப்பறை வசதி செய்துதரக்கோரியும், கந்தர்வக்கோட்டை பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த முந்திரி தொழிற்சாலைகளில் உடனே திறக்க வேண்டும், மேலும் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விடுதலைக்குமரன் விளக்கவுரையாற்றினார். போராட்டத்தில் ஜனநாயக விவசாயிகள் சங்கம் மூக்கையன், செல்லையா,மற்றும் கலைச் செல்வன், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews






