என் மலர்
புதுக்கோட்டை
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் அருகே உள்ள ராஜகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 33). இவர் சம்பவத்தன்று இனாம்குளத்தூரில் இருந்து விராலிமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கல்குடி பாலம் அருகே வந்தபோது, அந்த வழியாக விராலூரை சேர்ந்த அரசன் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது, எதிர் பாராதவிதமாக மதியழகன் மோதினார்.
இதில் மதியழகன் படுகாயமடைந்தார். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியழகன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் உள்ள பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசுகையில், மாணவர்கள் பள்ளியின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் தாமதமாக வருவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சிபெற வேண்டும். மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் தொங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
புதுக்கோட்டை:
முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்ட பாசனதாரர் சங்கத்தினருக்கான சிறப்பு முகாம், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
முகாமில் உதவி பொறியாளர் உமாசங்கர், வங்கி அலுவலர்கள், வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் பாசனதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
குடிமராமத்து பணிகளானது பதிவு செய்யப்பட்ட பாசனதாரர்கள் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை சிறந்த முறையில் செயல்படுத்தும் வகையில் மேற்கண்ட சங்கங்கள் கூட்டு வங்கி கணக்கு தொடங்குதல், பான் எண் பெறுதல், ஜி.எஸ்.டி. எண் பெறுதல் ஆகியவை தொடர்பான சிறப்பு முகாம்கள் மாவட்டந்தோறும் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 46 பாசனதாரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதேபோல் பாசன தாரர்களுக்கு முதல்- அமைச்சரின் குடிமராமத்து திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அறந்தாங்கி, நாகுடி, பொன்பேத்தி, சுப்பிரமணியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கல்லணை கால்வாய் பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த முறை மூன்று முறை காவிரி நிரம்பியும் காவிரி கடைமடை பகுதிக்கு தண்ணிர் வரவில்லை. ஆகையால் மேற்பனைகாடு எனும் பகுதி தொடங்கி மும்பாலை வரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வருகின்ற கல்லணை கால்வாய்கடைமடை பகுதி வாய்க்கால்கள் தூர் வார படாமல் முட்புதர்கள் மண்டியும்,கஜாபுயலின் போது வாய்கால் உட்பகுதியில் சாய்ந்த மரங்களாலும் பெரும் சேதமாகி உள்ளது. அதனை குடிமரமத்து பணியின் கீழ் தூர்வாரி சரி செய்து இப்பகுதி விவசாயம் காத்திட வேண்டும் என கூறினர்.
மேலும் மாவட்ட விவசாய சங்கத்தினர் கூறுகையில், அரசால் வழங்கபடும்தேசிய ஊரக வேலை வாய்ப்பு அனைவருக்கும் சமமாக வழங்கிட வேண்டும். அது போல் மாற்றுதிறனாளிகளுக்கும் வேலை வழங்கிட வேண்டும் என கேட்டுகொண்டனர்.
கூட்டத்தில் அறந்தாங்கி கோட்டாச்சியர் குணசேகரன், அறந்தாங்கி தாசில்தார் சூரிய பிரபு ஆவுடையார்கோவில் தாசில்தார் ஜமுனா மற்றும் பல்வேறுதுறை அதிகாரிகள் மற்றும் கல்லணை கால்வாய் கடைமடை பகுதி விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் அஷ்ரப்அலி (வயது 68). இவர் அந்த பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தார். இது குறித்த புகாரின் பேரில் கடந்த 3-9-2018 அன்று ஆலங்குடி போலீசார் அஷ்ரப் அலி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி இன்று தீர்ப்பு அளித்தார். அதில், அஷ்ரப் அலிக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.7 லட்சத்தை அஷ்ரப் அலி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் மூக்கையா. இவர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த நிலையில் மூக்கையா, செல்போனில் வாட்ஸ்அப்பை பார்த்து கொண்டே பஸ்சை ஓட்டினார். அதனை பஸ்சில் பயணித்த பயணி ஒருவர், செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இதைத்தொடர்ந்து மூக்கையாவை சஸ்பெண்டு செய்து புதுக்கோட்டை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஆறுமுகம் இன்று உத்தரவிட்டார்.
வாகனங்கள் ஓட்டும் போது செல்போனில் பேசக்கூடாது என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் வாகன ஓட்டிகள் பலர் விதிமுறைகளை மீறி செல்போனில் பேசியவாறு வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இதில் சிலர் விபத்திலும் சிக்குகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அரசு பஸ் டிரைவர்கள் , செல்போனில் பேசிக்கொண்டு பஸ்சை இயக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டு பஸ்சை ஓட்டிய டிரைவர் மூக்கையா அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது போன்ற செயலில் ஈடுபடும் டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கிராமங்களில் கடந்த 25 ஆண்டுகளாக மொய்விருந்து நடத்தப்பட்டு வருகிறது. நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், திருமணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கும், விவசாயம் மற்றும் தொழில்களுக்கும் பணத்தேவை இருப்பவர்கள் இந்த மொய் விருந்தை நடத்துவதுண்டு. இந்த விருந்தில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு தனி நபரின் மொய் வசூல் ஒரு கோடி ரூபாய் வரை இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வசூலானது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து நடத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் இந்த விருந்து நடத்தப்படும். அதன்படி தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து களை கட்டியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகாட்டை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி பிரமாண்டமான அளவில் மொய் விருந்து நடத்தினார். மொய் விருந்தில் பங்கேற்பவர்கள் வழங்கும் மொய்ப்பணத்தை எண்ணுவதற்காக தனியார் வங்கி அலுவலர்கள் பணம் எண்ணும் எந்திரங்களுடன் சேவை மையத்தை அமைத்திருந்தனர். மொய் எழுதிய இடங்களிலும், வங்கி சேவை மையத்தின் அருகிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு மைய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் பங்கேற்ற 10ஆயிரம் பேருக்கு 1000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
இந்த மொய் விருந்து மூலம் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.4 கோடி வரை மொய் வசூலானது. ரூ.7 கோடி வரை வசூலாகும் என்று எதிர்பார்த்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு காரணமாக ரூ.4 கோடி வசூலானதாக கிருஷ்ணமூர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மொய் விருந்தில் வசூலான ரூ.4 கோடி பணத்தை கிருஷ்ணமூர்த்தி அவரது வங்கி கணக்கில் செலுத்தினார்.
இந்தநிலையில் நேற்றிரவு கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு அயர்ந்து தூங்கினர். இன்று அதிகாலை வீட்டில் ஏதோ சத்தம் கேட்கவே, கிருஷ்ணமூர்த்தி எழுந்து பார்வையிட்டபோது 4 மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி 4 பேரையும் பிடிக்க முயன்றார். அப்போது ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 3 பேரும் வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து பிடிபட்ட நபருக்கு கிருஷ்ணமூர்த்தி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து வடகாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் வடகாடு அருகே உள்ள அன வயல் பகுதியை சேர்ந்த சிவநேசன்(29) என்பதும், கிருஷ்ணமூர்த்தி வீட்டில் பணம் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது. சிவநேசன் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக ஒரு ஏஜென்சியிடம் பல லட்சம் பணம் கொடுத்துள்ளார். பலரிடம் கடன் வாங்கி அந்த பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் சிவநேசனுக்கு அந்த ஏஜென்சி நிறுவனத்தினர் வெளிநாட்டு வேலை வாங்கி கொடுக்காததுடன், பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பணத்தை இழந்து தவித்த சிவநேசனிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப திரும்ப கேட்டுள்ளனர். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த சிவநேசன் கொள்ளையடிக்க திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் விவசாயி கிருஷ்ணமூர்த்திக்கு மொய் விருந்து மூலம் ரூ.4 கோடி வசூலாகியுள்ள தகவலை அறிந்த அவர், அந்த பணத்தை கிருஷ்ணமூர்த்தி எப்படியும் வீட்டில்தான் வைத்திருப்பார் என்று எண்ணி நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். சத்தம் கேட்டு கிருஷ்ணமூர்த்தி எழுந்ததால் அவரின் பிடியில் சிவநேசன் சிக்கியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய அவரது நண்பர்கள் யாரென்றும் விசாரணை நடத்தி வலைவீசி தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் மொய் விருந்தில் பணம் மற்றும் உணவு பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மொய் விருந்து நடைபெறும் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ரூ.4 கோடி மொய் விருந்து வசூலான விவசாயி வீட்டில் வாலிபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், வடகாடு சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த 25 ஆண்டுகளாக மொய்விருந்து களை கட்டி வருகிறது. நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், கல்யாணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கு பணத்தேவை இருப்பவர்கள் இந்த மொய் விருந்தை நடத்துவதுண்டு. இந்த விருந்தில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு தனி நபரின் மொய் வசூல் ஒரு கோடி ரூபாய் வரை இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வசூலானது. ஆனால் இந்த ஆண்டு கஜா புயலின் பாதிப்பால் மொய் விருந்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கும் அளவைவிட மிக குறைவான தொகையே வசூலாகிறது என்கிறார்கள் விருந்து நடத்தும் நபர்கள்.

இந்த நிலையில் நேற்று வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி நேற்று பிரமாண்டமான அளவில் மொய் விருந்து நடத்தினார். இதற்காக பெரிய பந்தல் அமைக்கப்பட்டு, விருந்து வைக்கப்பட்டது. மொய் விருந்தில் பங்கேற்பவர்கள் வழங்கும் மொய்ப்பணத்தை எண்ணுவதற்காக தனியார் வங்கி அலுவலர்கள் பணம் எண்ணும் எந்திரங்களுடன் சேவை மையத்தை அமைத்திருந்தனர். சுமார் 20 இடங்களில் மொய் எழுதப்பட்டது. வசூல் செய்யப்பட்ட மொய் பணம் தனியார் வங்கி சேவை மையத்தில் எண்ணப்பட்டது. அதில் பல கள்ள நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. மொய் எழுதிய இடங்களிலும், வங்கி சேவை மையத்தின் அருகிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு மைய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த மொய் விருந்தையொட்டி, சுமார் 50 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உற்றார், உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. 200-க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு டன் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சைவ உணவு தனியாக சமைத்து தனிப்பந்தலில் பரிமாறப்பட்டது. உணவு நேரத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகளை தவிர்த்துவிட்டு அனைவருக்கும் குவளையில் தண்ணீர் கொடுக்கப்பட்டது. உணவு சமைக்கவும், விருந்து பரிமாறவும் சுமார் 100 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த மொய் விருந்திற்காக மட்டும் ரூ.15 லட்சம் வரை கிருஷ்ணமூர்த்தி செலவு செய்துள்ளார்.
இந்த நிலையில் மாலை விருந்து முடிந்த நிலையில் வசூல் செய்யப்பட்ட மொய் பணம் எண்ணப்பட்டது. அதில் ரூ.4 கோடி வரை கிடைத்திருந்தது. இந்த ஆண்டில் இதுவரை நடந்த மொய்விருந்துகளில் தனிநபரின் அதிகபட்ச மொய் வசூல் இது என்று கூறப்படுகிறது.
விருந்து சாப்பிட வந்தவர்கள் கூறுகையில், ‘கிருஷ்ணமூர்த்திக்கு அதிகபட்சமாக ரூ.7 கோடி வரை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மொய் வசூல் பாதியாக குறைந்துவிட்டது. மேலும் புயலில் விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கான வருமானம் முற்றிலும் முடங்கிவிட்டது. இதனால் கடன் வாங்கி கூட மொய் செய்ய வழியில்லை. அதனால் செய்த மொய்க்கு 4, 5 மடங்கு வரை அதிகமாக செய்ய முடியாமல், ஒரு மடங்கு மட்டும் செய்கிறோம். மொய் வசூலை நம்பி கடன் வாங்கியவர்கள் திரும்ப செலுத்துவதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது, என்றனர்.






