என் மலர்
செய்திகள்

டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய காட்சி.
தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம்
தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு புதிய சட்டத்தின் மூலம் தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டம் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நேற்று தேசிய அளவில் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் மருத்துவமனைகள் முன்பு இந்திய மருத்துவ சங்கம் சார்பில், மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து 31.7.2019 காலை 6 மணி முதல் 1.8.2019 காலை 6 மணி வரை நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று பதாகை ஒட்டப்பட்டிருந்தது.
மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளையின் சார்பில், இந்திய மருத்துவ சங்க வளாகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு டாக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் தனியார் மருத்துவர்கள் தங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 600 டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். தனியார் மருத்துவமனைகளில் உள்ள சுமார் 800 டாக்டர்கள் மருத்துவ பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. அவசர மருத்துவ சேவைகள் பிரசவம் மற்றும் உள் நோயாளிகள் பிரிவுகள் இயங்கியது. இதில் டாக்டர்கள் ராஜா, தனசேகரன், செந்தில்குமார், சாரதா மணி, விஜயலட்சுமி, சுபாஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






