என் மலர்
நாகப்பட்டினம்
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் தமிழகத்துக்கு உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதையொட்டி மேட்டூர் 2 முறை நிரம்பியது. உபரி தண்ணீர் அனைத்தும் பாசனத்துக்காக திருப்பி விடப்பட்டது.
காவிரி தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் வழியாக திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது. இங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பாக கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்தது.
இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதில் குறிப்பாக கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிட கரையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் நேற்று முன்தினம் தடுப்பு சுவர் உடைப்பு ஏற்பட்டது.
இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் கரையில் மோதி ‘எல்’ வடிவ திருப்பத்தில் சென்று திரும்பும். இதனால் ரூ.64 கோடி செலவில் ஆற்றுக்குள் 20 அடி ஆழம் முதல் 60 அடி ஆழம் வரை சிமெண்ட் கான்கிரீட் முனைகள் அமைத்து அதன்மேல் சுமர் 1200 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2013-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
இந்நிலையில் அளக்குடி கிராமத்தில் கொள்ளிட கரையில் ஏற்பட்ட உடைப்பால் சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. முதலைமேடு, முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ள மணல், மேலவாடி ஆகிய 5 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
கொள்ளிடம் ஆற்றில் தற்போது 1 லட்சம் கனஅடி வரை தண்ணீர் ஆக்ரோஷமாக பாய்ந்து செல்கிறது. இதனால் கரையில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வேகமாக ஊருக்குள் சென்றது.
இதற்கிடையே இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி கரை உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றின் தண்ணீர் வேகத்துக்கு, சீரமைப்பு பணிகள் கைகொடுக்கவில்லை.
இதையடுத்து பெரம்பலூர் மாவட்டததில் ராட்சத பாறாங்கற்கள் கொண்டு வரப்பப்பட்டு கரையோரம் அடுக்கி வைக்கப்பட்டன. அதன் மேல் மணல்மூட்டைகள் கொண்டு ராட்சத தடுப்பு போன்று அமைக்கப்பட்டது. இந்த முயற்சி ஓரளவு பலன் அளித்து வருகிறது.
இதற்கிடையே அளக்குடியில் ஏற்பட்ட கரை உடைப்பை இன்று 2-வது நாளாகவும் பொதுப் பணித்துறையினர் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் சீரமைத்து வருகின்றனர்.
இதற்கிடையே கரை உடைப்பு காரணமாக முதலைமேடு, முதலைமேடு திட்டு, நாதல்படுகை, வெள்ள மணல், மேல வாடி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் தவித்து வருகின்றனர். அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, துணிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த 5 கிராமங்களிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இவைகளை உடனடியாக மீட்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் அளக்குடி கிராமத்தில் மற்றொரு இடத்திலும் கரை உடைப்பு ஏற்பட்டது. சுமார் 7 மீட்டர் அளவுக்கு ஏற்பட்ட உடைப்பை பொதுப் பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, நாகை சிறப்பு திட்ட செயற்பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் பார்வையிட்டு அங்கேயே முகாமிட்டு உடைந்து விழும் பகுதிகளிலும் கரையின் மறுபுறம் சிதைந்துள்ள பகுதிகளிலும் பாறை கற்களை போட்டு அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கரை உடைப்பு காரணமாக அளக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு, கத்தரி, நெல் பயிர்கள் சேதமாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். #kollidamriver
நாகை மாவட்டம், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் நேற்று இரவு சீர்காழியை அடுத்த எருக்கூரில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சிதம்பரத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சீர்காழியை நோக்கி வந்தனர். சந்தேகத்தில் பேரில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது 3 பேரும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார்.
அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் அவர்கள் வெடிகுண்டுகளை வாகனத்தில் வைத்திருந்தது தெரியவந்தது. 2 டிபன் பாக்ஸ்களில் அந்த வெடிகுண்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து எருக்கூரில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள இடத்தில் அந்த டிபன் பாக்ஸ்களை வைத்துள்ளனர். அதனை சுற்றி மணல் மூட்டைகளையும் அடுக்கி வைத்துள்ளனர். டிபன் பாக்ஸ்சில் இருப்பது நாட்டு வெடிகுண்டா? சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளா? என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக ஆய்வு செய்ய திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளனர். மேலும் பிடிப்பட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த கலைவாணன் (வயது30) என்பதும், தப்பி ஓடியவர்களில் ஒருவர் எருக்கூரைச் சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு வருகிறார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் கொலை திட்டத்துடன் வந்தார்களா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் எருக்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட அதிகளவு உபரி வெள்ளநீர் நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆறு வழியாக சென்று கடலில் கலக்கிறது.
இந்தநிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பழையார் முகத்துவாரம் பகுதியில் கடலில் கலக்கும் இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் லட்சக்கணக்கான கனஅடி நீர் கடலில் கலந்து வீணாகிறது. ஒருபக்கம் வெள்ளம். மறுபக்கம் கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை பகுதிகளில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை.
இந்த 5 வாரங்களில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 242 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இதில் 93 டி.எம்.சி மேட்டூர் அணையில் தேக்கி வைத்துள்ளனர். மேட்டூரிலிருந்து கிட்டதட்ட 149டி.எம்.சி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து 15 டி.எம்.சி காவிரியில் கலந்திருக்கிறது. அமராவதியிலிருந்து 6டி.எம்.சி தண்ணீர் காவிரியில் கலந்திருக்கிறது. கிட்டத்தட்ட 170டி.எம்.சி காவிரியில் வந்துள்ளது.இதில் 60 டி.எம்.சி மட்டுமே விவசாயத்திற்கு ஆங்காங்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

நீர்மேலாண்மைக்கு அரசு முக்கியத்துவம் தரவேண்டும். கால நிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி மாறி,மாறி வரும். இது மிகப்பெரிய பிரச்சனையாக வருங்காலத்தில் வரும். அதற்கு முன் எச்சரிக்கையாக அரசு செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #PMK #AnbumaniRamadoss #KollidamRiver
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவரது மகள் குணவதி (38). இவருக்கும் தென்னம்புலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரவிச்சந்திரன் என்பவருக்கும் 3.3.14 அன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் ஊரில் தங்கி விட்டு ரவிச்சந்திரன் மலேசியா சென்று விட்டார். இந்த நிலையில் குணவதி தன் கணவர் ரவிச்சந்திரன் முதல் திருமணம் செய்து கொண்டதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆகவே அவர் மீதும், அவரை சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேதாரண்யம் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வர்ஜினியா வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன், சுப்பிரமணியன், செல்வராஜ், காமேஸ்வரத்தைச் சேர்ந்த அமுதா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வெள்ளம் சூழ்ந்துள்ள கரையோர கிராமங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி. விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் முதலைமேடு திட்டு கிராமத்திலிருந்து கொள்ளிடம் நோக்கி கார்களில் சென்று கொண்டிருந்தனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரில், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி, கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது தண்டேசநல்லூர் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது.
அதனை பார்த்த பைலட் வாகனத்தில் சென்ற அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் மெதுவாக செல்லுமாறு சைகை காட்டியும், டிராக்டர் நேராக அமைச்சர் சென்ற கார் மீது மோதியது. இதில் அமைச்சர் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் அமைச்சர் காயமின்றி உயிர் தப்பினார். பாதுகாப்பு அதிகாரிகள் டிராக்டருடன் ஆச்சாள்புரத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுனர் சிவராஜை கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் கொள்ளிடம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ‘ஒரே நாடு, வெள்ளி விழா ஆண்டு’ என்ற பிரசார ஊர்தி பிரசாரத்தை பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பாரத நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதலீடு செய்ய தகுதியுடைய நாடுகளின் பட்டியலில் 146-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 100-வது இடத்துக்கு வந்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்துவிடும்.

கர்நாடகத்தில் ஆண்டவனின் கருணையால் பெய்து வரும் மழையால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வருவது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், அந்த தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படாமல் கடலில் கலப்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோவி.சேதுராமன், மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்.பாலு, நகர தலைவர் மோடி.கண்ணன், சங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர். #CauveryWater #BJP #LaGanesan
மயிலாடுதுறை:
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் டெல்லியில் நேற்று காலமானார்.
வாஜ்பாயின் மறைவுக்கு மத்திய அரசு சார்பில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக அரசு சார்பிலும் இன்று ஒருநாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாஜ்பாய் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்து இரங்கல் தெரிவித்தனர். இதனால் நகரில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
மயிலாடுதுறையில் இன்று மாலை பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் மவுன ஊர்வலம் நடக்கிறது. இதில் அனைத்து கட்சியினர், வணிக சங்கத்தினர் கலந்து கொள்கின்றனர். இதன்பிறகு கிட்டப்பா அங்காடி முன்பு வாஜ்பாய் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதேபோல் சீர்காழி பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
கேரள மாநிலத்தில் நீடித்து வரும் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகள், உடமைகளை இழந்து தவிக்கிறார்கள்.
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர்களில் கமல் ரூ. 25 லட்சமும், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சமும் நிவாரண நிதி அளித்தனர். இதைபோல் தமிழகத்தில் பலவேறு பகுதிகளில் இருந்தும் தன்னார்வ அமைப்புகள் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இயற்கைச் சிற்றங்கள் நீங்கி, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் விரைவில் மீளவும், வெள்ளத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும், நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலய விண்மீன் ஆலயத்தில் நடந்த இந்த பிரார்த்தனையை பேராலய அதிபர் ஏ.எம்.ஏ.பிரபாகர் அடிகளார் மற்றும் உதவி பங்குத் தந்தையர்கள் முன்னின்று நடத்தி வைத்தனர். இதில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மகாராஜபுரத்திலிருந்து நாகை மாவட்டம் முருகமங்கலம் பழவாற்றில் காவிரி நீரை கொண்டு சேர்க்கும் பிரதான வாய்க்காலாக விளங்குவது மயிலம் வாய்க்கால். மயிலம் வாய்க்காலில் இருந்து பிரியும் பல்ல வாய்க்கால் வில்லியநல்லூர் கிராமத்தின் ஒரே பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
பல்லவாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் இந்த ஆண்டும் காவிரி நீர் வில்லியநல்லூர் கிராமத்துக்கு வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓமகுளத்தில் இறங்கி உடனடியாக வாய்க்காலை தூர்வாரி குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பினர்.
கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட காவிரி உபரி நீரானது பல லட்சம் கனஅடி வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் பல்ல வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாசனத்துக்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்துக்கு கூட எங்களுக்கு பயனளிக்கவில்லை. அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. பல ஆண்டுகளாக குளங்களிலும் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் 90 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறைந்தபட்சம் குளங்களில் மட்டுமாவது நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே உள்ள உம்பளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30). இவருடைய மனைவி அனுசுயா (28). திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் அனுசுயா வேலை பார்த்து வருகிறார். இதனால் சதீஷ், அவரது பெற்றோருடன் வசித்து வந்தார்.
இவர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் இறந்தார். இதுகுறித்து சதீசின், தாயார் குணசுந்தரி அளித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட உம்பளச்சேரி கீழ்பகுதியில் வசித்து வருபவர் திலகர்(வயது45). அதே ஊரை சேர்ந்தவர் சாந்தி(40). இவர்கள் 2 பேரும் தங்களது வீடுகளில் பசுமாடுகள் வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் திலகருக்கு சொந்தமான ஒரு பசுமாடு மற்றும் கன்று குட்டி ஒன்றும், சாந்திக்கு சொந்தமான பசுமாடும் அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் சம்பவத்தன்று மோய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வயலில் சாய்ந்த கிடந்த மின்கம்பத்தில் சென்ற மின்கம்பியை மாடுகள் மிதித்துள்ளன. இதனால் மாடுகளை மின்சாரம் தாக்கியது. இதில் 2 பசுமாடுகளும், கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் அங்கு வந்து பார்த்தனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 பசுமாடு, ஒரு கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






