என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, அதிமுக வேட்பாளரை விட 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
    நாகப்பட்டினம்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

    நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் 8 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, 2,23,567 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் சரவணன் 1,32,069 வாக்குகள் பெற்றிருந்தார்.

    அமமுக வேட்பாளர் செங்கொடி 30 ஆயிரத்து 197 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி 20 ஆயிரத்து 651 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குருவய்யா 5 ஆயிரத்து 79 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார்.
    மயிலாடுதுறை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    மயிலாடுதுறை தொகுதியில் 9 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 2,57,849 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் ஆசைமணி 1,47,866 வாக்குகள் பெற்றிருந்தார்.

    அமமுக வேட்பாளர் செந்தமிழன் 27 ஆயிரத்து 290 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷினி 17 ஆயிரத்து 91 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீன் 4 ஆயிரத்து 804 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்- டாக்’ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நெய்விளக்கு கிராமத்தை சேர்ந்தவர்கள் அசோகன் (வயது 22), ஆனந்த் (22), பத்மநாபம் (31).

    இவர்கள் 3 பேரும் வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வாசலில் நடந்து வருவதை போன்றும், போலீஸ் ஜீப் அருகே நின்று கொண்டு அவதூறாக பேசி கொண்டு இருப்பது போன்றும் செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த வீடியோவை ‘டிக்- டாக்’ சமூக வலைத்தள செயலியில் பதிவிட்டனர்.

    இதனால் வேதாரண்யம் பகுதியில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுபற்றிய தகவல் வேதாரண்யம் போலீசாருக்கும் தெரிய வந்தது.

    இதையடுத்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கைதான 3 வாலிபர்களை படத்தில் காணலாம்

    மேலும் ‘டிக்-டாக்’ செயலியில் வீடியோ பதிவிட்ட வாலிபர்கள் அசோகன், ஆனந்த், பத்மநாபம் ஆகியோரை கைது செய்தனர்.
    போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய ஆட்டோ டிரைவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மறையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது45). அவரது நண்பர் சங்கர். நண்பர்களான இருவரும் ஆட்டோ டிரைவராக உள்ளனர். சில நாட்களுக்கு முன் செல்வகுமார், சங்கரிடம் செலவுக்கு ரூ.100 கேட்டுள்ளார். அவர் ஆட்டோவில் இருந்த ஒரு பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்துள்ளார். பின்னர் அவர் வந்து பார்த்த போது ஆட்டோ பெட்டியில் இருந்த மொத்த பணமும் திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து சங்கர் சந்தேகத்தின் பேரில் செல்வகுமார் மீது மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மயிலாடுதுறை இந்திராநகர் பின்புறம் உள்ள மயான பகுதி அருகே ஒரு மரத்தில் நேற்றுமுன்தினம் செல்வகுமார் பிணமாக தொங்கினார். அவரை அடித்துக்கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சில் சமரசம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    நாகூரில் லோடு ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மதுபானங்களை தடுக்க வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில்  துணை சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மேற்பார்வையில் நாகூர் போலீசார் இன்று காலையில் வாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் .

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பல லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது.இதைதொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் திருச்சி உறையூர் ஜக்கம்மா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்குமார் (வயது 32) என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் கடத்தி வந்த மதுபாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாட்டில் மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மேல் என கூறப்படுகிறது.

    வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அங்கமுத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 33). நாமக்கல் மாவட்டம் மோகனூர் சின்னத்தம்பி பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் பூபதி (32). இருவரும் பொக்லைன் எந்திர டிரைவர்கள். நேற்று முன்தினம் இரவு இருவரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருப்பூண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலை காரை நகர் அருகே சென்றபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற கீழையூர் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருக்குவளை தாலுகா மேல வாழக்கரை முனியன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜ் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கள்ளிமேடு ஊராட்சியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் உப்பு தன்மையை அடைந்து விட்டது.

    இதனால் இப்பகுதிக்கு கடந்த 25 ஆண்டுக்களுக்கு முன்பு அருகில் உள்ள கிராமமான தாமரைபுலத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தனியாரிடம் இடம் வாங்கி கிணறு வைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து வழங்கப்பட்டு வந்தது.

    மேலும் இந்த கிராமத்திற்கு அனைக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் தாமரைப்புலத்திலிருந்து கள்ளிமேட்டிற்கு தண்ணீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்இணைப்புகள் பாதிக்கப்பட்டது.

    அதனை சீர் செய்வதற்கு அப்பகுதி மக்கள் விடவில்லை. எங்கள் பகுதியிலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என கூறி தடுத்துவிட்டனர். இதனால் 25 ஆண்டுகளாக தாமரைப்புலத்திலிருந்து கள்ளிமேட்டிற்கு வழங்கிவந்த குடிநீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அணைக்கரை கூட்டுகுடிநீர் திட்டத்தினை மட்டுமே நம்பி குடிநீர் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. கோடைகாலம் என்பதால் அணைக்கரை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வாரத்திற்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது.

    அதுவும் குறைந்த அளவில் வருவதால் ஒரு வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குடம் மட்டுமே பிடிக்கமுடிகிறது. இதனால் கள்ளிமேடு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

    எனவே ஊராட்சி நிர்வாகம் தாமரைப் புலத்தில் உள்ள மின்இணைப்புகளை சரிசெய்து மீண்டும் அங்கிருந்து கள்ளிமேட்டிற்கு குடிநீர் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமருகல் பகுதியில் வீடு-கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள ஆதினக்குடி, போலகம், மானாம்பேட்டை, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணம் அடிக்கடி திருட்டு போனது.

    திருமருகல் பகுதி கடைகளிலும் திருட்டு போனது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் விஜய குமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின்படி நாகூர் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் தலைமையில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் திருமருகல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

    அப்போது சீயாத்தமங்கை கைகாட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பிச் சென்றார். இதனால் போலீசார் அந்த வாலிபரை விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருமருகல் அருகிலுள்ள சேகல் வடக்கு தெருவைச் சேர்ந்த சட்டநாதன் (வயது 35) என்றும் இவர் திருப்பூரில் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது மேலும் விசாரணையில் அவர் திருமருகல் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சட்ட நாதனை கைது செய்து அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்

    நாகூர் அருகே வாகனம் மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூரை அடுத்த பாலக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் வீரமணி (வயது 55). இவர் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை பல்கலைகழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். வீரமணி கடந்த 12-ம் தேதி இரவு வீட்டில் இருந்து வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போதுகிழக்கு கடற்கரை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே சென்று காயமடைந்த வீரமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கடையூரில் காதல் திருமணம் செய்த வாலிபரை கொலை செய்தது தொடர்பாக மனைவி மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள தலைச்சங்காடு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 30). இவர் அப்புராஜபுரம்புத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் கலைமதி(25) என்பவரை காதலித்து வந்தார்.

    கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சதீஷ்குமார்-கலைமதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கலைமதி கணவருடன் கோபித்துக்கொண்டு அப்புராஜபுரம்புத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி சதீஷ்குமார் தனது மாமனார் வீட்டுக்கு அருகே உள்ள தனது தாய்மாமன் பன்னீர்செல்வம் என்பவருடைய வீட்டுக்கு சென்றார். அப்போது சதீஷ்குமாரை பார்த்த கலைமதி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கலைமதியின் தந்தை நாகராஜன் அங்கு வந்து தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சதீஷ் குமாரை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சதீஷ் குமாரின் தாய்மாமன் பன்னீர்செல்வம், பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரின் மாமனார் நாகராஜன்(58), சதீஷ்குமாரின் மனைவி கலைமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
    நாகூர்:

    நாகையை அடுத்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை கங்களாஞ்சேரி சாலை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவர்கள் கீழ்வேளூர் கோகூர் மெயின் ரோட்டை சேர்ந்த சிவகுமார் (வயது 48), சிக்கல் குற்றம்புரிந்தானிருப்பு சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (36) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிய அனுமதியின்றி வலங்கைமான் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமார், செல்லதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்ததுடன், 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம் பகுதியில் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் இன்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஓரடியங்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர். அதேபோல் தலைஞாயிறு, கரியாப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டுவந்தனர்.

    இதுகுறித்து வேதாரண்யம், கரியாப்பட்டினம், தலைஞாயிறு போலீஸ் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த தொடர் விசாரணையில் குற்றவாளிகள் யார் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நீர்மூலை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 28), அமிர்தரூபன் (24), தலைஞாயிறு பகுதியை சேர்ந்த ரமேஷ் (26), பாலசிங்கம் (26) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்கள் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்துப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×