என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சீர்காழி அருகே நடந்த சென்ற பிளஸ்-1 மாணவர் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் அருகே உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோசஸ் (வயது 50). இவர் பூங்குடி கிராமத்தை அடுத்த பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரில் சென்னை சென்று விட்டு இரவு மீண்டும் பூங்குடிக்கு திரும்ப வந்து கொண்டிருந்தார்.

    கொள்ளிடம் அருகே தைக்கால் மெயின்ரோட்டில் கார் வந்து கொண்டிருந்தது. கீழவல்லம் கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் சூர்யா (16). பிளஸ்-1 மாணவரான இவர் தனது நண்பர்களுடன் கோவில் திருவிழாவுக்கான பேனர் வைக்க தைக்கால் மெயில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பாதிரியார் மோசஸ் என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென மாணவர் சூர்யா மீது மோதியது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சூர்யா, சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் சூர்யாவுடன் வந்த கீழவல்லம் கிராமத்தை சேர்ந்த அஜய் (14), தாமோதரன் (15), சுசீந்திரன் (15), அனுபாயன் (19), நவீன்குமார் (16) ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பாதிரியார் மோசஸ்சை கைது செய்தனர்.

    சீர்காழி அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த பழைய பாளையம் சன்னதி தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் மார்கோனி (வயது 22), அதே பகுதியை சேர்ந்த மதன மகாராஜா மகன் ராஜபாண்டி (22), கருப்பையா மகன் அஜீத்குமார் (23).

    நண்பர்களான இவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை 2 மணியளவில் பழைய பாளையத்தில் இருந்து பழையாறு நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மார் கோனி ஓட்டினார்.

    அவர்கள் தர்க்காஸ் என்ற இடத்தில் சென்ற போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சாரங்கபாணி என்பவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர் மீது மார்கோனி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மார்கோனி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதில் காயம் அடைந்த சாரங்கபாணி, ராஜபாண்டி ஆகிய 2 பேரையும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாரங்கபாணி இறந்தார். ராஜபாண்டிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் அஜீத் குமார் லேசான காயத்துடன் தப்பினார்.

    இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவர்களின் தற்கொலையை ஆதரிக்கக்கூடாது என்றும் அவர்களின் மன வலிமையை அதிகரிக்க வேண்டும் என்றும் இல.கணேசன் தெரிவித்தார்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்திபெற்ற அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் எம்.பி.யுமான இல.கணேசன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு தேர்வு முடிவுகள் வரும் போதும் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. நீட் தேர்வு முடிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் குடும்பத்துக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். அதே சமயம் இது போன்ற தற்கொலையை ஆதரிக்கக்கூடாது. மாணவர்களுக்கு மன வலிமையை ஏற்படுத்த வேண்டும்.



    பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதாக கூறியவர்கள் அவரது கோட் பச்சை நிறத்தில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? கெயில் திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பது தவறானது. திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி. தற்போது அவர்கள் அதனை வேண்டும் என்றே எதிர்க்கின்றனர்.

    மேலும் 12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழை கட்டாயமாக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது தமிழே தெரியாத ஓர் இளைஞர் சமுதாயம் உருவாகி வருகிறது.

    இந்தியை விருப்பப்பாடமாக மட்டுமே கூறப்பட்டது. ஆனால் அதனை புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை ஏற்படுத்த முயன்றனர். அதனை மத்திய அரசு சரியான கோணத்தில் கையாண்டது.

    மயிலாடுதுறை- தரங்கம்பாடி ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும். அதே வேளையில் வேதாரண்யத்தில் உப்பு தொழிலுக்கு பயன்படும் வகையில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி ரெயிலை முறையாக இயக்காவிட்டால் போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக திருநெல்வேலிக்கு பகல் 11.20 மணிக்கும் தென்னக ரெயில்வே பல ஆண்டுகளாக ரெயில்களை இயக்கி வந்தது. இந்த ரெயில் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. குறிப்பாக தினசரி மயிலாடுதுறை-திருச்சி வரை ரெயிலில் மாணவர்கள், வேலைக்கு செல்வோருக்கும் மருத்துவமனைகளுக்கு செல்லும் வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

    ஆனால் மேற்படி ரெயில்ளை கடந்த ஏப்ரல் மாதம் முதலே விட்டுவிட்டு நிறுத்துவதும், இயக்குவதுமாக இருந்தது. இதற்கு காரணம் தஞ்சாவூர்-திருச்சி இடையே இருப்புப்பாதை பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக ரெயில்வே தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி இருப்புப்பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடை பெறவில்லை என்றும், தேவையில்லாமல் மயிலாடுதுறை ரெயில்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இப்பாதையில் இயங்கும் இதர ரெயில்கள் அனைத்தும் தடையின்றி இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த மாதம் முதல் இப்பிரச்சனை மக்கள் பிரச்சனையாக மாறி மயிலாடுதுறை மக்களுக்கு மட்டுமல்லாமல் குத்தாலம், கும்பகோணம், போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் போராட்டங்கள் துவங்கிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் மயிலாடுதுறையில் இருந்து இந்த ரெயிலை திருநெல்வேலி வரை தொடர்ந்து உடன் இயக்காவிட்டால் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பொது தொழிலாளர்கள் சங்க தலைவருமான ஜெக வீரபாண்டியன் மத்திய ரெயில்வே அமைச்சர் மற்றும் தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளார்.

    தஞ்சாவூர் வரை மட்டுமே ரெயில்கள் இயங்குகிறது என்பதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்லவேண்டும் என்பதால் பயணிகள், மாணவர்கள் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    எனவே மயிலாடுதுறை- திருநெல்வேலி ரெயிலை முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    வேதாரண்யம் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பி.எஸ்.என்.எல் கேபிள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் மத்திய தொலை தொடர்பு பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலிருந்து வேதாரண்யம் பகுதியில் உள்ள கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், செம்போடை, கரியாப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பூமியின் அடியில் புதைத்து கேபிள் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் பாலம் கட்டும் பணி, சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதனால் ஆங்காங்கே பள்ளம் தோண்டும் போது கேபிள் ஒயரை வெளியில் போட்டு ஊழியர்கள் சரி செய்து வருகிறார்கள். இந்நிலையில் மர்ம ஆசாமிகள் கேபிள் ஒயர்களை ஆங்காங்கே துண்டித்து எடுத்து சென்று விடுகின்றனர்.

    இது குறித்து வேதாரண்யம் பி.எஸ்.என்.எல் பொறியாளர் ராமச்சந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கேபிள் ஒயர்கள் திருட்டு போய் உள்ளதாக கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    நடத்தை சந்தேகத்தில் மனைவியை அவரது கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் செல்வவிநாயகம் (வயது38). டிரைவர். இவருடைய மனைவி பானு(வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன.

    பானுவின் நடத்தையில் செல்வவிநாயகம் சந்தேகப்பட்டு வந்தார். அடிக்கடி பானு செல்போனில் பேசி வந்ததால் அவருக்கும் அவரது கணவர் செல்வவிநாயகத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டில் வைத்து மீண்டும் பானுவுக்கும் செல்வ விநாயகத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வவிநாயகம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பானுவின் கழுத்தில் வெட்டியதாக தெரிகிறது.

    அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். பானு வெட்டிக்கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்தஅக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாய்மேடு போலீசார் பானு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பானுவின் கணவன் செல்வவிநாயகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    கொலை செய்யப்பட்ட பானுவுக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். மனைவியை அவரது கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம் பகுதியில் கடும் சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை ஆறுகாட்டுத்துறை புஷ்பவனம் வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் கடும் சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 1000 மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மீனவர்கள் பிடிக்க செல்லாததால் மீன்வரத்து முற்றிலும் குறைந்து உள்ளது. விசை படகுகளுக்கு தடை காலம் உள்ள நிலையில் சிறிய பைபர் படகுகள் மூலம் தற்போது மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். நேற்று கடும் சூறைக்காற்றினால் கரை ஓரத்தில் இருந்து படகுகளை கடலுக்கு செலுத்த முடியாமல் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இந்த கடும் காற்றையும் மீறி சென்ற ஒரு சில படகுகளில் குறைந்த அளவே மீன்கள் கிடைத்தன. இதனால் மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால் மிக குறைந்த அளவில் கிடைத்த வாவல் மீன்கள் கிலோ ரூ.1000-க்கும் காலா மீன்கள் ரூ.800-க்கும், நண்டு ரூ.300-க்கும் சிறிய வகை மீன்கள் ரூ.200-க்கும் ஏலம் போயின. காற்று தணிந்து மீன்பிடிக்க ஓரிரு நாட்கள் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று (1-ந்தேதி) சூறைக்காற்று தொடர்ந்து வீசிவருவதால் வேதாதாரண்யம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    நாகையில் இரவு நேரத்தில் செல்போனில் பேசியதால் தாயை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை சமத்துவபுரம் பாப்பாத் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 43). இவரது மனைவி வெண்ணிலா (37). இவர்களது மகன் பரத் (20). கூலித் தொழிலாளி.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு பரத், வீட்டுக்கு வந்தார். அப்போது தாய் வெண்ணிலா , செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த பரத், இரவு நேரத்தில் யாரிடம் பேசி கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இதனால் தாய்- மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது.

    தொடர்ந்து வெண்ணிலா வாக்குவாதம் செய்து பேசிக்கொண்டே இருந்ததால் பரத் கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால் திடீரென வெண்ணிலாவை தாக்கினார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன் பரத்தை கைது செய்தனர்.

    செல்போனில் பேசிய தாயை பெற்ற மகனே தாக்கி கொன்ற சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம். வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

    தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் படகு பராமரிப்பு, வலைகள் சரிசெய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மீனவர்கள் பைபர் படகுகளில் சென்றும் மீன் பிடித்து வருகின்றனர். இதில் குறைந்த அளவில் மீன்கள் கிடைப்பதால் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று முதல் கடல் சீற்றமாக உள்ளது. புழுதி காற்றும் வீசி வருகிறது. இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இன்றும் கடல் தொடர்ந்து சீற்றமாக இருந்து வருகிறது. இதனால் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

    கடல் சீற்றம் தணிந்த பிறகு தான் கடலில் பைபர் படகுகளில் சென்று மீன் பிடிக்க செல்ல முடியும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மேலும் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்டு சேதமான படகுகளை மீனவர்கள் இன்று வரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சீர்காழி அருகே வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம், தைக்கால் பகுதியில் காதர்ரியா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலுக்கு கடந்த 23-ந்தேதி ஒரு கடிதம் வந்தது. அதனை தபால்காரர் அருகில் உள்ள பிரம்பு விற்பனை கடையில் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

    அதனை கடை உரிமையாளர் ஜமாத் தலைவர் முகமது சுல்தானிடம் நேற்று இரவு கொடுத்தார். அதனை பிரித்துப் பார்த்தபோது தைக்கால் பள்ளிவாசலில் இந்த மாதம் இறுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் முகவரியில் ஆச்சாள்புரத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெயர் உள்ளது. மேலும் இந்த கடிதத்தில் 2 பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தை ஜமாத் தலைவர் முகமது சுல்தான் கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். இந்த மிரட்டல் கடிதம் வதந்தியை பரப்புவதற்காக எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் 5,79,123 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    நாகை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    மயிலாடுதுறை தொகுதியில் 14,84,348 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,91,921 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ராமலிங்கம் 5,79,123 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணி 3,26,136 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் செந்தமிழன் 66 ஆயிரத்து 401 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷினி 39 ஆயிரத்து 270 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீன் 16 ஆயிரத்து 463 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர் செல்வராசு 5,05,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    நாகை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    நாகப்பட்டினம் தொகுதியில் 13,03,060 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 9,95,947 வாக்குகள் பதிவானது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட செல்வராசு 5,05,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் 3,02,520 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் செங்கொடி 68 ஆயிரத்து 451 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி 50 ஆயிரத்து 091 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குருவையார் 14 ஆயிரத்து 077 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    ×