என் மலர்
நாகப்பட்டினம்
- கீழ்வேளூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
நாகப்பட்டினம்:
கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்
வேளூர் அருகே ஆழியூர் பிரிவு சாலையில் சிக்கவலம் தோப்பு தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 42), சிக்கல் அய்யனார்
கோவில் தெருவில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நல்லபிள்ளை மனைவி போதுமணி (55)
ஆகிய 2 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
- பலர் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான்தோப்பு நடுத்தெரு பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெருநாட்டான் தோப்பு நடுத்தெருவை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பெருநாட்டான்தோப்பு வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருக்கண்ணபுரம்,கங்களாஞ்சேரி,திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளனர்.மேலும் மழையில் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அறிவழகன் அகல்யா அறக்கட்டளையை நடத்தி வருகிறார்
- தீபாவளி முன்னிட்டு பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் 25-வது வார்டு கவுன்சில் கோடியக்காடு, கோடியக்கரை பகுதியை உள்ளடக்கியது.
இந்த வார்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த அறிவழகன் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் துணை பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார்.
இவர் தான் ஏற்படுத்தி உள்ள அகல்யா அறக்கட்ட ளையின் சார்பில் அப்பகுதி மக்களுக்கு தீபாவளி முன்னிட்டு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு கோடியக்காடு கிராமத்தில் உள்ள 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்.
கோடியக்கரை கிராமத்திற்கு விரைவில் அங்கு உள்ள குடும்ப பெண்களுக்கு இலவச சேவைகள் வழங்கப்படும்.
முன்னதாக வேதாரண்யம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவரும், 25 வது வார்டு வேதாரண்யம் ஒன்றிய கவுன்சிலருமான அறிவழகன் சட்டமன்ற உறுப்பினரை சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கிரிதரன், நாகை அ.தி.மு.க. பிரமுகர் சிவபெருமான், கோடியக்காடு அதிமுகவை சேர்ந்த தமிழ்வாணன், பக்கிரிசாமி மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- புதிய 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல், கட்டு மாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து மேலப்போலகம், வவ்வாலடி பகுதிகளிலும் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் 2 வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பால முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஆதிதிராவிடர் விடுதி தேர்வு நிலை குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.
- வேதாரண்யத்தில் மகளிர் சுய உதவி குழு பராமரிப்பு பயிற்சி நடந்தது.
- 15 சுய உதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகள் பயிற்சி கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வட்டாரத்திற்கு உட்பட்ட 2023- 24 ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழு ஊக்கநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு ஆளுமை பொறுப்புணர்வு மற்றும் புத்தக பராமரிப்பு பயிற்சி நடைபெற்றது.
மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சியில் வட்டார இயக்க மேலாளர் அம்புரோஸ்மேரி தலைமை வகித்தார் மாவட்ட மகமை அலுவலர் பிரியா முன்னிலை வகித்தார்.
இதில் 15 சுய உதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகள் பயிற்சி கலந்து கொண்டனர்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.
- மேலப்படாகை கடைவீதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மேலப்படாகை கடைவீதியில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்தனர்.
இதில் சுமார் 300 கிலோ கஞ்சா பிடிப்பட்டது.
இது தொடர்பாக 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கீழையூர் போலீசார் வீர முரசு, சசிக்குமார், சுதர்சன், விக்னேஷ், வைரகுமார், முருகானந்தம், ஹரிகிருஷ்ணன், கோபிநாதன் உள்பட 9 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.
- வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சி கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.
இந்த ஆகாயத்தாமரையினால் வடகிழக்கு பருவமழையையொட்டி மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள்புகும் அபாயம் உள்ளது.
எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் பொதுத்துறையினர் ஈடுப்பட்டனர்.
இந்த பணியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நாகை மாலி. எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- குளத்தில் முதலை இருப்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது.
- 6 மாதமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வேம்பதேவன்காடு பகுதியில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அதே பகுதியில் உள்ள புதுக்குளத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சுமார் 6 மாத்திற்கு முன்பு இந்த குளத்தில் முதலை இருப்பது பொது மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இது குறித்து கோடியக்கரை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தலைமையில் வனக்காவலர்கள் குளத்திற்கு சென்று முதலையை தேடிப்பார்த்தனர். அப்போது முதலை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் குளத்தின் கரையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. பின்னர் குளத்தில் வலைகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலையில் பொது மக்கள் அந்த வழியாக நடந்து சென்றனர். அப்போது வலையில் முதலை சிக்கியது தெரியவந்தது. இதைத் தொடந்து பொது மக்கள் கோடியக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனக்காவலர்கள் மற்றும் தீயணைப்புதுறையினர் அங்கு சென்று வலையில் சிக்கிய சுமார் 5 அடி நீள 30 கிலோ எடையுள்ள முதலையை பிடித்தனர். பின்னர் பிடிப்பட்ட முதலை கும்பகோணம் அணைக்கரை பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 6 மாதமாக பொது மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
- ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரையாற்றினார்.
- பேரணியானது திருமருகலில் தொடங்கப்பட்டு திட்டச்சேரியில் முடிவடைந்தது.
நாகப்பட்டினம்:
பெருகிவரும் வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளிலில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
திட்டச்சேரி(ப.கொந்தகை) கடை வீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர் திட்டச்சேரி (ப.கொந்தகை) கடைவீதியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி திருமருகல் கடைவீதியில் முடிக்கப்பட்டு பின்பு பொது மக்கள் மத்தியில்தலை க்கவசம் உயிர்க்கவசம் என்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விழிப்புணர்வு உரையாற்றினார்.
மீண்டும் பேரணியானது திருமருகல் கடைவீதியில் இருந்து தொடங்கப்பட்டு திட்டச்சேரி காவல் நிலை யத்தில் முடிக்கப்பட்டது.
- காயமடைந்தவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை தெற்கு பகுதியை சேர்ந்தவர் ராமையன் (வயது 82).
இவர் தனது மகன் சுப்பிரமணி யனுடன் (53) மோட்டார் சைக்கிளில் சென்றார்.
வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் பகுதிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்திருந்த ராமையன் மயக்கம் ஏற்பட்டு தவறி கீழே விழுந்து விட்டார்.
இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ராமையன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- முகாமில் பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
- பயிற்சியில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், உணவு பாதுகாப்பு மேற்பார்வை யாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமைதாங்கினார்.
தனியார் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த கார்த்திக் நாகப்பட்டினம் நகரம் மற்றும் வட்டாரத்தில் ஹோட்டல், இனிப்பகம் மற்றும் பேக்கரியில் பணிபுரிபவர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி வழங்கினார்.
நாகப்பட்டினம் நகர ஹோட்டல், தேநீர் மற்றும் இனிபக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் இரா.முருகையன் மற்றும் நாகூர் நகர வர்த்தகர் சங்க நிர்வாகி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உணவு தயாரிப்பின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தரமான மூலப்பொருட்களை பயன்படுத்துவது, தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை பாது காப்பாக வைத்திருப்பது, பரிமாறுவது உட்பட அனைத்து உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
பின்னர் பங்கேற்பாளர்கள் சந்தேகங்க ளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் 80-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர்.
முடிவில் கீழ்வேளூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனிபிரபு நன்றி கூறினார்.
- காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
- 2 சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து டீசல் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்க்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நாகூர் அருகே வெட்டாறு பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த 2 சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு உரிய அனுமதியில்லாமல் 5ஆயிரத்து 100 லிட்டர் டீசல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நாகூர் பண்டகசாலை தெருவை சேர்ந்த அரவிந்த்குமார், நாகை தோள்கிடங்கு மெயின் ரோட்டை சேர்ந்த செல்லப்பாண்டி என்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 5100 லிட்டர் டீசலையும், 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்து, அரவிந்தகுமார், செல்லப்பாண்டி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






