என் மலர்
மதுரை
- பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விவசாயிகளின் திடீர் போராட்டத்தால் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு கரும்பு, பச்சரிசி, பாசிபருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், மஞ்சள் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, ரவை, கோதுமை மற்றும் மஞ்சப்பை என 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
கடந்த ஆண்டை போலவே குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவது குறித்து அரசு அறிவிக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி மேலூர் பகுதி விவசாயிகள் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் இன்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளில் பலர் கரும்புடன் போராட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தால் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தனர்.
- பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்தவர் சேதுபாண்டி. அரசுபோக்குவரத்துக்கழக ஊழியர். இவரது மனைவி போதுமணி(வயது40). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மாதந்தோறும் ஏலச்சீட்டு பணம் செலுத்தி வந்தனர்.
உறவினர் அன்னதானம், சகோதரர் ஆறுமுகம் ஆகியோர் பொதுமக்களிடம் சீட்டுபணத்தை வசூலிப்பது வழக்கம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதுமணி லட்சக்க ணக்கில் சீட்டு பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் ஏலச்சீட்டு செலுத்தி வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக போதுமணியின் கணவர் சேதுபாண்டியிடம் கேட்டபோது சீட்டு பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். இதையடுத்து பணத்தை இழந்தவர்கள் போதுமணி, அவரது கணவர் மற்றும் சகோரர் ஆறுமுகம், உறவினர் அன்னதானம் ஆகியோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி யடைந்த சீட்டு போட்டு ஏமாந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- சிந்துப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- 1914 ஆம் ஆண்டு முதல் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு முதல் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள கிராமங்களான தும்மக்குண்டு, காங்கேயநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவலகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தாலுகா வாரியாக பத்திர பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் சூழ்நிலையில் சிந்து பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்த திருமங்கலம் தாலுகா உட்பட்ட காங்கேயநத்தம், நக்கலக்கோட்டை, பன்னீர் குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, சென்னம்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்கள் திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் இதுவரையில் செயல்பட்டு உள்ள சிந்துபட்டி சார்பதிவு அலுவலகம் செல்லம்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிந்து பட்டி, உடையாம்பட்டி, கட்ட தேவன்பட்டி, தும்மக்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதி மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு செல்லம்பட்டி செல்ல வேண்டும்.
இந்த நடைமுறைக்கு இப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செல்லம்பட்டிக்கு இடமாற்றம் செய்வதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படும். எனவே சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படாததால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிந்து பட்டி கிராமத்தில் உள்ள கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்த சார் பதிவாளர் அலுவலகம் இன்று வரை நல்ல நிலையில் இயங்கி வருவதாகவும் இங்கிருந்து செல்லம்பட்டி செல்ல வேண்டுமானால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும் எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தை இடம் மாற்றம் செய்யாமல் சிந்துபட்டியிலேயே தொடர்ந்து இயங்கி வர நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
- நாளை டெல்லியில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசனுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மதுரையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.
மதுரை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகம் அடைய செய்யவும் "பாரத் ஜோடா யாத்ரா" என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் நாட்டின் தென்முனையான கன்னியாகுமரி காந்தி மண்டபம் நுழைவாயிலில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்து தற்போது டெல்லியை நோக்கி சென்று வருகிறது.
இந்த நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாளை (24-ந் தேதி) டெல்லியில் நடைபெறும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணத்தில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று இரவு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். நாளை டெல்லியில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசனுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் கைகோர்த்து நிற்பது போன்ற புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் இந்தியாவின் மாற்றம் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு தமிழகத்தின் மாற்றம் நம்மவர் அழைக்கிறார், கை கோர்ப்போம், வலு சேர்ப்போம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட தலைவர் வியூகம் வகுத்து வருகிறார். இந்த நிலையில் தான் நாளை டெல்லியில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் எங்கள் தலைவரும் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சேருமா? என்ற பரபரப்பு நிலவி வரும் நிலையில் மதுரை நிர்வாகிகளின் இந்த பரபரப்பு போஸ்டர்கள் கூட்டணி கனவுகளை மேலும் எகிற வைத்துள்ளது.
- வளர்ப்பு யானையை பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது.
- யானையை லாரியில் ஏற்றி திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை:
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் விமலன். இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெண் யானை ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த யானைக்கு சுமதி என்று பெயர் வைத்து அரசின் அனுமதியுடன் உத்தங்குடி பகுதியில் ஒரு வீட்டில் வளர்த்து வந்தார். அந்த யானைக்கு தற்போது 58 வயதாகிறது.
இந்த நிலையில் அந்த வளர்ப்பு யானையை பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. எனவே யானையை வெளியே எங்கும் கொண்டு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்து இருந்தனர். அதையும் மீறி சில மாதங்களுக்கு முன்பு அனுமதியின்றி ராமநாதபுரத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக அந்த யானை கொண்டு செல்லப்பட்டதாகவும், இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது இதற்கிடையே வனத்துறையில் சுமதி யானைக்கான லைசென்சை புதுப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் யானையை வளர்க்க உரிய உரிமம் இல்லாமல் இருப்பதும், யானையை ஒழுங்காக பராமரிக்கவில்லை என்றும் கூறி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து யானையை மீட்டு திருச்சியில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட வன அதிகாரி குருசாமி டோப்ளா, வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் நேற்று காலை உத்தங்குடி சென்றனர்.
அந்த வளர்ப்பு யானை சுமதியை, கோர்ட்டு உத்தரவுப்படி மீட்டனர். பின்னர் லாரியில் ஏற்றி திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
- வாகனத்தில் முருகன் சிலையை வைத்து, யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- அனுமதி கோரி மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில இணைச்செயலாளர் பரத் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் ஏராளமான பேரணிகள், கூட்டங்கள், கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி வாகனத்தில் முருகன் சிலையை வைத்து, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பூசாரிகள் சிலரோடு யாத்திரையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ந் தேதி, திருச்சி மலைக்கோட்டை பகுதியில் இந்த யாத்திரையை தொடங்கி சமயபுரம், சுவாமிமலை, திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம், திருமங்கலம், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக மீண்டும் திருச்சி விராலிமலையில் 17-ந் தேதி யாத்திரையை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அனுமதி கோரி அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படஅனுமதி கோரி அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை. எனவே ஜனவரி 1 முதல் 17-ந் தேதி வரை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் யாத்திரைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கு தனக்கு வழங்கப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்திற்குள் இல்லை என்று கூறி வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தர விட்டார்.
- எம்ஜிஆர் ஒரு தெய்வ பிறவி, அவர் சிலை மீது காவித்துண்டு போடுபவர்கள் மனித பிறவி அல்ல
- இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம், இந்த இயக்கத்தை தோற்றுவித்த எம்ஜிஆர், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு தெய்வ பிறவி. அவருடைய சிலையில் காவித்துண்டை போடுபவர்கள் மனித பிறவி அல்ல, ஒரு இழிவான பிறவி. எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு தெய்வமாக வாழ்ந்தவர் அவரை கொச்சைப்படுத்துவது இழிவான பிறவிகளுக்கு உரிய குணமாகும். காவிதுண்டை எங்கு போட வேண்டுமோ அங்கு போட வேண்டும். குங்குமத்தை நெற்றியில் தான் வைக்க வேண்டும்.
அதை தரையில் போட்டு மிதிக்க கூடாது. அது போல நாடு போற்றும் மக்கள் தலைவரின் சிலைக்கு காவி துண்டு போட்டு கொச்சைப்படுத்துபவர்கள் இழிவான பிறவிகள். தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் இப்படி செயல் படுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கும்பல் எதற்காக வந்தது? ஏன் கார் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்தனர்? என்பது தெரியவில்லை.
- குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
மதுரை:
மதுரை யாகப்பாநகர் விவேகானந்தர் 5-வது தெருவில் நேற்று நள்ளிரவு 5 பேர் கும்பல் வந்தது. குடிபோதையில் இருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் மீது பெரிய கற்களை வீசினர்.
இதில் அந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. கற்களை வீசி கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விழித்தெழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது 5 பேர் கும்பல், கார் கண்ணாடிகளை அடித்து உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள், 'ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று சத்தம் போட்டனர். அதற்கு அந்த கும்பல், 'ஒழுங்கு மரியாதையாக சென்று விடுங்கள். இல்லை எனில் உங்களையும் அடித்துக் கொன்று விடுவோம்' என்று மிரட்டியது. இதனால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து வீட்டுக்குள் சென்று விட்டனர்.
மர்ம கும்பல் ரகளை குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசார் வருவதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.
அந்த கும்பல் எதற்காக வந்தது? ஏன் கார் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்தனர்? என்பது தெரியவில்லை. குடிபோதையில் அவ்வாறு ரகளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். அந்த கும்பலை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மதுரை யாகப்பா நகரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மர்மகும்பல் 10-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகளை கற்களை வீசி உடைத்தது. அந்த கும்பல் இதுவரை போலீசில் சிக்கவில்லை.
அண்ணாநகர் பகுதியில் சமூக விரோத கும்பல் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளை செய்து வரும் சமூக விரோத கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சரவணக்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
- சரவணக்குமார் தனக்கு பிறந்த குழந்தையை தன்னிடம் தந்துவிடுமாறு மனைவியிடம் கேட்டு வந்துள்ளார்.
மதுரை:
மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சரவணக்குமார் (வயது 29). கோவையில் உள்ள கண்ணாடி கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்திருந்தார்.
நேற்று மதியம் தத்தனேரி பகுதியில் இருந்து வைகை வடகரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சரவணக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால், காரில் வந்த ஒரு கும்பல் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து கிடந்த சரவணக்குமாரை, காரில் வந்த 5 பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சரவணக்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சரவணக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
சரவணக்குமாரை பிரிந்து சென்ற அவரது மனைவி பரத் என்பவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சரவணக்குமார் தனக்கு பிறந்த குழந்தையை தன்னிடம் தந்துவிடுமாறு மனைவியிடம் கேட்டு வந்துள்ளார். இது மனைவி குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற சரவணக்குமாரை காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. குழந்தையை கேட்ட விவகாரத்தில் அவரது மனைவி குடும்பத்தினர் சரவணக்குமாரை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அவரது மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படும் பரத் மற்றும் வல்லரசு உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சரவணக்குமார் கொலையில் அவரது மனைவிக்கு தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதுரையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனிப்படை போலீசார் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
மதுரை
மதுரையில் கொலை- கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள மரக்கடை அருகே, 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 2 அரிவாள், உருட்டுக்கட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் செல்லூர், கள்ளுக்கடை சந்து சேதுராமன் என்ற ஏட்டையா (வயது 27), பாக்கியநாதபுரம் நாராயணகுரு தெரு, பால்ராஜ் (32), செல்லூர் நந்தவனம், மாரியப்பன் மகன் சூரியபிரகாஷ் (19), அய்யனார் கோவில் தெரு, சக்தி பாண்டியன் மகன் ராஜவேல் (21), செல்லூர் வள்ளுவர் தெரு, பாண்டியராஜன் மகன் தங்கபாண்டி (19) என்பதும், இவர்கள் கொள்ளை அடிப்பதற்காக கண்மாய்க்கரை பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
- முகாமை வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.
மதுரை
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தி.மு.க.வினர் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) மதுரை கூடல் நகரில் உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமை வணிகவரித்து றை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.
இதில் டி.வி.எஸ்., அசோக் லைலாண்ட், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியுடைய இளைஞர்களை தேர்வு செய்து வேலை வழங்கு வதற்கான ஆணையும் வழங்குகிறார்கள்.
முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ப தினால் இளைஞர்கள் பங்கு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல். ஏ. ஆகியோர் செய்து வருகின்றனர்.
- மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மனநல சேவை திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- தமிழகம் முழுவதும் மனநோயாளிகள் நலனை பேணும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மதுரை
தமிழகம் முழுவதும் மனநோயாளிகள் நலனை பேணும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் நல்லாதரவு மன்றம் (மனம்), 'நட்புடன் உங்களோடு மனநல சேவை' ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ நிலையத்தில் இன்று காலை நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு மருத்து வமனை கருத்தரங்கு கூடத்தில் மனநல சேவைக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் அர்ஜுன் குமார், அரசு ஆஸ்பத்திரி மனநல சிகிச்சை பிரிவு துறை தலைவர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மனநல சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு 2 ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் பயிற்சிகள் தரப்பட உள்ளன.
பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மனநல பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சேவை செய்யும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதுவும் தவிர தமிழகத்தில் உள்ள அரசு மனநல மருத்துவ மையங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் 75 அவசரகால ஆம்புலன்ஸ்களும் வழங்கப்பட உள்ளன.






