என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை வடக்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் 27-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 27-ந் தேதி (செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டலம்-2 அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்னசொக்கிகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி மதுரை பேராயர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • மனிதநேயமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.

    மதுரை

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை கத்தோலிக்க கிறிஸ்தவ உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாட காத்திருக்கும் மனுகுலத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மீட்பரின் வருகையை கணித்த ஞானிகளும், வல்லுநர்களும் ஆவலோடு காத்திருந்த காலம் கனிந்த அற்புத நாள். இயேசுவின் பிறப்பு தனித்துவம் மிக்கது.

    இயேசுவின் பிறப்பால் பெத்லகேம் என்ற சிறிய இடம், உலகம் அறியும் உன்னத இடமாக மாறிப் போனது. மாடுகள் அடையும் மாட்டுத்தொழுவம் மாட்சி மை பெற்றது. இயேசு இதயத்தில் பிறக்க இடம் அளிக்க துணிந்து விட்டால் நம் வாழ்வு புனிதமடையும். சமூக அவலங்கள் அகலும். சண்டை சச்சரவுகளுக்கு துணை நிற்போருக்கு சவுக்கடி கிடைக்கும். தீவிரவாதம் வேரறுக்கப்படும்.

    புதிதாக பிறந்துள்ள இறைமகனின் அருளால், புத்தாண்டில் புதிய மாற்றத்தை கொண்டு வருவோம். இறைவன் கொண்டு வந்த அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், ஏழை களுக்கு மறுவாழ்வு போன்ற மதிப்புகளை பகிர்வோம். மனிதநேயமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.

    தோல்விகளை துரத்தி, வெற்றிகளை குவித்து. பகைமை மறந்து, சமூக அநீதிகளை அகற்றி, பெண்மையை போற்றி, சாதிகளை சாகடித்து, வறுமையை ஒழித்து, வாழ்வாங்கு வாழ்ந்திட கிறிஸ்துமஸ் திருநாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ‘‘நமது பள்ளி திட்டம்’’ குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
    • விரைவில் பொதுமக்கள் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    முதல்வரின் நமது பள்ளி திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மாநகராட்சியின் மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். கவுன்சிலர் உசிலை சிவா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சிவகாமி வரவேற்றார்.

    திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, மேஜை, நாற்காலி, கட்டிடம் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. விரைவில் பொதுமக்கள் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

    இதில் மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன், தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம், அ.தி.மு.க. பகுதி செயலாளர் முருகேசன், தே.மு.தி.க. செயற்குழு உறுப்பினர் நெடுமாறன் மற்றும் பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க. செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான நெடுமாறன், இந்த பள்ளியை மேம்படுத்துவதற்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை-அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்திருந்தார்.
    • தொடர்ந்து அந்தப்பகுதியில் பொது மக்கள் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவுநாள் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் இன்று அனுசரிக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செய லாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து அந்தப்பகுதியில் பொது மக்கள் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், ஜெ பேரவை மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், கூட்டுறவு சங்க தலைவர் வேல்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் மாயி, துணைச்செயலாளர் செல்வ குமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தி னம், பொன்.முருகன், பாலா, எம்.ஆர்.குமார், என். எஸ். பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • பசுமலையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் மதுரையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் ராம்குமார் (வயது 19). இவர் பசுமலையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று ராம்குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை கண்டித்தனர். இதில் அவர்க ளுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் கோபம் அடைந்த ராம்குமார் வீட்டை வெளியேறி அருகே உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்றார். அங்கு தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடம் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வது என்ன வென்றால், நீங்களாகவே முன்வந்து உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தூய்மை பணிகளை ஈடுபட வேண்டும்.
    • நாடு முழுவதும் தற்போது கொரோனா அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுரை பழங்கா நத்தம் உழவர் சந்தை அருகில் தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி கிஷன் ரெட்டி கலந்து கொண்டார்.

    முன்னதாக அவர் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் பழங்காநத்தம் உழவர் சந்தையில் மருத்துவ முகாமை கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது மகப்பேறு மருத்துவமனையில் துப்புரவு பணியில் மத்திய மந்திரி ஈடுபட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியஅரசு நாடு முழுவதும் ''ஸ்வச் பாரத்'' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது நாடு முழுவதும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மகாத்மா காந்தி வழியில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். சுதந்திரத்துக்கு முன்பு நாடு முழுவதும் பெரிய அளவில் சுகாதாரமின்மை நிலவியது.

    பிரதமர் மோடி ''ஸ்வச் பாரத்'' திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் நாட்டில் சுத்தம், சுகாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுத்தம்-சுகாதாரத்தை பாதுகாப்பதில் மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் தாமாகவே முன்வந்து ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வது என்ன வென்றால், நீங்களாகவே முன்வந்து உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தூய்மை பணிகளை ஈடுபட வேண்டும் என்பது தான். மாநகரின் முக்கிய பகுதிகள் மட்டுமின்றி தெருக்களிலும் தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லா விட்டால் ''ஸ்வச் பாரத்'' திட்டம் வெற்றி பெறாது.

    நாடு முழுவதும் தற்போது கொரோனா அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்தும் வகையில், மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் கொரோனா என்னும் கொடிய அரக்கனை நாட்டில் இருந்து விரட்ட முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி கிஷன் ரெட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    • மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிந்தாமணி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள்களின் எண்களை ஆய்வு செய்தபோது போலி என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை வாழைத்தோப்பை சேர்ந்த முத்து மகன் சரவணபாரதி (வயது 22), திருச்சி சுப்புர மணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் மணி (27), மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சங்கர் மகன் சீனிவாசன் (23), பாஸ்கரன் மகன் கண்ணன் (19) என தெரியவந்தது.

    இவர்கள் மீது திருச்சி, சிவகங்கை, கரூர், சிலை மான் மற்றும் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது, கூட்டுக்கொள்ளை அடித்தது, வழிப்பறி செய்து நகை, பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    • மதுரையில் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
    • இவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



    மதுரை

    மதுரை கரிமேடு போலீசார் பெத்தானியாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சந்தானம் மனைவி லட்சுமி என்ற சித்ரா (வயது 32), சுந்தரபாண்டியன் மனைவி லதா (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு நின்றி ருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (23), சுபாஷ் சரவணன் (21), மணிகண்டன் (25), மகாராஜன் (23) ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து 245 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    மதுரை மாநகரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • நிவாரணத்தொகை வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் கார்களை ஜப்தி செய்ய வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு கூடல்புதூரில் சொந்தமாக நிலங்கள் இருந்தன. இந்த நிலத்தில் 1.14 ஏக்கர் மனையை ரெயில்வே நிர்வாகமும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக 1 ஏக்கர் நிலத்தை மாநக ராட்சியும் கடந்த 1973-ம் ஆண்டு ஆர்ஜிதம் செய்து கொண்டது.

    அப்போது அரசாங்கம் சார்பில் நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவிக்கப் பட்டது. இருந்த போதிலும் தரப்படவில்லை. எனவே கருப்பையா மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அப்போது கருப்பையாவுக்கு 20.5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும் அரசாங்கம் நிவாரணத் தொகை வழங்க முன்வரவில்லை.

    எனவே கருப்பையா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இதனைத் தொடர்ந்து கலெக்டரின் கார், கடந்த 2019-ம் ஆண்டு ஜப்தி செய்யப்பட்டது. அப்போது 2 மாத காலத்துக்குள் நிவாரண தொகை வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில், அந்த கார் மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் ெரயில்வே நிர்வாகம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து மதுரை நீதிமன்ற ஊழியர்கள் இன்று மதியம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோரின் கார்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கருப்பையா தரப்பிடம் டி.ஆர்.ஒ சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மேலூர் புலிப்பட்டி-வெள்ளிமலை சாலையை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது.
    • னியன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் யூனியனைச் சேர்ந்தது புலிப்பட்டி ஊராட்சி. இதனை அடுத்துள்ளது வெள்ளிமலைபட்டி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இங்கிருந்து வள்ளா ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் மற்றும் மேலூர் பள்ளிகளுக்கும், கல்லூரிக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என தினசரி வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் ரோடு சிதிலமடைந்து ஜல்லி கற்களாக பெயர்ந்து கிடக்கிறது.

    வெள்ளிமலை பட்டிக்கு தினசரி மேலூரில் இருந்து அரசு டவுன் பஸ் 3 முறை இயக்கப்படுகிறது. தற்போது ரோடு பெயர்ந்து குண்டும், குழியுமாக கிடப்பதால் பஸ்கள் மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    அதேபோல் இருசக்கர வாகனங்களை இயக்கவே முடியவில்லை. மேலும் அவசர சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸ் வந்து செல்ல முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

    மேலும் புலிப்பட்டி ஊராட்சியில் தெருக்களில் சாக்கடைகள் ரோடுகளில் ஆங்காங்கே செல்கின்றன. இதனால் சுகாதாரக் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு அடிப்படை தேவைகளை உடனடியாக மேலூர் யூனியன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
    • மீனவர்கள் அனைவரும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆலந்தூர்:

    புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேர் கடந்த நவம்பர் மாதம் தமிழக கடலோரப் பகுதிகளில் மீன் பிடித்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 24 பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று காலை அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழக அரசின் சார்பில்,மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் அனைவரும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • மதுரை கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.
    • ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்து வழிபாடு நடந்தது.



    மதுரை

    மதுரையில் இன்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு 108 வடை மாலைகள் சார்த்தப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் கூடலழகர் பெருமாள் கோவில் அருகே தென்மாட வீதியில் உள்ள கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.

    இன்று கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடை, வெற்றிலை மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    இன்று இரவு ஆஞ்சநேயர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பூஜை ஏற்பாடுகளை கோவில் பட்டர் பாண்டுரங்கன் செய்திருந்தார்.

    தல்லாக்குளம், சிம்மக்கல், டி.எம்.கோர்ட்டு சந்திப்பு, திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

    ×