search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் வீட்டில் வளர்த்த யானை மீட்பு- வனத்துறையினர் நடவடிக்கை
    X

    மதுரையில் வீட்டில் வளர்த்த யானை மீட்பு- வனத்துறையினர் நடவடிக்கை

    • வளர்ப்பு யானையை பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது.
    • யானையை லாரியில் ஏற்றி திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் விமலன். இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெண் யானை ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த யானைக்கு சுமதி என்று பெயர் வைத்து அரசின் அனுமதியுடன் உத்தங்குடி பகுதியில் ஒரு வீட்டில் வளர்த்து வந்தார். அந்த யானைக்கு தற்போது 58 வயதாகிறது.

    இந்த நிலையில் அந்த வளர்ப்பு யானையை பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. எனவே யானையை வெளியே எங்கும் கொண்டு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்து இருந்தனர். அதையும் மீறி சில மாதங்களுக்கு முன்பு அனுமதியின்றி ராமநாதபுரத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக அந்த யானை கொண்டு செல்லப்பட்டதாகவும், இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது இதற்கிடையே வனத்துறையில் சுமதி யானைக்கான லைசென்சை புதுப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    இந்நிலையில் யானையை வளர்க்க உரிய உரிமம் இல்லாமல் இருப்பதும், யானையை ஒழுங்காக பராமரிக்கவில்லை என்றும் கூறி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து யானையை மீட்டு திருச்சியில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட வன அதிகாரி குருசாமி டோப்ளா, வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் நேற்று காலை உத்தங்குடி சென்றனர்.

    அந்த வளர்ப்பு யானை சுமதியை, கோர்ட்டு உத்தரவுப்படி மீட்டனர். பின்னர் லாரியில் ஏற்றி திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×