search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை யாகப்பா நகரில் கார் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்த கும்பல்
    X

    மதுரை யாகப்பா நகரில் கார் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்த கும்பல்

    • கும்பல் எதற்காக வந்தது? ஏன் கார் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்தனர்? என்பது தெரியவில்லை.
    • குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    மதுரை:

    மதுரை யாகப்பாநகர் விவேகானந்தர் 5-வது தெருவில் நேற்று நள்ளிரவு 5 பேர் கும்பல் வந்தது. குடிபோதையில் இருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் மீது பெரிய கற்களை வீசினர்.

    இதில் அந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. கற்களை வீசி கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விழித்தெழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது 5 பேர் கும்பல், கார் கண்ணாடிகளை அடித்து உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள், 'ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று சத்தம் போட்டனர். அதற்கு அந்த கும்பல், 'ஒழுங்கு மரியாதையாக சென்று விடுங்கள். இல்லை எனில் உங்களையும் அடித்துக் கொன்று விடுவோம்' என்று மிரட்டியது. இதனால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து வீட்டுக்குள் சென்று விட்டனர்.

    மர்ம கும்பல் ரகளை குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசார் வருவதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

    அந்த கும்பல் எதற்காக வந்தது? ஏன் கார் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்தனர்? என்பது தெரியவில்லை. குடிபோதையில் அவ்வாறு ரகளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    அது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். அந்த கும்பலை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுரை யாகப்பா நகரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மர்மகும்பல் 10-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகளை கற்களை வீசி உடைத்தது. அந்த கும்பல் இதுவரை போலீசில் சிக்கவில்லை.

    அண்ணாநகர் பகுதியில் சமூக விரோத கும்பல் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளை செய்து வரும் சமூக விரோத கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×