என் மலர்
மதுரை
- ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினார்.
- உலகப்புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
அலங்காநல்லூர்
உலகப்புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று அலங்காநல்லூர் வாடிவாசலை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது டி.எஸ்.பி பாலசுந்தரம், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் மற்றும் விழா குழுவினர், போலீசார் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்வையாளர் கேலரி அமைப்பது, காளைகள் நிறுத்தப்படும் இடம், காளைகள் வந்து சேரும் இடம், வாடி வாசல் உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளையும் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- திருப்பரங்குன்றத்தில் பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பு தெரு பகுதி மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என்றுகோரி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்போர் நல சங்க தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். 97-வது வார்டு கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று இந்த பகுதி பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- மதுரை கூலி தொழிலாளி உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது செய்தனர்.
- சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை பாலரெங்கா புரத்தை சேர்ந்த கண்ணன் மகன் சிவகார்த்திகேயன் (வயது 19). இவர் முத்துப்பட்டி, பெருமாள் நகரில் உள்ள தோட்டத்திற்கு சென்றார்.
அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரிடம் கஞ்சா கேட்டு மிரட்டியது. இதற்கு சிவகார்த்திகேயன் மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை, பீர்பாட்டிலால் தாக்கியது. இது குறித்து சிவகார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தர விட்டார். இதன்படி தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த கும்பல் மேலும் ஒரு வாலிபரை கத்தியால் குத்தி விட்டு தப்பியது தெரிய வந்தது.
முத்துப்பட்டி, விருமாண்டி தெருவை சேர்ந்தவர் செல்வம் (40). கூலித் தொழிலாளி. நேற்று இரவு இவர் வீட்டில் இருந்தார். அங்கு 5 பேர் கும்பல் வந்தது. அவர்கள், 'காசி எங்கே?' என்று கேட்டனர். இதற்கு செல்வம், எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
ஆத்திரம் அடைந்த கும்பல், செல்வத்தை கத்தி யால் குத்தியது. மேலும் அந்த கும்பல் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பி யது.
தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முத்துப்பட்டி, வீரமுடையான் தெரு சடேஸ்வரன் மகன் நிதிஷ் (20), பார்த்தசாரதி மகன் மணிகண்டன் (23), பசுமலை, அம்பேத்கர் நகர் குமரேசன் மகன் சரத்குமார் (22), அந்தோணி மகன் சக்திவேல் (22), முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெரு ரஞ்சித்குமார் (25) ஆகியோர் கத்திக்குத்து சம்பவத்தில் தெரிய வந்தது. அவர்களை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
- ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை உலக நன்மைக்காக ஹோமம் நடந்தது. இதைத் தொடர்ந்து நம்மாழ்வார் வரவேற்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.வாசலுக்கு முன்பு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா நாராயணா, என்று கோஷமிட்டனர்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலை வலம் வந்து தீவட்டி ஊர்வலத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. அதிகாலை என்பதால் பக்தர்களுக்கு சுவாமி உருவம் கூட தெரியவில்லை. உபயதாரர் சிவஞானம்பிள்ளை குடும்பத்தினர் பிரசாதம் வழங்கினர். நவநீத கிருஷ்ணானந்த கொண்டல்ரவ்த் பாண்டுரங்க பஜனை குழுவினர், சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் பஜனைக் குழுவினர் பக்திப் பாடல்கள் பாடி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
- கள்ளழகர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
- கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் காட்சியளித்தார்.
அலங்காநல்லூர்
108 வைணவ தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை யில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 6.25 மணிக்கு உற்சவர் சுந்தரராஜ பெருமாள் வண்ணக்குடை, தீவட்டி பரிகாரங்களுடன் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர். அப்போது நம்மாழ்வார் எதிர்கொண்டு வரவேற்றார்.
சொர்க்கவாசல் திறப்பின்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என பக்தி கோஷமிட்டு சாமி கும்பிட்டனர். சொர்க்கவாசல் வழியாக சுவாமி -அம்பாள் சயன மண்டபத்தில் எழுந்தருளி னர்.
கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் இன்று காலை சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சொர்க்கவாசல் வழியாக பெருமாள் அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை நகரில் உள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இன்று காலை முதல் திரளான பக்தர்கள் குவிந்து சாமி கும்பிட்டனர். இன்று இரவு 7.15 மணிக்கு மேலவடம்போக்கி தெருவில் உள்ள சொர்க்கவாசல் வழியாக கூடலழகர் பெருமாள் எழுந்தருளுகிறார்.
இதேபோல் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதனகோபால சுவாமி கோவிலில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
- சொத்து பிரச்சினையில் சகோதரியின் வீட்டுக்கு தீவைத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள திரளியை சேர்ந்த அசோக் குமாரின் மனைவி சத்யா(வயது36), இவருடைய அண்ணன் சந்தோஷ் குமார்(39) புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். சத்யா குடியிருந்த வீட்டை அவரது தந்தை அவருக்கே எழுதி கொடுத்து விட்டார். இதனால் அண்ணன், தங்கைக்கு சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சந்தோஷ்குமார் நேற்று சத்யா வீட்டுக்கு வந்தார். சொத்து பிரச்சினை காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ்குமார், சத்யா வீட்டுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் சத்யா வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேரையூர் அருகே கோவிலில் புகுந்து வேல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
- இதுகுறித்து பேரையூர் போலீசார் ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னரெட்டிபட்டியை சேர்ந்தவர் மகாதேவன்(37). இவர் சென்னையில் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார். வருடம்தோறும் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து பாத யாத்திரை செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு மாலை அணிந்து பாதயாத்திரை செல்வதற்காக 15 தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மேலும் பழனி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ரூ. 1,500 மதிப்புள்ள பித்தளை வேல் வாங்கி சின்னா ரெட்டிபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் பூஜை செய்து வேலை கோவிலில் வைத்திருந்தார்.
மறுநாள் அதிகாலை பார்த்தபோது அந்த வேலை காணவில்லை. பல இடங்களில் தேடியும் வேல் கிடைக்காததால் மகாதேவன் பாதயாத்திரை சென்று விட்டார். பாதயாத்திரை சென்றுவிட்டு நேற்று வந்து விசாரித்த போது அல்லிகுண்டம் பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த ராமர் என்பவர் வேலை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பேரையூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
- நேற்று இரவு இவர் மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கூடக்கோவில் போலீஸ் சரகம் சின்னஉலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் கார்த்திகைசெல்வி(வயது 12). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார்.
காளிமுத்து சின்ன உலகாணி கிரா மத்தில் தோட்டத்தில் புதிதாக வீடுகட்டி உள்ளார். கட்டிட பணி முழுமை பெறாத நிலையில் அந்த வீட்டில் நேற்று இரவு கார்த்திகை செல்வி மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.
அப்ேபாது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகை செல்வி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
இதையடுத்து மாணவி கார்த்திகை செல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரையாண்டு விடுமுறை முடிந்து மதுரை மாவட்டத்தில், இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.
- மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
மதுரை
தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் 23-ந் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டும் இந்த விடுமுறை நாட்களில் வந்ததால் மாணவர்கள் உறவினர்கள் வீடுக ளுக்கும், பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.
இந்த நிலையில் நேற்று புத்தாண்டு பிறந்ததை யடுத்து இன்று 2ந்தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொறுத்த வரை 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.தொடக்கப்பள்ளி ஆசிரி யர்களுக்கு பயிற்சிகள் இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டதால் காலை வழக்கமான நேரத்தில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். இதனால் சாலை களில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மாணவ-மாணவிகள் சென்றதால் பள்ளி மற்றும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
அரையாண்டு விடுமுறை முடிந்து திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டுமென அந்தந்த பள்ளிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். இதில் ஒரு சில மாணவர்கள் முக கவசம் அணியாமல் பள்ளிக்கு வந்தனர். அவர்களையும் அணிந்து வரும்படி பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டது.
- முத்தீசுவரியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரவே அவர் பதறி போய் வங்கியில் விசாரித்த போது பணம் எடுத்திருப்பது தெரியவந்ததது.
- 40 வயது மதிக்கத்தக்க நபர் அடிக்கடி ஏ.டி.எம். மையங்களில் வந்து பணம் எடுத்து செல்வது தெரியவந்தது.
திருமங்கலம்:
திருமங்கலத்தை அடுத்துள்ள காண்டை கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி மனைவி முத்தீசுவரி(வயது 32). இவர் கடந்த அக்டோபர் 10-ந்தேதி திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். பணம் எடுக்க சென்றார்.
இவருக்கு பின்னால் நின்ற மர்மநபர் முத்தீசுவரியிடம் நைசாக பேசி தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகினார். பணம் வரவில்லை என்று கூறி தன்னிடம் இருந்த மற்றொரு கார்டை முத்தீசுவரிடம் கொடுத்து அனுப்பினார். பின்னர் அந்த மர்மநபர் முத்தீசுவரி கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து முத்தீசுவரியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரவே அவர் பதறி போய் வங்கியில் விசாரித்த போது பணம் எடுத்திருப்பது தெரியவந்ததது. இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
இதேபோன்று திருமங்கலத்தை சேர்ந்த செல்ல பாண்டி(52) என்பவரிடம் ரூ 35 ஆயிரம், கண்டுகுளத்தை சேர்ந்த சத்தியராஜ்(19) என்பவரிடம் ரூ.35 ஆயிரத்தை ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக மர்மநபர் எடுத்துள்ளார். இது குறித்தும் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் வங்கி ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் அடிக்கடி ஏ.டி.எம். மையங்களில் வந்து பணம் எடுத்து செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் மதுரை பெரியார் நிலையம் அருகே அறை எடுத்து தங்கி திருமங்கலம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தினை எடுக்கவரும் கிராமத்து மக்களிடம் பணம் எடுத்து தருவது போல் வேறு ஒரு கார்டை கொடுத்து பணத்தை நூதன முறையில் திருடுபவர் என்பது தெரியவந்தது.
அவரை தனிப்படை போலீசார் நேற்று திருமங்கலம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். அருகே பிடித்து டவுன்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது அவர் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பக்ரூதீன்(46) என்பதும், தென்மாவட்டங்களில் பல இடங்களில் ஏ.டி.எம். மையத்தில் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து 63 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பக்ரூதினை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
- 2023 புத்தாண்டு சிறப்பு திருப்பலி, ஆராதனைகளும் நடந்தன.
மதுரை
மதுரை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி, ஆராதனை நடந்தது. புதூர் புனித லூர்தன்னை ஆலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.
ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம், கூடல்நகர் தூய திரித்துவ ஆலயம், இடைவிடா சகாய அன்னை ஆலயம், அண்ணாநகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், பாஸ்டின்நகர் தூய பவுல் ஆலயம், விளாங்குடி செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன்ஹால் ரோடு தூய ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் பங்குத்தந்தையர்கள் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். சி.எஸ்.ஐ. லுத்ரன் திருச்சபை, அசெம்பிளி ஆப் காட் திருச்சபை, எச்.எம்.எஸ். காலனி புதிய ஜீவிய சபை, பைபாஸ் ரோட்டில் உள்ள ஏசு அழைக்கிறார். ஜெபகோபுரம் உள்ளிட்ட அனைத்து சபைகளிலும் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2022-ம் ஆண்டின் நன்மைகளுக்காக நன்றி வழிபாடும், அதன் பிறகு 2023 புத்தாண்டு சிறப்பு திருப்பலி, ஆராதனைகளும் நடந்தன.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொ ருவர் வாழ்த்து கூறி மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். மதுரை கோரிப்பாளையம், நெல்பேட்டை உள்பட அனைத்து பள்ளிவாசல் களிலும் இஸ்லாமியர்கள் புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.
- புத்தாண்டு கொண்டாடி விட்டு திரும்பிய வாலிபர் விபத்தில் பலியானார்.
- பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் கீழபள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் மைதீன். இவரது மகன் முகமது முஷபர் கனி(23). நேற்று இவர் நண்பர்களுடன் திருமங்கலத்தை அடுத்துள்ள மறவன்குளத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட் டத்தில் பங்கேற்றார்.
கொண்டாடத்தை முடித்துவிட்டு நள்ளிரவு 2.30 மணியளவில் அவரது நண்பர் அலெக்ஸ் பாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையம் அருகே மின்வாரிய பஸ்நிறுத்தம் அருகில் உள்ள வளைவில் வந்த போது நிலைதடுமாறியது. சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் முகமது முஷபர் கனி சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த அலெக்ஸ்பாண்டியன் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அலெக்ஸ் பாண்டியை மீட்டு மதுரை அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த முகமது முஷபர் கனியின் உடலை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.






