search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலம் ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் பணம் திருடியவர் கைது
    X

    கைதான பக்ரூதீன்

    திருமங்கலம் ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் பணம் திருடியவர் கைது

    • முத்தீசுவரியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரவே அவர் பதறி போய் வங்கியில் விசாரித்த போது பணம் எடுத்திருப்பது தெரியவந்ததது.
    • 40 வயது மதிக்கத்தக்க நபர் அடிக்கடி ஏ.டி.எம். மையங்களில் வந்து பணம் எடுத்து செல்வது தெரியவந்தது.

    திருமங்கலம்:

    திருமங்கலத்தை அடுத்துள்ள காண்டை கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி மனைவி முத்தீசுவரி(வயது 32). இவர் கடந்த அக்டோபர் 10-ந்தேதி திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். பணம் எடுக்க சென்றார்.

    இவருக்கு பின்னால் நின்ற மர்மநபர் முத்தீசுவரியிடம் நைசாக பேசி தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகினார். பணம் வரவில்லை என்று கூறி தன்னிடம் இருந்த மற்றொரு கார்டை முத்தீசுவரிடம் கொடுத்து அனுப்பினார். பின்னர் அந்த மர்மநபர் முத்தீசுவரி கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டார்.

    இதுகுறித்து முத்தீசுவரியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரவே அவர் பதறி போய் வங்கியில் விசாரித்த போது பணம் எடுத்திருப்பது தெரியவந்ததது. இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோன்று திருமங்கலத்தை சேர்ந்த செல்ல பாண்டி(52) என்பவரிடம் ரூ 35 ஆயிரம், கண்டுகுளத்தை சேர்ந்த சத்தியராஜ்(19) என்பவரிடம் ரூ.35 ஆயிரத்தை ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக மர்மநபர் எடுத்துள்ளார். இது குறித்தும் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் வங்கி ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் அடிக்கடி ஏ.டி.எம். மையங்களில் வந்து பணம் எடுத்து செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் மதுரை பெரியார் நிலையம் அருகே அறை எடுத்து தங்கி திருமங்கலம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தினை எடுக்கவரும் கிராமத்து மக்களிடம் பணம் எடுத்து தருவது போல் வேறு ஒரு கார்டை கொடுத்து பணத்தை நூதன முறையில் திருடுபவர் என்பது தெரியவந்தது.

    அவரை தனிப்படை போலீசார் நேற்று திருமங்கலம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். அருகே பிடித்து டவுன்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது அவர் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பக்ரூதீன்(46) என்பதும், தென்மாவட்டங்களில் பல இடங்களில் ஏ.டி.எம். மையத்தில் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    அவரிடம் இருந்து 63 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பக்ரூதினை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×