என் மலர்tooltip icon

    மதுரை

    • குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது ஆரியபட்டி ஏ.கண்ணியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏ.கண்ணியம்பட்டி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. தங்களது கிராமத்திற்கு குடிநீர் சீராக சப்ளை செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இருந்த போதிலும் குடிநீர் வரவில்லை என தெரிகிறது. தற்போது அந்த பகுதியில் கோவில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு உள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஏ.கண்ணியம்பட்டி கிராமமக்கள் இன்று உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். பெண்கள் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்தனர்.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் உசிலம் பட்டி-திருமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ராஜா முகமது வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜா முகமது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பெட்ரோல் குண்டு வெடித்ததில் வீட்டின் வெளியே இருந்த திரைச்சீலை எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா முகமது உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி, மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று மாலை ராஜா முகமது, தனது மனைவி ரம்ஜானுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜா முகமது ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி கீழே விழுந்தனர். இது தொடர்பாக ராஜா முகமது, விபத்தை ஏற்படுத்திய நபர்களிடம் தட்டிக்கேட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அந்த நபர்கள் தான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தந்தை- மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டம் உத்தப்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கார்மேகம் குடும்பத்திற்கும் பண விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மதியம் முருகன், மகள் நாகவல்லி ஆகியோர் வீட்டில் இருந்தனர். அங்கு வந்த கார்மேகம், மகன்கள் ராமகிருஷ்ணன், ஜெயராமன், மனைவி சுந்தரம்மாள், மகள் அபிராமி ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கும்பல் முருகனையும், அவரது மகள் நாகவல்லியையும் அரிவாளால் வெட்டியது.

    காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்மேகம், ராமகிருஷ்ணன், ஜெயராமன், சுந்தரம்மாள், அபிராமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் சுந்தராம்பாள் கொடுத்த புகாரின்பேரில் முருகன், மாரியப்பன், முருகன் மனைவி செல்வி, மாரியப்பன் மனைவி சங்கீதா, நாகவல்லி, லட்சுமி, ஈசுவரன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 53). கூலி தொழிலாளி. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதில் காலில் காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் செல்வகுமாரின் ஒரு கால் அகற்றப்பட்டது. அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று மாலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கான்பாளையம் பூசாரி தோப்பை சேர்ந்தவர் மாரியப்பன் (57). சில வாரங்களுக்கு முன்பு இவர் பூர்வீக நிலத்தை விற்றுள்ளார். இது அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. மேலும் மாரியப்பனின் காலில் ஆறாத புண் உள்ளது.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மீனாம்பாள்புரம், சத்திய மூர்த்தி தெருவை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்திய டைந்த கார்த்திக் ராஜா, நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளான ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர், பரசுராம்பட்டி, லூார்து நகர், ஆத்திக்குளம், புதூர், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதி பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவல் மதுரை மாநகராட்சி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு-சவுராஷ்டிரா கலாச்சார தொடர்பு தெரியவந்துள்ளது என்று குஜராத் மந்திரிகள் பேசினர்.
    • தமிழகம், குஜாராத்தில் உள்ள சவுராஷ்டிரா பாரம்பரியம் மற்றும் சமூகங்களை மதிக்கும் சங்கமம் ஆகும்.

    மதுரை

    தமிழகம்-சவுராஷ்டிரா இடையேயான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் காசி தமிழ் சங்க மம் நிகழ்ச்சியை நடத்தியது. இதைத்தொடர்ந்து குஜராத் மாநிலம் சார்பில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மதுரை தெப்பக் குளம் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் குஜராத் மாநில சுகாதார மந்திரி ருஷிகேஷ்பாய் படேல் கலந்து கொண்டு பேசும்போது, மதுரையில் 5 லட்சத்திற் கும் மேற்பட்ட சவுராஷ்டிரா மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தமிழ்-குஜராத் பாரம்பரியங்களை கடைப்பிடித்து வருகின்ற னர். இந்த நிகழ்ச்சி மூலம் சவுராஷ்டிரா மக்களின் வரலாற்றை தமிழர்கள் அறிந்து கொள்ள இயலும் என்றார்.

    குஜராத் மாநில தொழில்துறை மந்திரி பல்வந்த்சிங் ராஜ்புத் பேசும்போது, தமிழகம்- குஜராத் இடையே ஜவுளி, பட்டு நெசவு, கோவில்கள் மற்றும் கட்டிடக்கலை ஆகிவற்றுடன் நெருங்கிய தொடர்பு உள்ளன. இது தமிழகம், குஜாராத்தில் உள்ள சவுராஷ்டிரா பாரம்பரியம் மற்றும் சமூகங்களை மதிக்கும் சங்கமம் ஆகும்.

    சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது கடந்த 2006-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து ஒரு குழு, சவுராஷ்டிரா பல்கலை கழகத்திற்கு வந்தது. அப்போது தான் சவுராஷ்டிரா பல்கலைக்கழ கம், வர்த்தக சம்மேளனம் இணைந்து மதுரையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    மதுரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தை தொடர்ந்து குஜராத் அரசு சார்பில் கலாச்சார நிகழ்ச்சி கள், பேரணி ஆகியவை திண்டுக்கல், பரமக்குடி, சேலம், கும்ப கோணம், தஞ்சாவூர், நெல்லை, திருச்சியில் நடத்தப்படும் என்றார்.

    • கார் வியாபாரி கடத்தப்பட்டதில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.50 லட்சம் தந்தால் அவரை உயிருடன் விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

    மதுரை

    மதுரை சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் சகாதீன் (வயது 33). இவர் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவர் சம்பவத்தன்று இரவு சின்ன சொக்கிகுளத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது என்பவரை பார்ப்பதற்காக காரில் சென்றார். அப்போது அவரை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றது.

    அந்த கும்பல் சகாதீன் மனைவிக்கு போன் செய்து, "உன் கணவரை நாங்கள் கடத்தி வைத்து உள்ளோம். ரூ.50 லட்சம் தந்தால் அவரை உயிருடன் விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் பயந்துபோன அவரது மனைவி, அக்கம் பக்கத்தில் பணம் திரட்டி ரூ.1 லட்சத்தை அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். இதனை ெதாடர்ந்து அந்த கும்பல் சகாதீனை மதுரை- சிவகங்கை ரோட்டில் இறக்கி விட்டு சென்று விட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தர விட்டார். அதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெகன் நாதன் ஆலோசனைபேரில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் முதல்கட்டமாக சகாதீனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், நான் முனிச் சாலை இஸ்மாயில்புரம் எல்.கே.டி. நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்த ஆத்திப் (27) என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். அதனை நான் திருப்பி கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் ஆத்திப் கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கு போன் செய்து, தெப்பக்குளம் போலீசில் என் வாகனம் திருட்டு வழக்கில் சிக்கி உள்ளது. நீங்கள் எனக்கு ரூ.20 ஆயிரம் உடனடியாக தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து நான் அவருக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்தேன். இதனை பெற்றுக் கொண்ட அவர் திருப்பி தரவில்லை. அதனை நான் அவரிடம் கேட்டு வந்தேன். இதற்கி டையே ஆத்திப் தலைமை யிலான கும்பல் என்னை காரில் கடத்தி சென்றது என்றார்.

    இதன் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது முனிச்சாலையில் பதுங்கி இருந்த அவர்கள் பிடிபட்ட னர். விசாரணையில் அவர்கள் ஆத்திப், அப்துல் இம்ரான் (23), அகில் ஆஷிக் (24), முகம்மது சபீக் (23) என்பது தெரியவந்தது. அவர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.மேலும் தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேர் சிக்கினர். அவர்கள் பாலாஜி அண்ணாமலை (22), வாசிம் அக்ரம் (23), கார்த்திக் (24) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • கீழடி அருங்காட்சியகம் சென்றால் தமிழர்களின் பாரம்பரியத்தை அறிய முடியும் என்று அமைச்சர் கூறினார்.
    • தமிழகத்தை பொறுத்தவரை திரை உலகில் மதுரையை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் வைகை இலக்கிய திருவிழா இன்று மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு வைகை இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, வெங்கடே சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், பொது நூலகங்களின் இயக்குநர் இளம் பகவத், மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) திவ்யான் ஷுநிகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    மதுரையில் நடந்து வரும் வைகை இலக்கிய திருவிழா தமிழக எழுத்தாளர்கள், கலைஞர்களை தூண்டும் விதமாக அமைய வேண்டும். உலக தமிழ்ச் சங்கம் உருவாகிய மதுரையில் வைகை இலக்கிய விழா நடத்துவதில் தமிழகம் பெருமை கொள்கிறது.

    கீழடி அகழாய்வு மூலம் தமிழ் சமூகம் பழமை வாய்ந்தது என்பதை வாய்மொழியாக கூற வில்லை. அறிவியல் பூர்வ மாக நிரூபித்து உள்ளோம். எனவே தமிழகம் முழுவதும் வசிக்கும் மாணவர்கள், தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிய வேண்டும் என்றால் கீழடி அருங்காட்சியகத்துக்கு வாழ்நாளில் ஒரு முறை யாவது வந்து பார்க்க வேண்டும்.

    தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும். தமிழகத்தை பொறுத்தவரை திரை உலகில் மதுரையை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் எண்ணற்ற எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவேதான் அவர்களை பெருமைப் படுத்தும் வகையில் வைகை இலக்கிய விழா நடத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரையில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மதுரை

    காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை காமராஜர் சாலை காந்தி பொட்டலில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்யாகிரக போராட்டம் இன்று காலை தொடங்கியது. மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு, வர்த்தக அணி மாநில செயலாளர் நல்லமணி, மகளிரணி ஷா நவாஸ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு நியாயம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    • தி.மு.க. மாவட்ட பொருளாளர் இல்ல திருமண விழா நடக்கிறது.
    • இன்று (26-ந்தேதி) மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர், கார்த்திக் ஹவுஸிங் பிரை வேட் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் சோமசுந்தரபாண்டியன்- எஸ்.அன்புசெல்வி தம்பதிய ரின் மகனும், பொறியாளரு மான எஸ்.கார்த்திக் பாண்டியனுக்கும், ஸ்ரீராம் டிசைனர் அண்ட் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் ஏ.கணேசன்-பத்மா தம்ப தியரின் மகளும், மருத்துவரு மான ஜி.சுபாஷினிக்கும் நாளை (27-ந் தேதி) காலை 9 மணிக்கு மேல 10.30 மணிக்குள் மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத் தில் திருமணம் நடக்கிறது.

    இந்த திருமணத்தை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சரு மான பி.மூர்த்தி தலைமை யேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்து கிறார்.

    திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மாநகர் மாவட்ட செயலா ளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், எம்.எல்.ஏ.க் கள் பூமிநாதன், ஆ.வெங்க டேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இந்த விழாவில் தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகி கள், தொழிலதிபர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக இன்று (26-ந்தேதி) மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    • முன்னாள் தெற்கு மண்டல தலைவர் சாலைமுத்து இல்ல திருமணம் நடக்கிறது.
    • குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல முன்னாள் தலைவர் சாலைமுத்து. இவரது இல்ல திருமணம் பழங்காநத்தம்- திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நாளை(27-ந்தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    மணமக்கள் பிரேம்குமார் என்ற சுமன்-ஜனனி ஆகியோரது திருமணத்தை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாங்கி நடத்தி வைக்கிறார்.

    இந்த திருமண விழாவிற்கு ஐகோர்ட்டு நீதிபதி அரு. ராமலிங்கம் தலைமை தாங்குகிறார். முன்னாள் தெற்கு மண்டல தலைவர் சாலைமுத்து வரவேற்று பேசுகிறார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ். சரவணன், டாக்டர் சரவணன் மற்றும் அனைத்து கட்சி பிரமு கர்கள், முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்கள் திரளாக கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்துகிறார்கள்.

    திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை பழங்காநத்தம் வளர்மதி ராஜசேகர், கருப்பு துரை-தெய்வானை, ஜெயலலிதா பேரவை

    மாநிலத்துணை செயலாளர் வெற்றிவேல்-வெற்றி செல்வி, வைரமுத்து- கோவர்தனா, ரவிச்சந்திரன்-ரேவதி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகிறார்கள்.

    • சுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.



    சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை பெற்றது திருப்பரங்குன்றம்.இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களின் பங்குனி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று கொடியேற் றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிர மணியசுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை முன்னிலையில் கொடி கம்பத்தில் திருவிழாவிற் கான கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.இதில் பக்தர்கள் திரளான கலந்து கொள்வார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஏப்ரல் 6-ந் தேதியும், பட்டாபிஷேகம் 7-ந் தேதியும், மீனாட்சி அம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் முன்னிலை யில் சுப்பிரமணியசுவாமி- தெய்வானை திருக்கல்யாண வைபவம் 8-ந் தேதியும் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ந்தேதி நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×