என் மலர்tooltip icon

    மதுரை

    • தி.மு.க. ஆட்சியை அகற்றாவிட்டால் தமிழகம் பாலைவனமாகும் என மதுரையில் எச்.ராஜா பரபரப்பாக பேசினார்.
    • திராவிட மாடல் என்பது தமிழகத்தை குடிபோதை நாடாக மாற்றியது என்றார்.

    மதுரை

    மதுரையில் பா.ஜ.க. வக்கீல் பிரிவு பொறுப் பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் மாநில வக்கீல் அணி தலைவர் வணங்காமுடி, மாவட்ட தலைவர் அய்யப்பராஜா, துணைத்தலைவர்கள் நிரஞ்சன்குமார், அருண், தமிழரசன், அமிழ்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசுகையில், தமிழகத்தில் இந்து விரோத மனபான்மை அதிகரித்து வருகிறது. நாம் தற்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளோம். திராவிட தீயசக்திகளின் கைகளில் தமிழகம் சிக்கியுள்ளது. தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றாவிட்டால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். திராவிட மாடல் என்பது தமிழகத்தை குடிபோதை நாடாக மாற்றியது என்றார்.

    கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் ஆதிதிராவிட பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஏப்ரல் 14-ந்தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரையில் மக்கள் தேசம் கட்சியின் அகில இந்திய ஆதிதிராவிட பறையர் பேரவை ஆலோசனை கூட்டம் தலைவர் வக்கீல் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. இதில் மாநில துணைத் தலைவர் கே.பி.கே., செயலாளர் குருவிஜய், பொதுச்செயலாளர் வேதமணி, தலைமை நிலைய செயலாளர் திருமுருகன், மதுரை மாவட்ட செயலாளர் சேவியர் இருதயராஜ் மற்றும் நிர்வாகிகள் திருசெல்வம், பால்ராஜ், சுலைமான், சுரேஷ், வாசு, பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம் கிளைக்கழகம் அளவில் கட்சியை பலப்படுத்துவது, ஏப்ரல் 14-ந்தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, ஜூலை 7-ந்தேதி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தென் மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பேரணியை நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி பூமிபூஜையுடன் இன்று தொடங்கியது
    • தற்போது அந்த சிற்ப கல் தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுர பகுதியில் வீர வசந்தராயர் மண்டபம் அமைந்து உள்ளது. இங்கு கடந்த 2018-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்தராயர் மண்டபம் முற்றிலும் கருகி சேதம் அடைந்தது.

    இதனைத் தொடர்ந்து தமிழக சிற்ப கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் மண்டபத்தை பாரம்பரிய முறைப்படி புனரமைப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்காக அரசு 18.10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து இருந்தது.

    இந்த நிலையில் வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கல்குவாரியில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப் பட்டு, மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

    அந்த பிரம்மாண்ட கற்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான செங்குளம் கிராமத்தில் பத்திரமாக பாதுகாக்கப் பட்டன. அங்கு குவாரி கற்களை, சிற்பத் தூணாக மாற்றும் பணி மும்முரமாக நடந்து வந்தது. தற்போது அந்த சிற்ப கல் தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக முதல் சிற்பத் தூண் நிர்மாணிக்கும் பணி, இன்று காலை நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது. வீர வசந்தராயர் மண்டபத்தில் ஒட்டு மொத்தமாக 40 தூண்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. இதற்கான வேலைகள் படிப்படியாக தொடங்கி நடந்து வருகிறது.

    வீர வசந்த ராயர் மண்டப பூமிபூஜையின் போது கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • நியாய விலை கடையை தி.மு.க. மாவட்டச் செயலாளர் திறந்து வைத்தார்.
    • 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சி 99-வது வார்டுக்கு உட்பட்ட பாம்பன் நகரில் நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. தி.மு.க. பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுவிதா விமல் முன்னிலை வகித்தார்.புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நியாய விலை கடையை திறந்து வைத்தார்.

    மேலும் அவர் முதியோர்களுக்கு உதவித்தொகை, 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சிவனம்மாள், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தென்பழஞ்சி சுரேஷ், வட்டச்செயலாளர் சாமிவேல், பரமேஷ் பாபு, இளங்கோவன் சுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே கணவனை கொன்ற வழக்கில் தனிப்படை போலீசார் பெண்ணை தேடி வருகின்றனர்.
    • உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார்.

    திருப்பரங்குன்றம்

    தனக்கன்குளம் திருவள்ளு வர் நகரை சேர்ந்தவர் சர்க்கரை(51). இவரது மனைவி அன்னலட்சுமி(48). இவர்களது மகன்கள் சுந்தர பாரதி, ராஜ்குமார். சர்க்கரை அ.ம.மு.க.வில் பகுதி செயலாளராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். சர்க்கரை நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி தலையில் கல்லை போட்டும், உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார்.

    இதில் சர்க்கரை பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்க்கரையின் மகன்கள் சுந்தர பாரதி மற்றும் ராஜ்குமாரை சந்தேகத்தின் போது காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அன்னலட்சுமி மட்டுமே கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்தது ஏற்கத்தக்கதல்ல என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.
    • மதுரையில் நடந்த வைகை இலக்கிய திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    மதுரையில் இன்று வைகை இலக்கிய திருவிழா நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாலை கடைந்தால் வெண்ணை வரும். தமிழை கடைந்தால் தமிழர்கள் வருவார்கள். கூடல்நகரம் வரலாற்று சிறப்பு மிகுந்த நகரம். பொன் நகரம். இது தமிழனின் அடையாளம்.

    மதுரையை தாமரைப்பூ வுடன் ஒப்பிடு வார்கள். இது உலகை ஈன்ற மண். நான் இந்த மதுரை மண்ணில் பிறந்தேன் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை உண்டு. தமிழை நம்பு, அது உன்னை எப்போதும் கைவிடாது. மற்ற மொழிகளுடன் உங்களின் உறவு என்பது வயிற்று உறவாக இருக்க வேண்டும். ஆனால் தமிழுடன் நீங்கள் கொண்டு உள்ள உறவு தொப்புள் கொடி உறவாக அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து வைரமுத்து நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏற்கத்தக்கதல்ல. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன். எதிரியை களமாட விட வேண்டும். அதுதான் ஒரு போர் வீரனுக்கு அழகு. எதிராளிவுடன் நேருக்கு நேர் மோதி வெல்ல வேண்டும். அதனை விடுத்து எதிரியின் வாளை பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. எதிராளிக்கான களம் மறுக்கப்படக்கூடாது என்று தெரிவித்தார்.

    • மேலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் விபத்தில் பலியானார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள அ.வளையப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது51). அ.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.

    இன்று காலை கீரைக் கட்டுகளை விற்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மாட்டுத்தாவணி மா்ாக்கெட்டிற்கு சென்றார். பின்பு அங்கிருந்து வீட்டிற்கு திரும்பினார். அழகர் கோவில் அருகே உள்ள அப்பன் திருப்பதி பகுதியில் வந்து கொண்டிருந்த அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் ரோட்டோரம் இருந்த ஓடைக்குள் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வழியாக சென்றவர்கள் வெகு நேரத்திற்கு பின்னே தர்மராஜ் இறந்து கிடப்பதை பார்த்தனர்.

    இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிந்து தர்மராஜ் மீது மோதிய வாகனம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அலங்காநல்லூர் அருகே வாலிபரிடம் கத்தி முனையில் செயின்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • இதுபற்றிய புகாரின்பேரில் அலங்கா நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை ஆரப்பாளையம் லட்சுமணபுரத்தை சேர்ந்த வர் ராமமூர்த்தி(வயது36). சம்பவத்தன்று இவர் அலங்காநல்லூரை அடுத்த பெரியஊர்சேரி பகுதியில் ஆட்டு பண்ணை வைத்து பராமரித்து வருகி றார். இவர் இரவு நேரத்தில் ஆட்டு பண்ணையில் தங்கி இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ராமமூர்த்தி அணிந்திருந்த தங்க செயின், மோதிரம், ஒரு செல்போனை யும் பறித்து கொண்டு ஓடி விட்டனர். இதுபற்றிய புகாரின்பேரில் அலங்கா நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை,
    • மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகி பேசினார்.

    திருமங்கலம்

    மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி செயற்குழு கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் ஜி.கே நாகராஜ் பங்கேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ரத்தினசாமி, சுரேஷ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சசிகுமார், விவசாய அணி மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டி, மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ், சிறப்பு அழைப்பாளர்களாக மள்ளர்சேனை ராஜ தேவேந்திரன், அகில பாரதிய சந்த்சமிதி ஒருங்கிணைப்பாளர் வீரபூமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    பின்னர் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:-

    திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் அதிகளவில் மல்லிகை மலர் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்காக இந்த பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். நிலையூர் கண்மாயை தூர்வார வேண்டும்.

    திருமங்கலம், திருப்பரங்கு ன்றம் பகுதிகளில் பூங்காக்கள் அமைக்க வேண்டும். நீர் பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் அதிகளவில் இருப்பதால் அதனை அகற்ற வேண்டும். எம்.கல்லுப்பட்டியில் இருந்து மயிலாடுதுறை வழியாக கடமலைக்குண்டு செல்லும் மலைப்பாதையை விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும். சாப்டூரில் இருந்து சந்தையூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

    டேரா பாறை என்ற அணை 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.அதன் பின்பு 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.அதன் பின்பு இன்றுவரை இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கான ஆய்வு பணியை தொடங்க வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்ற கோரி விரைவில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் கண்துடைப்பு. உதாரணத்திற்கு ரூ.350 கோடி வாடகைக்கு விடுவதற்காக எந்திரங்களை வேளாண்மை பொறியியல் துறை அறிவித்துள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.26 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் வாங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது.

    அப்படி இருக்கும்போது மீண்டும் ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்து எந்திரங்களை வாங்கி வீணடிப்பது தவறு. தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமங்கலத்தில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்து திருமங்கலம் காந்தி சிலை முன்பு தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். நகரத் தலைவர் சவுந்தரபாண்டி, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, சுப்பிரமணி, மகேந்திரன், ராஜ்குமார், லகநாதன், மகளிரணி மாவட்ட தலைவி பிரவீனா, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் சரவண பகவான், வக்கீல் பிரிவு ராஜா, பிரசாந்த், கவுன்சிலர் அமுதா சரவணன், முருகேசன், தளபதி சேகர், பாண்டியன், சங்கன், வெஸ்டர்ன் முருகன், புதுராஜா, காசிநாதன், கணேசன், பாண்டீசுவரன், வேல்முருகன், பழனிக்குமார், தாழைக் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் வருகிற 6-ந் தேதி ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
    • 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    வாடிப்பட்டி

    ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்க மாநிலத்தலைவர் சார்லஸ் ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதி அரசாணை வெளியிட வேண்டும். மாத ஊதியத்தை அரசு கருவூலம் மூலமும், தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும்.

    அனைத்து சலுகை மற்றும் ஊராட்சி செயலாளருக்கு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் கால முறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். ஓய்வின் போது ஒட்டுமொத்த பணிக்கொ டை ரூ.2 லட்சம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்தை கருவூலத்தில் வழங்க வேண்டும்.

    தூய்மை காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் ஊராட்சி மூலம் நேரடியாக வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்ச காலமுறை ஊதியமாக ரூ.15 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் முன் கள பணியாளர்களாக பணியாற்றிய தூய்மை காவலர், தூய்மை பணியாளர், மேல்நிலைக் குடிநீர் தொட்டி இயக்குபவர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோருக்கு முதல்வ ரால் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை 2 ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு ஏப்ரல் 6-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தர்ணா போராட்டம் நடக்கிறது.

    இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலங்காநல்லூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது25), கட்டிட தொழிலாளி. இவர் இரு சக்கர வாகனத்தில் பாசிங்காபுரம் பகுதியில் இருந்து குமாரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ரங்கராஜபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி ஜெயசூர்யா ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×