என் மலர்tooltip icon

    மதுரை

    • வெள்ளரிபட்டியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடந்தது.
    • 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள வெள்ளரிபட்டியில் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மாற்று திறனாளிகளுக்கான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி போன்ற உபகரணங்கள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டு மனைபட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கல்யாணசுந்தரம், மேலூர் வட்டாட்சியர் சரவண பெருமாள், மதுரை தெற்கு வட்டாட்சியர் முத்துப்பாண்டி, சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார்கள் அனீஸ் சர்தார் (மேலூர்), நாகபூசணம் (கிழக்கு), விக்னேஷ்குமார் (தெற்கு), தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முரளிதரன், மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலக செயல்திறன் உதவியாளர் ராகவன் மற்றும் அரசு சார்ந்த துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மரங்கள் வெட்டி கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இதுபற்றி மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேடிவந்த செல்வம்(வயது62), விவசாயியான இவருக்கு உப்போடைப்பட்டியில் மாந்தோப்பு உள்ளது. இவர் அங்கு விலை உயர்ந்த மரம், செடி, கொடிகளை வளர்த்து வருகிறார்.

    இந்தநிலையில் தேடிவந்த செல்வம் சம்பவத்தன்று மதியம் மகன் விவேக்குடன் உப்போடைப்பட்டி மாந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு 5பேர் கும்பல், அவரது தோப்பில் உள்ள மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தது. அதனை விவேக் தட்டிக்கேட்டார். அதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் சரமாரியாக அவரை தாக்கினர். இதில் விவேக் படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றி மேலவளவு போலீசில் தேடிவந்த செல்வம் புகார் செய்தார். அந்த மனுவில், எனக்கும் அ.வல்லாளப்பட்டியை சேர்ந்த ராஜபிரபு, இளவரசன், சவுந்தரவேல், மகேந்திரன், கடத்திநேந்தல், கணபதிநகர் சேது ஆகிய 5 பேருக்கும் இடையில் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் அவர்கள் எனது தோட்டத்துக்குள் அத்துமீறி புகுந்து, ரூ.20லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி லாரியில் கடத்திச்சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் மேலவளவு போலீசார், புகார் கூறப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் சேது என்பவர் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு ஆளுநர் என்பவர் அரசுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும்.
    • தமிழக அரசு எந்தப் பணிகளை மக்களுக்காக முன்னெடுத்து சென்றாலும் அதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக மதுரையில் அமைக்கப்பட்டிருக்கும் கலைஞர் நூலகத்தை அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மூர்த்தி, அன்பில் மகேஷ் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அமைச்சர் ஏ. வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த கருணாநிதியின் பெயரால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறியதுடன் அதனை செயல்படுத்தும் விதமாக கடந்த 11.1.2022 அன்று காணொலி காட்சி மூலமாக கலைஞர் நூலகம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.116 கோடி மதிப்பீட்டில் இந்த நூலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நூலகத்துக்கு மேலும் கூடுதலாக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த நூலகம் தென் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்படும் வகையிலும், ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையிலும், பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஏதுவாக ஆய்வு செய்யக்கூடிய புத்தகம் உள்ளிட்ட தமிழ் புத்தகங்கள் 1 லட்சத்து 20 ஆயிரம் புத்தகங்களும், 2 லட்சத்து 25 ஆயிரம் ஆங்கில புத்தகங்களும், 6000 இ-புத்தகங்களும் இந்த நூலகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்படும். மேலும் பழைய காலத்து ஓலைச்சுவடிகளும் காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்படுகிறது.

    ஒரு ஆளுநர் என்பவர் அரசுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். அரசு போடும் திட்டங்களை விரைந்து முடிக்க அவர் ஒத்தாசையாக இருக்க வேண்டும். ஊக்கப்படுத்துபவராக இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு எந்தப் பணிகளை மக்களுக்காக முன்னெடுத்து சென்றாலும் அதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

    காலையில் திட்டத்தை தொடங்கி மாலையில் மக்களிடம் சென்றடைந்ததா? என்று தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கக்கூடிய முதலமைச்சருக்கு ஆளுநர் தொடர்ந்து முட்டுக்கட்டையாக செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாமரை செடிகள் குளங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தால் நீர் கெட்டுவிடும் என்பதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
    • மனு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிராமத்தில், கல்குளம், வண்ணான்குளம் என பல்வேறு குளங்கள் உள்ளன. இங்கு மழைக்காலங்களில் நீரை தேக்கி எங்கள் பகுதி கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த குளங்கள் சுற்று வட்டாரத்திற்கும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    இந்நிலையில் தற்போது குளங்களில் ஆகாய தாமரை செடிகள் அதிகம் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    குளத்தில் இருக்கக்கூடிய தாமரை செடிகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே கல்குளம் மற்றும் வண்ணான் குளம் ஆக்கிரமித்துள்ள தாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குளங்களில் தாமரை செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ள புகைப்படங்களை சமர்ப்பித்தார்.

    இதனைப் பார்த்த நீதிபதிகள் தாமரை செடிகள் குளங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தால் நீர் கெட்டுவிடும் என்பதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். பின்னர் மனு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • காளமேகப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
    • இன்று (6-ந்தேதி) இரவு கோவில் முன் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.

    மேலூர்

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில் பிரசித்தி பெற்ற காளமேகப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி தாயார் சன்னதி முன்பு காளமேகப் பெருமாள் ஸ்ரீதேவி- பூதேவியுடன் எழுந்தருளி னார். பின்னர் கோலாகல மாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மதுரை ஒத்தக்கடை, மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த னர்.

    இன்று (6-ந்தேதி) இரவு கோவில் முன் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடு களை கோவில் உதவி ஆணையர் செல்வி,செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்துள்ளனர்.

    • போலி ஆவணங்கள் மூலம் மின் இணைப்பு செய்த மின்வாரிய அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
    • மைதீன் மதார், தேனி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை கே.புதூர் கற்பக விநாயகர் காலனியை சேர்ந்தவர் மைதீன் மதார். இவருக்கு சுந்தர்ராஜன்பட்டியில் ஒரு வீடு உள்ளது.

    அதே பகுதியைச் சேர்ந்த முகமது யாகூப், முகமது அனிபா ஆகியோர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மூலம் மைதீன் மதார் வீட்டுக்கான மின் இணைப்பு பெற்றதாக தெரிகிறது.

    இது தொடர்பாக மைதீன் மதார், தேனி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும், அவருக்கு நிவாரணமாக மின்வாரிய அதிகாரிகள் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    • மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
    • அணிவகுப்பில் போலீசார் கவச உடை அணிந்தும், துப்பாக்கி ஏந்தியும் பங்கேற்றனர்.

    மதுரை

    கேரள மாநிலம் ஆலப்புலாவில் இருந்து கண்ணூருக்கு கடந்த 3-ந் தேதி சென்ற ரெயிலில் டி1 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் ஒரு குழந்தை, பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

    நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் போலீசில் சிக்கி உள்ளார். அவரை கேரளாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கொடி அணிவகுப்பு நடத்துவது என்று ரெயில்வே போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி மதுரை ரெயில் நிலையத்தில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் நடத்தப்பட்ட இந்த அணிவகுப்பில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.

    மதுரை ரெயில் நிலையத்தின் அனைத்து நடைமேடை மற்றும் வளாகம் வழியாக அவர்கள் அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பில் போலீசார் கவச உடை அணிந்தும், துப்பாக்கி ஏந்தியும் பங்கேற்றனர்.

    மதுரை ரெயில் நிலையம் மட்டுமின்றி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு இன்று நடந்தது.

    • மஞ்சுவிரட்டு போட்டிக்கு தடைகேட்ட வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
    • அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கி னை முடித்து வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த முரு கேசன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தி ருந்தார். அதில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள கம்பளிப்பட்டி, நாகப்பன் சீவல்பட்டி, கந்துகப்பட்டி, தாயம்பட்டி ஆகிய கிராமங் களை உள்ளடக்கியது நெல்லுக்குண்டுபட்டி கிராமமாகும்.இந்த கிராமத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு நாளை முதல் 9-ந் தேதி வரை கோயில் திருவிழாவை நடத்த கிராம மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளோம்.

    மேலும் கோயில் திருவிழாவின் கடைசி நாளில் மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு சிறுவன் ஒருவன் ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்ட காரணத்தால் கிராமத்தில் பெரும் பதற்றம் உருவாகி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது.

    அதனால், இந்த ஆண்டு கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என கிராம மக்கள் அனைவரும் முடிவு செய்துள்ளோம்.

    இந்நிலையில் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் 5 கிராம மக்களின் முடிவுக்கு எதிராக மஞ்சு விரட்டு நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். அப்படி, மஞ்சுவிரட்டு நடத்தினால் கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, மதுரை, மேலூர், நெல்லுக்குண்டு பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்த தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசுத் தரப்பில், மனுதாரர் கூறியது போன்று மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி எந்த மனுவும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கி னை முடித்து வைத்தனர்.

    • புத்தக வாசிப்பு தனிமனிதனை பண்பட்ட நபராக உருவாக்குகிறது என்று கலெக்டர் அனீஷ்சேகர் பேசினார்.
    • ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    மதுரை

    மதுரை பரவையில் உள்ள தனியார் அறிவியல் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை கலெக்டர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு இளைஞர்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களது தனித்திறனை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இளைஞர்க ளின் ஆற்றல் மிக முக்கியமானதாகும்.

    அந்த வகையில் இளைஞர்களின் படைப்பாற்றலை மெருகேற்றிடவும், தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை அதிகரித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி உள்ளது.

    குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.

    புத்தக வாசிப்பு தனிமனிதனை பண்பட்ட நபராக உருவாக்கு கிறது. சமூக பொறுப்புணர்வு கொண்ட நபராக மேம் படுத்துகிறது. அதேபோல் இளைஞர்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் பல்வேறு ஆளுமைகள், எழுத்தாளர்களுடன் நேரடியாக கலந்து ரையாடி தங்களது படைப்பாற்றலை மேம்படுத்திட வாய்ப்பளித்திடும் வகையில் இளைஞர்கள் இலக்கிய பயிற்சிப்பட்டறை, இலக்கியத்திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மதுரை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்.
    • பறக்கும் படைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு இன்று (6-ந் தேதி) தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது. முதல் தேர்வாக இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடந்தது.

    மதுரை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 945 மாணவ, மாணவிகள் இன்று 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதற்காக மாவட்டம் முழு வதும் 145 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என ஆயிர த்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று கண்காணித்த னர்.

    முன்னதாக தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தேர்வு மையங்க ளில் மாணவ, மாணவிகளுக்கு தேவைான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டி ருந்தன.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 12,755 மாணவர்களும், 12,791 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 25 ஆயிரத்து 776 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.

    இன்று காலை சரியாக 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஆனால் மாணவ- மாணவிகள் 20 நிமிடம் முன்பே தேர்வு அறைக்குள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பா ளர்கள் என 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 8,890 மாணவர்களும், 9,123 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்காக அமைக்கப்பட்டி ருந்த 101 தேர்வு மையங்களில் இன்று காலை தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் 1,500க்கும் மேற்பட்டோர் ஈடு படுத்தப்பட்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 84 தேர்வு மையங்களில் 8,359 மாணவர்களும், 8,480 மாணவிகளும், 497 தனி தேர்வர்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 501 பேர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். 1264 கண்கா ணிப்பாளர்கள், 84 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 84 துறை அலு வலர்கள், மற்றும் 148 பணியாளர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டி ருந்தனர்.

    முதல்முறையாக இன்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொண்ட பத்தாம் வகுப்பு மாணவ-மாணவி கள் தமிழ் மொழிப்பாட தேர்வை உற்சாகமாக எழுதினர். தேர்வு மையங்க ளுக்கு முன்கூட்டியே வந்தி ருந்த அவர்கள் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுதுவது குறித்து விளக்கியதை நேரில் காண முடிந்தது.

    தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மாணவ மாணவிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். துண்டு தாள் வைத்துக்கொள்வது, பிறரை பார்த்து எழுதுவது, ஆள் மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 3 ஆண்டுகள் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை எச்ச ரித்திருந்தது.

    எனவே 3 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.

    • நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக இரட்டை இலையும் அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.
    • தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மத்திய அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடாது.

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த திட்டத்தையும் அனுமதிக்கக்கூடாது. மேலும் இந்த விஷயத்தில் தேவையற்ற அரசியல் செய்ய வேண்டாம்.

    நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக இரட்டை இலையும் அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.

    ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கையில் சிக்கிய அ.தி.மு.க. கட்சி அழிவு பாதையை நோக்கி செல்கிறது. எம்.ஜி.ஆர். கையில் இருந்த இரட்டை இலை சின்னம் சினிமா வில்லன்கள் நம்பியார், வீரப்பா கையில் கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

    இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம் என்று வந்தால் அது இரட்டை இலைக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் பிடித்த கெட்ட நேரம்.

    கட்சியில் துரோகம் இழைத்ததால் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். ஆனால் துரோகத்தின் மூலமாகவே பொறுப்புக்கு வந்த ஒருவரை இயற்கையும் அனுமதிக்காது. அவரை நிச்சயம் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அம்மாவின் உண்மை தொண்டர்கள் இணைந்தால் தி.மு.க.வை நிச்சயமாக வீழ்த்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணி கோவிலில் அன்னதானம் நடந்தது.
    • குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை சிறுமலை அடிவாரத்தில் உள்ள கோம்பை கரட்டில் பாலதண்டாயு தபாணி கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


    இதையொட்டி பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை பாரதீய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி முன்னாள் மாநிலத்தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி வழங்கினார். இதேபோல் குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    ×