என் மலர்
உள்ளூர் செய்திகள்

தத்தனேரி செல்லூர் ரெயில்வே இணைப்பு பால பணிகள் தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு வரைபடத்தை வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
தமிழக அரசின் பணிகளுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்- அமைச்சர் ஏ.வ.வேலு குற்றச்சாட்டு
- ஒரு ஆளுநர் என்பவர் அரசுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும்.
- தமிழக அரசு எந்தப் பணிகளை மக்களுக்காக முன்னெடுத்து சென்றாலும் அதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.
மதுரை:
மதுரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக மதுரையில் அமைக்கப்பட்டிருக்கும் கலைஞர் நூலகத்தை அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மூர்த்தி, அன்பில் மகேஷ் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அமைச்சர் ஏ. வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த கருணாநிதியின் பெயரால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறியதுடன் அதனை செயல்படுத்தும் விதமாக கடந்த 11.1.2022 அன்று காணொலி காட்சி மூலமாக கலைஞர் நூலகம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.116 கோடி மதிப்பீட்டில் இந்த நூலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலகத்துக்கு மேலும் கூடுதலாக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த நூலகம் தென் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்படும் வகையிலும், ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையிலும், பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஏதுவாக ஆய்வு செய்யக்கூடிய புத்தகம் உள்ளிட்ட தமிழ் புத்தகங்கள் 1 லட்சத்து 20 ஆயிரம் புத்தகங்களும், 2 லட்சத்து 25 ஆயிரம் ஆங்கில புத்தகங்களும், 6000 இ-புத்தகங்களும் இந்த நூலகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்படும். மேலும் பழைய காலத்து ஓலைச்சுவடிகளும் காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்படுகிறது.
ஒரு ஆளுநர் என்பவர் அரசுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். அரசு போடும் திட்டங்களை விரைந்து முடிக்க அவர் ஒத்தாசையாக இருக்க வேண்டும். ஊக்கப்படுத்துபவராக இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு எந்தப் பணிகளை மக்களுக்காக முன்னெடுத்து சென்றாலும் அதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.
காலையில் திட்டத்தை தொடங்கி மாலையில் மக்களிடம் சென்றடைந்ததா? என்று தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கக்கூடிய முதலமைச்சருக்கு ஆளுநர் தொடர்ந்து முட்டுக்கட்டையாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






