என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆகாய தாமரைகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?- அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    ஆகாய தாமரைகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?- அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    • தாமரை செடிகள் குளங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தால் நீர் கெட்டுவிடும் என்பதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
    • மனு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிராமத்தில், கல்குளம், வண்ணான்குளம் என பல்வேறு குளங்கள் உள்ளன. இங்கு மழைக்காலங்களில் நீரை தேக்கி எங்கள் பகுதி கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த குளங்கள் சுற்று வட்டாரத்திற்கும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    இந்நிலையில் தற்போது குளங்களில் ஆகாய தாமரை செடிகள் அதிகம் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    குளத்தில் இருக்கக்கூடிய தாமரை செடிகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே கல்குளம் மற்றும் வண்ணான் குளம் ஆக்கிரமித்துள்ள தாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குளங்களில் தாமரை செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ள புகைப்படங்களை சமர்ப்பித்தார்.

    இதனைப் பார்த்த நீதிபதிகள் தாமரை செடிகள் குளங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தால் நீர் கெட்டுவிடும் என்பதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். பின்னர் மனு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×