என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரையில் பெண்கள் பாலியல் தொல்லை சட்ட விழிப்புணர்வு முகாம் பெட்கிராட் சார்பில் நடந்தது.
    • நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் பெட்கிராட் இணைந்து "வேலை பார்க்கும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள்" குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் தையல் பயிற்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமையில் நடந்தது.

    பெட்கிராட் நிர்வாகிகள் சுருளி, சாராள்ரூபி முன்னிலை வகித்தனர். பொருளாளர் கிருஷ்ண வேணி வரவேற்று பேசினார்.

    மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுபட்டியல் வழக்கறிஞர்கள் சத்தியவதி, உமா சங்கர் ஆகியோர் நடை முறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு சட்டப்படி நடவடிக்கையை எப்படி நாம் கையாள வேண்டும் என்று சட்டம் பற்றி பேசினர்.

    தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் வெள்ளைப் பாண்டி இலவச பயிற்சி பெற்ற மாணவ-மாணவி களுக்கு சான்றிதழ்கள், பணி நியமன ஆணை வழங்கி பயிற்சி முடித்த பின்பு வேலைக்கு சென்று குடும்பத் தில் ஏற்படும் பொருளாதார சுமையை குறைத்து தொழில் முனைேவாராக மாற வேண்டும் என பேசினார். துணைத்தலைவர் மார்டின் லூதர்கிங் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் கண்ணன், இந்திரா, ரம்யா, டயானா ஜான்சிராணி, சிவகாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • மதுரையில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட் பட்ட விளாங்குடி 1-வது வார்டு பொற்றாமரை நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    அந்தப்பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு, சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை.

    மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கை கண்டித்தும், பொற்றாமரை நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டுமென வலியு றுத்தியும் இன்று காலை அந்தப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு விட சென்ற பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மறியல் செய்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் வார்டு செயற்பொறியாளர் கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

    • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளது. கல்வி இடை நிற்றலை தடுப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் குழந்தைகளின் அடிப்ப டை உரிமைகள் குறித்தும், குழந்தைத் தொழி லாளர் முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி குழந்தைத் தொழி லாளர் முறை எதிர்ப்புத் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு கலெக்டர் சங்கீதா தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சவுந்தர்யா, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கார்த்தி கேயன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பீரோ விழுந்து சிறுவன் பரிதாப சாவடைந்தார்.
    • தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் கிருத்திக் வீரபத்திரன்(வயது2). இவன் சம்பவத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மர பீரோ எதிர்பாராத விதமாக சிறுவன் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த கிருத்திக் வீரபத்திரனை குடும்பத்தினர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் கிருஷ்ணன்(வயது25). இவர் மதுரை கீரைத்துறையில் உள்ள சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றிருந்த கிருஷ்ணன் அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியின் மேல் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி தொட்டிக்குள் விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
    • மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு உற்சாகமாக வந்தனர்.

    மதுரை

    தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 2-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாதால் பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் ஜூன் 14-ந் தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை இன்றும் (12-ந்தேதி)பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

    அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால் வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் புறப்பட்டு சென்றனர்.

    மதுரை மாவட்டத்தை பொருத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் என மொத்தம் 2,168 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளை 2023-24-ம் கல்வி ஆண்டான புதிய கல்வி ஆண்டில் வரவேற்கும் வகையில் பூக்களையும், இனிப்புகளையும் கொடுத்து இன்முகத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

    மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளை மலர்தூவியும், நெற்றியில் திலகமிட்டும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    மேலும் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளையும் ஆசிரிரியர்கள் வழங்கினர். இது மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அனைத்து மாணவ- மாணவிகளும் புன்னகை மலர்ந்த முகத்துடன் வகுப்பறைகளுக்கு சென்று அமர்ந்து முதல் நாள் பாடங்களை படிக்கத் தொடங்கினர்.



    மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்.

    பள்ளிகள் திறந்த இன்றே அனைத்து அரசு பள்ளிகள்,மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. மதுரை மாநகராட்சி பள்ளி களிலும் இன்று பாட புத்தகங்கள் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.

    மதுரை பொன்னகரம் பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினர். மேலும் அனைத்து பள்ளி களிலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினர்.

    கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மதுரையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் அதிகளவில் சாலைகளில் சென்றன. இரு சக்கர வாகனங்களிலும் மாணவ-மாணவிகள் அனைத்து வரப்பட்டதால் பல்வேறு இடங்களில் வாகன நெருக்கடிகள் ஏற்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்கள் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்தனர். மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், பள்ளி வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளிலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    • திருமங்கலத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (13-ந் தேதி) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறை களை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    • மூலிகை செடிகள் வியாபாரி மயங்கி விழுந்து பலியானார்.
    • அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    காஞ்சிபுரம் மாவட்டம் ஜல்லடியன் பட்டி பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (வயது61). இவர் மூலிகை செடிகளை வாங்கி வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார்.

    சுயம்பு தனது மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இதனால் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யில் உள்ள தங்கை புஷ்பவள்ளி வீட்டில் தங்கியி ருந்தார். இந்த நிலையில் மூலிகை செடிகள் வாங்கி வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு வந்தார்.

    இதற்காக அவர் கடந்த 10 நாட்களாக திருமங்கலத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் சோழவந்தான் சாலையில் உள்ள ஒருவரது தோட்டத்திற்கு நேற்று சென்ற சுயம்பு, திடீரென மயங்கி விழுந்தார்.சுயநினைவின்றி கிடந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தங்கை புஷ்பவள்ளி திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுயம்பு உடல்நலம் பாதித்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி கார் டிரைவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை சேர்ந்தவர் காசி (வயது54). கப்பலூர் தொழிற்பேட்டையில் கார் டிரைவராக வேலை பார்த்த இவர், கடந்த 5 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கூத்தியார்குண்டு கண்மாயில் குளித்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். அந்த பகுதியில் நின்றவர்கள் கண்மாய்க்குள் இறங்கி காசியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    ஆகவே கண்மாயில் காசி மூழ்கியது குறித்து திருப்பரங் குன்றம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வெகுநேர தேடுதலுக்கு பிறகு காசி பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆவல்சூரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி லதா. இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேலும் தங்களது வீட்டில் உள்ள காலி இடத்தில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வளர்த்து வந்த 6 ஆடுகளை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திருடி சென்றுவிட்டனர்.

    அதே போல் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வளர்த்து வந்த ஆட்டையும் மர்ம நபர்கள் திருடிவிட்டனர்.

    இது குறித்து லதா கொடுத்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர்.

    • மூதாட்டியின் வீட்டிற்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? என்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
    • மூதாட்டியின் எதிர் வீட்டில் வசித்து வரும் அர்ஜூன் என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் அம்பேத்கர் நகரில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். அந்த மூதாட்டியின் வீடு நேற்று வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு அந்த மூதாட்டி உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகமும் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மூதாட்டியின் வீட்டிற்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? என்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மூதாட்டியின் எதிர் வீட்டில் வசித்து வரும் அர்ஜூன்(வயது30) என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது அவர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.

    மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜூன் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் தெருத்தெருவாக சென்று குப்பைகள் மற்றும் பழைய பேப்பர்களை சேகரித்து விற்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்த அவர், தற்போது கொலை வழக்கிலும் சிக்கியுள்ளார்.

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது தி.மு.க. தான்.
    • டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்பது கொடுமையானது.

    மதுரை :

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ண தொடங்கி விட்டனர். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனால்தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடியல் கிடைக்கும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது தி.மு.க. தான்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜனதா கட்சிக்கு தி.மு.க. பல்லக்கு தூக்கி அமைச்சரவையிலும் இடம் பிடித்தது. அடுத்து வந்த மன்மோகன் சிங் ஆட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்கி முக்கிய துறைகளில் மந்திரி பதவி பெற்றது. அந்த சமயத்தில்தான் 2ஜி மூலம் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை தி.மு.க ஊழல் செய்தது.

    பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க. தேசிய அளவில் கட்சிகளை திரட்டி வருகிறது. எனவே மு.க.ஸ்டாலின்தான் பிரதமர் என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஏற்கனவே தமிழக மக்கள் அவர்களிடம் சிக்கி உள்ளனர். இது போன்று இந்திய மக்களும் சிக்க வேண்டுமா?.

    அ.தி.மு.க.விற்கு கூட்டணி என்பது துண்டு மாதிரி. ஒரு தேர்தலில் வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக கூட்டணி வைக்கிறார்கள். தி.மு.க. கடந்த தேர்தலில் தனித்து இருந்தால், எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சராக இருந்து இருப்பார். 13 கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கிறது.

    போக்குவரத்து துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு பஸ்கள் டெப்போவில் முடங்கி கிடக்கிறது. அதே போல் ரேஷன் கடைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரே ஊழியர் 3 கடைகளில் பணியாற்றுகின்றனர்.

    நடிகர் விஜய், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏழை மக்களுக்கு உணவு அளிப்பது வரவேற்கதக்கது. இதே போல் மற்ற நடிகர்களும் உதவி செய்ய வேண்டும். ரஜினி அதிக சம்பளம் வாங்குகிறார். அவரும் மக்களுக்கும் அதிகம் செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. போதை மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்பது கொடுமையானது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். பள்ளி குழந்தைகளுக்கு தி.மு.க. அரசு சத்து இல்லாத உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை தருகிறார்கள். தினமும் அதையே பள்ளி குழந்தைகள் எப்படி சாப்பிட முடியும். ஆனால் சிறை கைதிகளுக்கு சிக்கன், முட்டை என விதவிதமான உணவு வழங்குகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? தவறு செய்பவர்கள்தான் இந்த ஆட்சியில் நன்றாக வாழ்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கே நிவாரணம் தந்த அரசு அல்லவா இது?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் உலாவும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    • மண் சேறு பூசியபடி உலா வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட புறநகர் பகுதி களில் 'குரங்கு குல்லா' அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வீடுக ளுக்குள் புகுந்து பணம், நகை, பொருட்களை திருடிச் செல்வதாக புகார் எழுந்து உள்ளது.

    குரங்கு குல்லா, டவுசர் அணிந்து கையில் ஆயுதங்க ளுடன் மர்ம நபர்கள் நடந்து செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட பகுதி கள் சமீப காலமாக விரி வாக்கம் பெற்று வருகின்றன. இங்கு நூற்றுக்கணக்கில் புதிய வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறி வருகின்ற னர். இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில நாட்க ளாக 'குரங்கு குல்லா' அணிந்த மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

    சத்யா நகர் பகுதியில் வசிப்பவர் பன்னீர்செல்வம், டிரைவர். இவரது மனைவி தவமணி (39) காற்றுக்காக கதவை திறந்து வைத்து வீட்டு தூங்கி உள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் ஆயுதங்களை காட்டி அவரை மிரட்டி 5¾ பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றனர்.

    தொடர்ந்து கோவில் பாப்பாகுடி ஏ.ஆர். சிட்டி பகுதியில் நுழைந்த இந்த கொள்ளை யர்கள் அங்குள்ள வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் கேட் ஏறி குதித்துள்ளனர். அங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமரா இருப்பதை தாமதமாக பார்த்த நபர்கள் அதனையும் அடித்து நொறுக்கி உள்ளனர். பின்னர் வீட்டிற்கு உள்ளே குதித்து பூட்டை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு விழித்த வீட்டின் உரிமையாளர் மாடி பால்கனியிலிருந்து சத்தம் போட்ட போது, அங்கிருந்து அவர்கள் தப்பி உள்ளனர்.

    இந்த கும்பலில் சுமார் 10 பேர் இருப்பதாக கூறப்படு கிறது. இவர்கள் 3 அணி களாக பிரிந்து சென்று குறிப்பிட்ட வீதிகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளில்லாத வீடுகள் தவிர, ஆட்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உள்ளேயும் தைரியமாக புகுந்து பட்டா கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம். பொருட்களை கொள்ளை யடித்து செல்கின்றனர்.

    சில வீடுகளுக்குள் கற்களையும் வீசி செல்வதாக கூறப்படுகிறது. பிடிபட்டால் தப்பிக்க உடம்பில் எண்ணெய் மற்றும் மண் சேறு பூசியபடி இவர்கள் உலா வருகின்றனர்.

    இந்த 'குரங்கு குல்லா' திருடர்களால் மக்கள் பீதியில் உள்ளனர். கடந்த ஆண்டு இேத போன்ற புகார்கள் வந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் குரங்கு குல்லா திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

    போலீசார் தனிப்படை அமைத்து இவர்களை கண்டுபிடித்து ஏதேனும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×