என் மலர்
கன்னியாகுமரி
- புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
- அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரியவில்லை.
கன்னியாகுமரி:
ஆங்கில வருடமான 2023-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து 2024-ம் ஆண்டு மலர்ந்து. இந்த புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.
அந்த அடிப்படையில் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள உலகபுகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் ஆடல், பாடல் மற்றும் குத்தாட்டத்துடன் கோலாகலமாக நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரவு விடுதிகளில் தங்கி இருந்தனர்.
இன்று அதிகாலை இந்த புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது.
மேகமூட்டத்தினால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 7.30 மணிக்கு சூரியன் மேகக் கூட்டத்துக்கு இடையில் இருந்து வெளியே தெரிந்தது. அதனையே சுற்றுலா பயணிகளால் பார்க்க முடிந்தது.
கடலுக்கு அடியில் இருந்து சூரியன் உதயமான காட்சியை புத்தாண்டில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- படகுத்துறையில் நீண்ட வரிசை காணப்பட்டது.
- கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சீசன் களை கட்டி உள்ளது. கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இந்த ஆண்டின் கடைசி சூரிய உதய காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் திரண்டதால் கடற்கரை பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது.
அதேபோல முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். இதனால் கோவிலில் இன்று அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசை காணப்பட்டது.
இதேபோல கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரையில் உள்ள திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து பார்வையிட்டு திரும்பினர். இதனால் படகுத்துறையில் நீண்ட வரிசை காணப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் சுமார் 3 மணி நேரம் நீண்ட கியூவில் காத்திருந்தனர். இந்த கியூ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருந்தது. மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மியூசியம் போன்ற அனைத்து பொழுது போக்கு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் சன்னதி தெரு, தேரோடும் 4 ரதவீதிகள், மெயின்ரோடு பார்க்வியூ பஜார், காந்தி மண்டப பஜார், கடற்கரை சாலை, சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி போன்ற அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் கன்னியாகுமரியை சுற்றி உள்ள மற்ற சுற்றுலா தலங்களான வட்டக்கோட்டை பீச், சொத்த விளை பீச், திக்குறிச்சி பீச், திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, ஆசியாவிலேயே மிக நீளமான மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் ஏராளமான பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்ததால் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசாருடன் சுற்றுலா போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இணைந்து பணியாற்றினார்கள்.
- நூலகத்திற்கு தாய், தந்தையின் பெயரான ரெத்தினம்மாள்-செல்லப்பன் பெயரை சூட்டியுள்ளார்.
- மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பிற்கு பயன்னுள்ளதாக இருக்கும்.
கன்னியாகுமரி:
தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு. இவர் தன்னுடைய பணிக்காலத்தில் பணியை திறம்பட செய்ததோடு படிப்பின் அவசியம் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். போட்டி தேர்வில் சாதிப்பது எப்படி? என்பது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விளக்கம் அளித்துள்ளார். இதுதவிர சைக்கிள் பயிற்சி, மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று உடல் வலிமை, மனவலிமையின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.
இந்தநிலையில் குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தனது பூர்வீக வீட்டை அவர் நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நூலகத்திற்கு அவருடைய தாய், தந்தையின் பெயரான ரெத்தினம்மாள்-செல்லப்பன் பெயரை சூட்டியுள்ளார்.
மேலும், இந்த நூலகத்தை தன்னுடைய தாயார் ரெத்தினம்மாளை வைத்து திறக்கவும் ஏற்பாடு செய்தார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு நூலகத்தை பயன்படுத்துவதற்கான உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் பங்கேற்று அனைவரையும் வரவேற்றார்.
இது தவிர இந்த நூலகத்தில் டிஎன்.பி.எஸ்.சி, சிவில் சர்வீஸ், நீட், வங்கி தேர்வு, மத்திய, மாநில அரசு சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு வல்லுனர்களை கொண்டு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், பள்ளி, கல்லூரி புத்தகங்கள் உள்ளிட்ட பல புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
இதுதொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-
மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பிற்கு பயன்னுள்ளதாக இருக்கும். தற்போது உள்ள மாணவர்களிடம் விளையாட்டு, சினிமா ஆர்வம் இருக்கிறது. ஆனால் அறிவியல், கணிதம், மொழி உள்ளிட்டவற்றை கற்க வேண்டும் என்ற ஆர்வம் குறைவாக உள்ளது. அந்த ஆர்வத்தை அதிகப்படுத்த இந்த நூலகம் பயன்பெறும்.
நான் இந்த வீட்டில் இருந்து படித்து தான் பதவிக்கு வந்தேன். அதே போன்று இந்த பகுதி இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்க இந்த நூலகம் வழிகாட்டியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று காலையில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி ரிஷப வாகனத்தில் தாணுமாலய சாமியும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரான பெருமாளும் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அதன் பிறகு மருங்கூர் முருகன், கோட்டார் வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசுவாமி எதிரெதிரே காட்சியளித்தனர்.
பிறகு அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்றுபோல் தீபாராதனை நடந்தது. அப்போது தாணுமாலய சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து தனது மக்களை பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னுமாக அசைந்து அசைந்து செல்வதும், திரும்புவதுமாக பலமுறை நடந்தது. இந்த காட்சியை காண நள்ளிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
பெண்கள் குலவையிட்டு, மங்கல ஒலி எழுப்பிடவும், மேளதாளம் முழங்கவும் வாகனங்களில் இருந்து தாய்-தந்தையர் கோவிலை சென்றடைந்தனர். இந்த காட்சியை காண வந்த பக்தர்கள் பலரும் இரவு கோவிலிலேயே தங்கி தொடர்ந்து இன்று அதிகாலை நடந்த ஆருத்ரா தரிசனத்தை கண்டுகளித்தனர்.
இன்று (27-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடராஜர் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இதைத்தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
- பலியான 414 பேர் உடல்களும் குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாக்கத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
- பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குளச்சல்:
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இந்திய கடல் பகுதியையும் சுனாமி விட்டு வைக்கவில்லை. இதில் தமிழகத்தின் குமரி மாவட்டம் பெரும் உயிர்சேதம் மற்றும் பொருட் சேதத்தை சந்தித்தது. சுனாமி பேரலையில் சிக்கி கடற்கரை கிராமங்கள் சின்னாபின்னமாகின.
மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி சொத்த விளை, குளச்சல் கொட்டில் பாடு, பிள்ளை தோப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் ஏராளமானோர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தனர். கொட்டில்பாடு பகுதியில் 199 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப் பட்டன. சுனாமி பேரலை தாக்கியதன் நினைவாக கடற்கரை கிராமங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு ஆண்டு தோறும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி 19-ம்ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி கொட்டில் பாடு சுனாமி காலணியில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை தோட்டத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. நினைவு ஸ்தூபியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித அலெக்ஸ் ஆலயத்தில் 199 பேர் நினைவாக நினைவு திருப்பலி நடந்தது. ஆலய பங்குத்தந்தை ராஜ், மற்றும் பங்குத் தந்தை சர்ச்சில் உள்பட ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்தும், பூக்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமியின் போது குளச்சல் பகுதியில் பலியான 414 பேர் உடல்களும் குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாக்கத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் நினைவாக இன்று இரவு 7 மணிக்கு உதவி பங்குத் தந்தை தலைமையில் நினைவு திருப்பலி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து கல்லறை மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் பலியானவர்கள் நினைவாக அந்த நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதுபோல் சுனாமியில் ஏராளமான முஸ்லிம்கள் பலியானார்கள். அவர்களின் உடல்கள் ரிபாய பள்ளி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 118 பேரை பலி கொண்ட மணக்குடியிலும் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புனித அந்திரேயா ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணியப்பன் தலைமையில் நினைவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆலயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக 118 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டம் சென்றனர். அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
- சுனாமி குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் புகுந்து தேங்கியது.
- இரண்டு நாட்களுக்கு முன் இந்த பகுதிக்கு விஜய் வசந்த் எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி கோவளம் சுனாமி குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் புகுந்து தேங்கியது. மற்ற பகுதிகளில் தண்ணீர் வடிந்த போதிலும் இந்த பகுதியில் மட்டும் வடியாமல் தேங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இந்த பகுதிக்கு விஜய் வசந்த் எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.

இதைதொடர்ந்து நேற்று மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தண்ணீர் தேங்குவதற்கான காரணங்களை ஆராய்ந்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டார்.
- புதிய எருசலேம் வடிவில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் குடிலினை கண்டுகளித்தனர்.
உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி இயேசு பாலனின் பிறப்பை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது
.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் சீரியல் குடில்கள் தெரு வீதிகளில் அலங்காரம் என களைகட்ட துவங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலப்பள்ளம் வின் ஸ்டார் போட்ஸ் கிளப் சார்பில் சுமார் 40 லட்ச ரூபாய் பொருட் செலவில் வைக்கோல் கம்பிகள் சிமெண்ட் போன்ற உபகரணங்களால் புதிய எருசலேம் வடிவில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய எருசலேம் குடிலின் உட்பகுதிகளில் இயேசு பாலனின் பிறப்பு முதல் சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்து நியாயவிசாரிப்பு வரையிலான சுருபங்கள் காட்சிப்படுத்த பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குடிலை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். மேலும் திறப்பு விழாவிற்கு வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோருக்கு ஆளுயர மாலை அணிவித்தும், செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பும் அளித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் குடிலினை கண்டுகளித்தனர்.
- கக்கன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு விஜய் வசந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விடுதலை போராட்ட வீரர் முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களுடைய நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து கக்கன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு விஜய் வசந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், வட்டாரத் தலைவர் அசோக்ராஜ், முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் (Racing)-ஈடுபட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் சென்ற மாதம் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரக்கூடிய பண்டிகை நாட்களை பாதுகாப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்திட பெதுமக்கள் அனைவரையும் காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 5-ம் திருவிழாவான இன்று கருட தரிசனம் நடைபெற்றது.
- ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் தரிசனம் நடைபெற்றது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 10 நாள் மார்கழி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. மார்கழி விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 5-ம் திருவிழாவான இன்று முக்கிய நிகழ்வான கருட தரிசனம் நடைபெற்றது.
விழாவில், அதிகாலை 5 மணியளவில் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் தரிசனம் நடைபெற்றது. வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன் தாணுமாலய சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிழக்கு நோக்கி எழுந்தருளினர்.
அந்நேரத்தில், அவர்களைச் சுற்றி கருடன் வலம் வரும் கருட தரிசனம் நடைபெற்றது. இதை காண்பதற்கு சுசீந்திரம் கோயில் வளாக பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
பின்னர், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி ரதவீதியை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. கருட தரிசனத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.
- பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.46 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.
தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கோதை ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் குறைக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.46 அடியாக உள்ளது. அணைக்கு 906 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 514 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75.30 அடியாக உள்ளது. அணைக்கு 724 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 16.70 அடியாக உள்ளது. அணைக்கு 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 129 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மேலும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 12 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சேதம் அடைந்த விளைநிலங்கள் கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் ஏற்கனவே வீசிய சூறைகாற்றிற்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழைகளும் முறிந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகர்கோவில் நகர பகுதியில் ஏற்கனவே மீனாட்சி கார்டன் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் ஓரளவு வடிந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். அந்த பகுதியில் நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் புகை மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பிளீச்சிங் பவுடர்களும் தூவப்பட்டு வருகிறது.
- தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
- நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான பொதுமக்கள் பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியான ஊட்டுவாழ்மடத்தில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசாங்க உதவிகள் கிடைக்கின்றனவா என்று கேட்டறிந்தார்.
பின்னர் நாகர்கோவில், வடிவீஸ்வரம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு கே.எஸ். அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதேபோன்று நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகள் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டு வருகிறது. இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. எனவே தமிழக அரசு இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருதி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் வசதி படைத்தவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. அதற்கான ஒரு முழு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையை பொறுத்த வரை 17 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுபோன்று 17 மணி நேரம் தொடர்ச்சியாக மழையை சந்தித்த மாநிலம் கிடையாது எனினும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகளை நீர் நிலைகளில் இருந்து அகற்றி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






