என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரெயில் நிலைய பக்கவாட்டு சுவரில் மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து விபத்து நடந்த பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. #TrainAccident #StThomas

    ஆலந்தூர்:

    கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள், பக்கவாட்டு சுவரில் மோதி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து, இந்த பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் செல்வது நிறுத்தப்பட்டது. ஜூலை மாதம் 25-ந்தேதி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் பரங்கிமலை ரெயில் நிலையம் வந்து அதிகாரிகளிடமும், பொது மக்களிடமும் கருத்து கேட்டார்.

    அதை தொடர்ந்து விபத்து நடந்த 4-வது பிளாட்பாரத்தை 2 அடி நகர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணி ஆகஸ்டு மாதம் தொடங்கியது.

    இரவு பகலாக தண்டவாளத்தை மாற்றும் வேலை நடந்தது. அது இப்போது முடிவடைந்துள்ளது. இந்த பிளாட்பாரத்தின் வழியாக தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே செல்லுகின்றன. மின்சார ரெயில்கள் விடப்படவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் இன்று பரங்கிமலை ரெயில் நிலையம் வந்தார். அங்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள 4-வது பிளாட்பாரத்தை பார்வையிட்டார். அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    4-வது பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி சிறப்பாக நடந்துள்ளது. ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கருத்துக்களை கேட்ட பின்னர் இந்த பிளாட்பாரத்தின் தண்டவாளம் 2 அடி நகர்த்தப்பட்டுள்ளது. அதிகமான பயணிகள் தொங்கிக் கொண்டு சென்றதால்தான் பக்கவாட்டு சுவரில் அவர்கள் மோதி விழுந்துள்ளனர்.

    அடுத்து தானாக மூடும் கதவுகளை கொண்ட ரெயில் பெட்டிகளுடன் மின்சார ரெயில்களை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த பிளாட்பாரத்தில் மீண்டும் மின்சார ரெயில்களை விடுவது பற்றி அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TrainAccident #StThomas

    திருப்போரூர் அருகே மதிமுக பிரமுகரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (55). ம.தி.மு.க. பிரமுகர். அங்குள்ள கல்குவாரியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து சிலர் கைது செய்யப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை கொட்டமேடு பகுதிக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினார்கள். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையடுத்து ஏழுமலையை தாக்கியதாக அந்த பகுதியை சேர்ந்த கமலக் கண்ணன் (32), ஏழுமலை (30) ஆகியோரை மானாம்பதி போலீசார் கைது செய்தனர்.

    பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் ஏரியில் முதலைகள் நடமாடுவதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    தாம்பரம்:

    சென்னை பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் ஏரி உள்ளது. நேற்று காலை ஆடு,மாடு மேய்ப்பவர்களும், துணி துவைப்பவர்களும் ஏரிக்கு அருகில் சென்றனர்.

    அப்போது ஏரியில் 6 அடி நீளமுள்ள 5 முதலைகள் மிதந்து கொண்டிருந்தன. இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்று வனத் துறையினர் ஏரிப்பகுதிக்கு விரைந்து சென்றனர். பைனா குலர் மூலம் ஏரியில் முதலை நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    வெயில் காலம் தொடங்கும் நேரத்தில் தண்ணீர் வற்றுவதால் ஏரியில் முதலை தென்படுகிறது.

    வண்டலூர் பூங்காவில் முதலை பண்ணையும் உள்ளது. அங்குள்ள சிறிய முதலை குட்டிகளை தூக்கிச் செல்லும் பறவைகள் அருகில் உள்ள ஏரிகளில் போட்டு விட்டு சென்று விடுகின்றன. அப்படி போடப்படும் முதலைகள் ஏரிகளில் உள்ளன.

    இதன் காரணமாக முதலை பண்ணையில் தற்போது முதலை குட்டிகளை பறவைகள் தூக்கி செல்லாத படி வலை கட்டியுள்ளோம். நெடுங்குன்றம் ஏரியில் உள்ள முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    நெடுங்குன்றம் ஏரியில் முதலைகள் நடமாடுவதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏரிப்பகுதிக்கு செல்லவும் பொதுமக்கள பயப்படுகிறார்கள்.

    பெருங்களத்தூர் சதானந்தபுரம் ஏரியில் 6 மாதங்களுக்கு முன்பு இதே போல் முதலை நடமாட்டம் காணப்பட்டது. ஆனால் அந்த முதலை இதுவரை பிடிபடவில்லை. தற்போது நெடுங்குன்றம் ஏரியிலும் முதலை நடமாட்டம் காணப்படுகிறது.

    மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

    மாமல்லபுரம்:

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த படி பெய்யவில்லை. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்த நிலையில், மாமல்லபுரம்-கல்பாக்கம் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை கடலோரப் பகுதிகளான கோவளம், வட நெம்மேலி, தேவநேரி, பூஞ்சேரி, கடம்பாடி, மணமை, வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம், வாயலூர், கூவத்தூர், காத்தாங்கடை, வடபட்டிணம், பாண்டூர், முகையூர், தென்பட்டினம், அடையாளச்சேரி, நடுக்குப்பம் போன்ற பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டது.

    சாலைகளில் பனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளுக்கு சாலைகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

    மார்கழிக்கு முன்னரே கடும் பனிப்பொழிவு துவங்கி விட்டது. எனவே மார்கழி மாதம் இதைவிட அதிகமாக இருக்கலாம் என இந்த பகுதி மீனவர்களும், விவசாயிகளும் தெரிவித்தனர்.

    திருப்போரூர் அருகே விடுதலை சிறுத்தை பிரமுகரின் தாய் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த முள்ளிப்பாக்கம் பிள்ளையார்கோவில் தெருவில் வசித்து வருபவர் அமாவாசை. இவரது மனைவி கிருஷ்ணவேணி.

    இவர்களது மகன்கள் கோதண்டன், கோபால். இவர்களில் கோதண்டன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட ஊடக துறை அமைப்பாளராக உள்ளார்.

    நேற்று மாலை கிருஷ்ணவேணி அருகில் உள்ள மைதானத்தில் விறகு எடுப்பதற்காக சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மைதானம் அருகே உள்ள முட்புதரில் கால்கள் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் கிருஷ்ணவேணி கொன்று புதைக்கப்பட்டு இருந்தார்.

    இது குறித்து மானாம்மதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சுப்புராஜூ மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணவேணியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உடல் புதைக்கப்பட்ட இடம் அருகே ரத்தக்கறை படிந்த ஒருகருங்கல் மற்றும் கத்தி கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

    வீட்டுமனை தகராறில் கிருஷ்ணவேணி கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    கிருஷ்ணவேணியின் குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருக்கும் வீட்டு மனை தொடர்பாக தகராறு இருந்தது. இது தொடர்பாக அவர்களுக்குள் பலமுறை மோதல் ஏற்பட்டது.

    தற்போது அந்த நபர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். எனவே வீட்டுமனை தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவானவர் சிக்கினால்தான் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கொலையாளிகள் யார் என்பது தெரிய வரும்.

    விடுதலை சிறுத்தை பிரமுகரின் தாய் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மடிப்பாக்கம் அருகே துப்பட்டாவை கழுத்தில் சுற்றி விளையாடிய மாணவன் பரிதாபமாக இறந்தான். அவனது உடலை கண்டு பெற்றோர் கதறி அழுந்தது பரிதாபமாக இருந்தது.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் சங்கர். இவரது மகன் திருக்கார்த்திக்கேயன்(வயது 12) நங்கநல்லூரியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த திருக்கார்த்திகேயன் அறையில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது தாயின் துப்பட்டாவை துணிகள் தொங்கவிடும் கம்பியில் போட்டு விட்டு மறுமுனையை தனது கழுத்தில் சுற்றி விளையாடினான்.

    இதனை அவனது தாய் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் விளையாட்டாக சுற்றிய துப்பட்டா திருக்கார்த்திகேயனின் கழுத்தை இறுக்கியது. இதில் அவன் மயங்கி விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கூச்சலிட்டார். திருக்கார்த்திகேயனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.டாக்டர்கள் பரிசோதித்த போது திருக்கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டது. தெரிந்தது. அவனது உடலை கண்டு பெற்றோர் கதறி அழுந்தது பரிதாபமாக இருந்தது.

    அவனுக்கு இன்று அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்று புதுவை கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #BJP #Kiranbedi #Election2018
    ஆலந்தூர்:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. யாருக்கும் பின்னடைவு இல்லை.


    இது மோடி, ராகுலுக்கு இடையே இருக்கும் போட்டி அல்ல. முற்றிலும் மக்களுடைய விருப்பம். ஜனநாயகத்தின் வெளிப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Kiranbedi #Election2018
    ஆதம்பாக்கம் பகுதியில் திறந்து இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து ஹெல்மெட் அணிந்து வரும் வாலிபர் சிலிண்டர்களை திருடிச் செல்லும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் பகுதியில் திறந்து இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து ஹெல்மெட் அணிந்து வரும் வாலிபர் சிலிண்டர்களை திருடிச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அடுத்தடுத்து 2 வீடுகளில் சிலிண்டர் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதம்பாக்கம் பழண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் தங்க நகை மதிப்பீட்டாளர். திறந்து கிடந்த இவரது வீட்டுக்குள் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் திடீரென புகுந்து சிலிண்டரை திருடி சென்று விட்டான்.

    இதே போல் ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சத்தியவாசன் என்பவரது வீட்டுக்குள்ளும் புகுந்த ‘ஹெல்மெட்’ வாலிபர் சிலிண்டரை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டான்.

    இது குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது ‘ஹெல்மெட்’ அணிந்தபடி வரும் வாலிபர் சிலிண்டரை தூக்கிச் செல்வது பதிவாகி உள்ளது. அவனது முகம் சரியாக தெரியவில்லை. அவனை பிடிக்க விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபா. இவர் அடகு கடையில் வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.1 லட்சத்தை பையில் வைத்துக் கொண்டு அரசு பஸ்சில் (டி 7) மதுராந்தகம் நோக்கி சென்றார்.

    பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் பஸ் நிலையத்தில் இறங்கிய போது வைத்திருந்த பணப்பையை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

    இது குறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி சாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பஸ் நிலையத்தில் நின்றவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மதுரையை சேர்ந்த உஷா, கல்யாணி, அனிதா, அபிராமி ஆகியோர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுபாவிடம் இருந்த ரூ.1 லட்ச பணப்பையை திருடிச் சென்றது தெரிந்தது.

    அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து பணத்தை மீட்டனர்.

    நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறையினரை கண்டித்து செங்கல்பட்டு பழை பஸ் நிலையம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள குமுழி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.

    இதனை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வருவாய்த்துறையினருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறையினரை கண்டித்து செங்கல்பட்டு பழை பஸ் நிலையம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சீனிவாச ஐயங்கார், மாநில பொருளாளர் செல்வி கிருஷ்ண முர்த்தி, தொகுதி செயலாளர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கணபதி, ஒண்டிவீரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தாம்பரம் கல்லூரியில் கைப்பந்து போட்டியில் பங்கேற்ற மாணவி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லூயிஸ் தேவராஜ். இவரது மகள் மகிமா (வயது18). கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் விளையாட்டு போட்டியில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கூறி இருப்பதாக தெரிகிறது.

    நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மாணவி மகிமாவை அழைத்து உள்ளனர். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாததால் விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியாது என்று சொல்லியதாக கூறப்படுகிறது.

    எனினும் மகிதாவை கட்டாயப்படுத்தி கைப்பந்து போட்டியில் விளையாட வைத்து உள்ளனர். இதற்காக அவர் மைதானத்தை சுற்றி வந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

    திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளும், பேராசிரியர்களும் மகிமாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மகிமாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை மகிமாவின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் மகிமாவின் பெற்றோர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், “விளையாட முடியாத நிலையில் இருந்த மகளை கட்டாயப்படுத்தி விளையாடுமாறு கூறி இருக்கிறார்கள். இதனால் அவர் இறந்து விட்டார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து மகிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மாணவி மகிமா இறந்ததை அறிந்த மாணவ - மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாணவ- மாணவிகளை கட்டாயப்படுத்தக் கூடாது, அவசர சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவி இறந்த சம்பவம் மாணவ- மாணவிகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    பல்லாவரம் அருகே தொழில் அதிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் சிவசங்கரன் நகரை சேர்ந்தவர் கங்கா என்கிற சுரேஷ்.

    இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மணல் வியாபாரமும் செய்கிறார். நேற்று இரவு 9 மணியளவில் சுரேஷ் வீடு திரும்பினார்.

    இரவு 10 மணி வரை குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் கதவை மூடிவிட்டு தூங்கச் சென்றார்.

    10.30 மணியளவில் டமார் என்ற சத்தம் கேட்டது. சுரேஷ் கதவை திறந்து பார்த்த போது வீட்டின் மீது யாரோ பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.

    வீட்டின் முன்பகுதியில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. உடனே ‘அய்யோ தீ’ என்று அலறினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து சங்கர் நகர் போலீசில் சுரேஷ் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானகாட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மறைத்து கட்டிக் கொண்டு வந்த, 3 பேர் பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசியது தெரிய வந்தது. அவர்கள் யார்? தொழில் போட்டி காரணமாக இது நடந்ததா? அல்லது முன் விரோதமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    கடந்த தீபாவளி அன்று சுரேசுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு இருந்தது. இந்த மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்றும் விசாரணை நடக்கிறது.
    ×