என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "member mother murder"

    திருப்போரூர் அருகே விடுதலை சிறுத்தை பிரமுகரின் தாய் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த முள்ளிப்பாக்கம் பிள்ளையார்கோவில் தெருவில் வசித்து வருபவர் அமாவாசை. இவரது மனைவி கிருஷ்ணவேணி.

    இவர்களது மகன்கள் கோதண்டன், கோபால். இவர்களில் கோதண்டன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட ஊடக துறை அமைப்பாளராக உள்ளார்.

    நேற்று மாலை கிருஷ்ணவேணி அருகில் உள்ள மைதானத்தில் விறகு எடுப்பதற்காக சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மைதானம் அருகே உள்ள முட்புதரில் கால்கள் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் கிருஷ்ணவேணி கொன்று புதைக்கப்பட்டு இருந்தார்.

    இது குறித்து மானாம்மதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சுப்புராஜூ மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணவேணியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உடல் புதைக்கப்பட்ட இடம் அருகே ரத்தக்கறை படிந்த ஒருகருங்கல் மற்றும் கத்தி கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

    வீட்டுமனை தகராறில் கிருஷ்ணவேணி கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    கிருஷ்ணவேணியின் குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருக்கும் வீட்டு மனை தொடர்பாக தகராறு இருந்தது. இது தொடர்பாக அவர்களுக்குள் பலமுறை மோதல் ஏற்பட்டது.

    தற்போது அந்த நபர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். எனவே வீட்டுமனை தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவானவர் சிக்கினால்தான் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கொலையாளிகள் யார் என்பது தெரிய வரும்.

    விடுதலை சிறுத்தை பிரமுகரின் தாய் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×