என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
    • 3 விவசாய பயனாளிகளுக்கு ரூ.120 மதிப்பிலான தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துக்கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஆராய்ந்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    விவசாயிகளுக்கான வேளாண் நலத்திட்டங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு, கூட்டுறவு துறை சார்பில், 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ.6,18,791 மதிப்பீட்டில் பயிர் கடன்களும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஒரு விவசாய பயனாளிக்கு ஒரு விசைத்தெளிப்பான், ஒரு விவசாய பயனாளிக்கு உயிர் உரங்கள், 3 விவசாய பயனாளிகளுக்கு ரூ.120 மதிப்பிலான தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    முன்னதாக பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவையொட்டி, மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ் நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள்.

    புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் மேற்கண்ட மனுக்களின் மீது விசாரணை செய்து நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்.

    தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் eShram மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம்.

    மனுவினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன்பெறலாம்.

    எனவே, வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    • பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அனைத்து கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமானநிலையத்துக்கு பரந்தூர், ஏகனாபுரம், மேலேறி நெல்வாய், சிங்கிள்பாடி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை ஒன்றிணைந்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 432-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் இதுவரை நடந்த 6 கிராம சபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். மேலும் ஒரு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

    இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களை கடந்த வாரம் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி. ஆய்வுகுழு நேரில் பார்வையிட இருந்தது. இதற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அனைத்து கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆய்வு திடீரென நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இன்று பரந்தூர் பகுதியில் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையில் ஐ.ஐ.டி. ஆய்வுகுழு ஆய்வு செய்ய மீண்டும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அவர்கள், ஆய்வுக்குழு வரும்போது போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரந்தூர் பகுதி பதட்டமாக காணப்படுகிறது.

    • வங்கி கிளைக்கு சென்று தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வங்கி புத்தகத்தில் பதிவு செய்தார்.
    • கார் டிரைவர் ஒருவருக்கு ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு திருப்பி எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் பெண்ணின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 101 வரவு வைக்கப்பட்டு அந்த தொகை 4 தவணைகளாக திருப்பி எடுக்கப்பட்டது.

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பரமசிவன் தெரு பகுதியை சேர்ந்தவர் பண்டித விஜயலட்சுமி (வயது 55). இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவருக்கான முதியோர் ஓய்வூதியம் அந்த வங்கி கணக்கு வழியாக செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 2 மாதமாக முதியோர் ஓய்வூதியம் வராமல் இருந்தது. இதனால் அந்த வங்கி கிளைக்கு சென்று தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வங்கி புத்தகத்தில் பதிவு செய்தார்.

    அப்போது கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு, இருப்புத்தொகை ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 191 இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் அந்த ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 191- ஐ 4 தவணைகளாக திருப்பி எடுக்கப்பட்டு விஜயலட்சுமியின் வங்கி கையிருப்பு பூஜ்ஜியம் என்று ஆனது.

    இது குறித்து விஜயலட்சுமி வங்கி தரப்பில் விசாரித்தபோது வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டபோது, வேறு ஒருவரின் வங்கி கணக்கு தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவர் ஒருவருக்கு ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு திருப்பி எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

    • ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு மற்றும் மரியாதை வழங்கப்பட்டது.
    • கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் ஸ்ரீ வியாச ராஜ மடம் உள்ளது. இந்த மடத்திற்கு கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீ பலிமாரு மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்த சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யா ராஜேஷ்வர தீர்த்த சுவாமிகள் ஆகியோர் வருகை தந்தனர்.

    இவர்களுக்கு காஞ்சிபுரம் மடத்தின் மேலாளர் மகேஷ் ஆச்சார், அர்ச்சகர் குரு பிரசாத் ஆச்சார் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அவர்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு மற்றும் மரியாதை வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாளங்களுடனும், வாண வேடிக்கைகளுடனும் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் ஸ்ரீ வியாச ராஜ மடத்திற்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள்.

    அவர்களை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

    • பா.ஜனதா ஆன்மீகம் மற்றும் ஆலய பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் தலைமையில் கிரிவலம் விமரிசையாக தொடங்கியது.
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பவுர்ணமியையொட்டி கிரிவலம் நடந்தது. பா.ஜனதா ஆன்மீகம் மற்றும் ஆலய பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் தலைமையில் கிரிவலம் விமரிசையாக தொடங்கியது.

    நெசவாளர் அணி மாநில துணைத் தலைவர் நாகூசா கலந்து கொண்டு கிரிவலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் ஆலய வெளிப்பிரகாரத்தில் சிவனடியார்கள் திருவாசகம் பாடல்களை பாடி கைலாய வாத்திய இசையுடன் வலம் வந்து ஈஸ்வரன் அனுகிரகம் கிடைக்க வேண்டினார்கள்.

    இதில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் சிவானந்தம். கூரம் விஸ்வநாதன். திலகர் குமாரசாமி, ஆன்மீக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ரெயில்வே வெங்கடேசன், சிவ. ஈஸ்வரி. துளசி சாமி உள்ளிட்ட சிவனடியார்கள், பொதுமக்கள் என மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பவுர்ணமி தினத்தன்று தொடர்ந்து கிரிவலம் நடைபெறும் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.
    • வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும், சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும் என மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன.

    இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், வெளி மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக இந்த ஏரிகள் நிரம்பி வருகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1022 ஏரிகளில் தற்போது வரை 38 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. மேலும் 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பக்கம் ஏரிக்கும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 23 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.5 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் பராமரிப்பு பணி நடைபெற்றது. மதகுகள் தண்ணீர் திறப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏரி முழு கொள்ளளவை எட்டியவுடன் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.

    • உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.
    • பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவ மாண விகள் படித்து வருகிறார்கள்.

    பெரும்பாலும் இவர்கள் அரசு பஸ்களில் வந்து செல்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் இருந்து மானாம்பதி, கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.

    இதனால் பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சீனிவாசனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
    • பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், அடுத்த குண்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது26). நேற்று மாலை இவரை சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது பஸ்மோதிய விபத்தில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்ததாக கூறி அவரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இறந்து போன சீனிவாசன் குறித்து போலீசார் முறையாக எந்த தகவலும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் இன்று காலை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் போலீசார் மீது குற்றம்சாட்டி திடீர் மறியலில் ஈடுபட்டனர். சீனிவாசனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள சீனிவாசனின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னலில் சாலையை கடக்க முயன்றார்.
    • விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவண செல்வன்(வயது43).இவர் மாநகர பஸ்சில் டிரைவராக இருந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னலில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி சென்ற டாரஸ் லாரி திடீரென சரவண செல்வன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவண செல்வன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
    • மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமை தாங்கினார்.

    கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில், 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகளி்ல், 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையைச் சார்ந்த அலுவலர்களை கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை ஆட்சியர் நிலையிலான குழுத்தலைவர்கள் மற்றும் துணை குழுத்தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு. மழை பொழிவின் போது அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அவசரத் தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மொபைல் நிறுவனங்களில் உயர்கோபுரங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொ) கணேஷ் கலந்து கொண்டனர்.

    • டி.டி.எப்.வாசன் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21-ந்தேதி மனு தாக்கல் செய்தார்.
    • நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து டி.டி.எப்.வாசனின் ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தார்.

    காஞ்சிபுரம்:

    பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் கடந்த 17-ந்தேதி காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று சாகசம் செய்ய முயன்றார். அப்போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21-ந்தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் யூ-டியூபர் வாசன் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் அவருக்கு நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து அவரது ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தார்.

    ×