என் மலர்
காஞ்சிபுரம்
- நிர்வாக காரணங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வீட்டை விட்டு வெளியேறிய ஆர்த்தி கடந்த 1-ந்தேதி அச்சரப்பாக்கதில் கிறிஸ்தவ முறைப்படி ஹரிஷை திருமணம் செய்து கொண்டார்.
- எனக்கும், என்னுடைய கணவரின் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குங்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மானாமதி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் ஹரிஷ் (வயது 25). இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அதே தொழிற்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பாலையூர் பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்பவரும் வேலை செய்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு அவரது உறவினர் ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ஆர்த்தி கடந்த 1-ந்தேதி அச்சரப்பாக்கதில் கிறிஸ்தவ முறைப்படி ஹரிஷை திருமணம் செய்து கொண்டு, மானாம்பதி கண்டிகையில் உள்ள கணவர் வீட்டில் தங்கியிருந்தார்.
இதனை அறிந்த ஆர்த்தி குடும்பத்தினர் ஹரிஷ் வீட்டுக்கு உருட்டு கட்டைகளுடன் வந்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி பாதுகாப்புக் கோரி புகார் மனு அளித்தனர்.
ஆர்த்தி அளித்துள்ள அந்த புகார் மனுவில், எனது குடும்பத்தார் பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி என்னையும், என்னுடைய கணவரின் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே, எனக்கும், என்னுடைய கணவரின் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குங்கள்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உரிய பாதுகாப்பு வழங்குவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உறுதியளிக்கப்பட்டது.
- சங்கங்களின் சாவிகளை காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர்.
- நகை கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தின் முன்பு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சங்கங்களுக்கு பயன்படாத உபகரணங்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை கண்டித்தும், திட்டம் கைவிடும் வரை அனைத்து பணியாளர்களும் வேலைக்கு செல்வதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சங்கங்களின் சாவிகளை காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என 60 சங்கங்களும், 145 பணியாளர்களும் தொடர் விடுப்பில் செல்வதால் விவசாய கடன் வழங்கும் பணி, நகை கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் நசுங்கியது.
- சரக்கு ரெயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரெயில் காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலைத்தில் விபத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
வாகனங்கள் மீது ரெயில் மோதியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ரெயில் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்து நின்றது. சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நண்பர்கள் 3 பேரும் குளித்துக்கொண்டிருக்கும்போது மோகனசுந்தரம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றார்.
- பொதுமக்கள் மாணவர் மோகனசுந்தரத்தை இறந்த நிலையில் மீட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த, கீழம்பி பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் மோகனசுந்தரம் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார்.
பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் மோகனசுந்தரம் தனது நண்பர்கள் 2 பேருடன் அருகில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார்.
நண்பர்கள் 3 பேரும் குளித்துக் கொண்டிருக்கும் போது மோகனசுந்தரம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றார். நண்பர்கள் 2 பேரும் கரையோரமாக குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் மோகனசுந்தரம் வெளியில் வராததால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 2 பேரும் அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏரியில் இறங்கி தேடினர். பின்னர் மாணவர் மோகனசுந்ரத்தை இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் மாணவர் மோகனசுந்தரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார்.
- பொதுமக்கள் யாரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையத்துக்கு பரந்தூர், ஏகனாபுரம், மேலேறி நெல்வாய் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமங்களை ஒன்றி ணைத்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு பரந்தூர், ஏகனா புரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அவர்களது போராட்டம் 433-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் பொதுமக்கள் கிராமசபை கூட்டங்களை புறக்கணித்தனர்.
பொதுமக்கள் யாரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த 13 கிராமங்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மட்டும் கலந்து கொண்டனர். இதனால் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.
ஏற்கனவே நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. நேற்று பரந்தூர் விமானநிலையம் அமைய உள்ள இடத்தை தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆய்வு செய்ய வருவதை எதிர்த்து ஏகனாபுரம் கிராமத்தில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
- 3 விவசாய பயனாளிகளுக்கு ரூ.120 மதிப்பிலான தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துக்கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஆராய்ந்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
விவசாயிகளுக்கான வேளாண் நலத்திட்டங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு, கூட்டுறவு துறை சார்பில், 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ.6,18,791 மதிப்பீட்டில் பயிர் கடன்களும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஒரு விவசாய பயனாளிக்கு ஒரு விசைத்தெளிப்பான், ஒரு விவசாய பயனாளிக்கு உயிர் உரங்கள், 3 விவசாய பயனாளிகளுக்கு ரூ.120 மதிப்பிலான தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவையொட்டி, மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ் நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள்.
புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் மேற்கண்ட மனுக்களின் மீது விசாரணை செய்து நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்.
தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் eShram மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம்.
மனுவினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன்பெறலாம்.
எனவே, வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அனைத்து கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமானநிலையத்துக்கு பரந்தூர், ஏகனாபுரம், மேலேறி நெல்வாய், சிங்கிள்பாடி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை ஒன்றிணைந்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 432-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் இதுவரை நடந்த 6 கிராம சபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். மேலும் ஒரு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களை கடந்த வாரம் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி. ஆய்வுகுழு நேரில் பார்வையிட இருந்தது. இதற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அனைத்து கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆய்வு திடீரென நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று பரந்தூர் பகுதியில் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையில் ஐ.ஐ.டி. ஆய்வுகுழு ஆய்வு செய்ய மீண்டும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அவர்கள், ஆய்வுக்குழு வரும்போது போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரந்தூர் பகுதி பதட்டமாக காணப்படுகிறது.
- வங்கி கிளைக்கு சென்று தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வங்கி புத்தகத்தில் பதிவு செய்தார்.
- கார் டிரைவர் ஒருவருக்கு ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு திருப்பி எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் பெண்ணின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 101 வரவு வைக்கப்பட்டு அந்த தொகை 4 தவணைகளாக திருப்பி எடுக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பரமசிவன் தெரு பகுதியை சேர்ந்தவர் பண்டித விஜயலட்சுமி (வயது 55). இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவருக்கான முதியோர் ஓய்வூதியம் அந்த வங்கி கணக்கு வழியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 மாதமாக முதியோர் ஓய்வூதியம் வராமல் இருந்தது. இதனால் அந்த வங்கி கிளைக்கு சென்று தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வங்கி புத்தகத்தில் பதிவு செய்தார்.
அப்போது கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு, இருப்புத்தொகை ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 191 இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் அந்த ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 191- ஐ 4 தவணைகளாக திருப்பி எடுக்கப்பட்டு விஜயலட்சுமியின் வங்கி கையிருப்பு பூஜ்ஜியம் என்று ஆனது.
இது குறித்து விஜயலட்சுமி வங்கி தரப்பில் விசாரித்தபோது வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டபோது, வேறு ஒருவரின் வங்கி கணக்கு தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவர் ஒருவருக்கு ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு திருப்பி எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
- ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு மற்றும் மரியாதை வழங்கப்பட்டது.
- கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் ஸ்ரீ வியாச ராஜ மடம் உள்ளது. இந்த மடத்திற்கு கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீ பலிமாரு மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்த சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யா ராஜேஷ்வர தீர்த்த சுவாமிகள் ஆகியோர் வருகை தந்தனர்.
இவர்களுக்கு காஞ்சிபுரம் மடத்தின் மேலாளர் மகேஷ் ஆச்சார், அர்ச்சகர் குரு பிரசாத் ஆச்சார் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அவர்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு மற்றும் மரியாதை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாளங்களுடனும், வாண வேடிக்கைகளுடனும் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் ஸ்ரீ வியாச ராஜ மடத்திற்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள்.
அவர்களை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
- பா.ஜனதா ஆன்மீகம் மற்றும் ஆலய பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் தலைமையில் கிரிவலம் விமரிசையாக தொடங்கியது.
- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பவுர்ணமியையொட்டி கிரிவலம் நடந்தது. பா.ஜனதா ஆன்மீகம் மற்றும் ஆலய பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் தலைமையில் கிரிவலம் விமரிசையாக தொடங்கியது.
நெசவாளர் அணி மாநில துணைத் தலைவர் நாகூசா கலந்து கொண்டு கிரிவலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் ஆலய வெளிப்பிரகாரத்தில் சிவனடியார்கள் திருவாசகம் பாடல்களை பாடி கைலாய வாத்திய இசையுடன் வலம் வந்து ஈஸ்வரன் அனுகிரகம் கிடைக்க வேண்டினார்கள்.
இதில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் சிவானந்தம். கூரம் விஸ்வநாதன். திலகர் குமாரசாமி, ஆன்மீக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ரெயில்வே வெங்கடேசன், சிவ. ஈஸ்வரி. துளசி சாமி உள்ளிட்ட சிவனடியார்கள், பொதுமக்கள் என மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பவுர்ணமி தினத்தன்று தொடர்ந்து கிரிவலம் நடைபெறும் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.






