search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது: 100 கனஅடி உபரிநீர் திறப்பு
    X

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது: 100 கனஅடி உபரிநீர் திறப்பு

    • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும்.

    கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகளில் நீர் மட்டம் கிடு, கிடுவென அதிகரித்து வருகிறது.

    தொடர்ந்து தண்ணீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் பூண்டி ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 22 அடியை எட்டியது. ஏரியில் 3132மி.கன அடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கி றது. இன்று காலை நிலவரப் படி ஏரிக்கு 393 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாலும் அவ்வப்போது பலத்த மழை பெய்வதாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரிநீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதலில் இன்று காலை உபரி நீர் திறக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார். இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை திறக்கப்படும் உபரி நீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கும்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. எனினும் பலத்த மழை பெய்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பருவமழை தொடங்கு வதற்கு முன்பே செம்பரம் பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் முழுவதும் எந்த பயனும் இன்றி வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பைதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×