என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பரந்தூரில் விமான நிலையம் அமையும்போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
    • ரெயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 4791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகள் மற்றும் இதற்கான இடம் தேர்வு மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு மாநில அரசின் நிர்வாக அனுமதி இன்னும் 2 வாரத்தில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் நிலம் கையகப்படுத்துதல், எல்லைகள் நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே பரந்தூரில் விமான நிலையம் அமையும்போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

    பரந்தூர் புதிய விமான நிலையம் சென்னை நகரில் இருந்து சுமார் 67 கி.மீட்டர் தூரத்தில் வருகிறது. அரக்கோணம்-காஞ்சிபுரம் ரெயில் பாதையில் திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் அமைய உள்ளது.

    இதைத்தொடர்ந்து ரெயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது. பரந்தூரில் புதிய ரெயில் நிலையம் அமையும்போது ரெயில் பாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவேண்டும். இதற்கான ஆய்வு பணியை செங்கல்பட்டு-அரக்கோணம் ரெயில்வே பாதையில் விரைவில் மேற்கொள்ள ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.

    ரெயில்வே வாரியம் ஏற்கனவே மாநிலத்தில் 390 கி.மீட்டர் தூரத்துக்கு 7 வழித்தடங்களில் புதிய ரெயில்வே பாதை அமைக்க அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
    • பரந்தூர் விமான நிலையத்தை சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் 400 நாட்களை தாண்டி நீடித்து வருகிறது.

    மேலும் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிலையம் அமைய உள்ள பகுதி நீர்நிலைகளை ஆய்வு செய்ய வந்த ஓய்வு பெற்ற அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி. குழுவினரை பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் தொடர்ந்து பரபரப்பான நிலையே நீடித்து வருகிறது. இதற்கிடையே பரந்தூர் விமான நிலைய பணிக்கு மாநில அரசுக்கு நிர்வாக அனுமதியை 2 வாரத்தில் வழங்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே புதிய விமான நிலையம் தொடர்பான திட்ட அறிக்கைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    பரந்தூர் விமான நிலையத்தை சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கான நிலையங்கள் கையகப்படுத்துதல், எல்லைகள் வரையறுத்தல், விரைவில் இறுதி செய்யப்பட இருக்கிறது. நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பின்னர் விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விரிவான தொழில்நுட்பம்-பொருளாதார அறிக்கையை நிறைவு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

    • தீ விபத்தை தடுக்கும் நோக்கத்தில் பட்டாசுகளை கவனமாக கையாள்வது தொடர்பாகவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
    • பாதுகாப்பு குழுக்கள் ஆய்வின்போது மேற்கொள்ள வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    காஞ்சிபுரத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் வருவாய் அலுவலர் ஆலோசனை மேற்கொண்டார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீ விபத்துக்களை தடுக்கும் பொருட்டு அரசின் உத்தரவின்படியும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்திற்காகவும் மாவட்டத்தில் உள்ள நிரந்தர பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் வட்ட அளவிலான ஆய்வுக்குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தொடர்பாகவும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் தீ விபத்தை தடுக்கும் நோக்கத்தில் பட்டாசுகளை கவனமாக கையாள்வது தொடர்பாகவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    மேலும், பாதுகாப்பு குழுக்கள் ஆய்வின்போது மேற்கொள்ள வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் வெடிபொருள் துணை தலைமை கட்டுப்பாட்டு அலுவலர், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தீயணைப்பு அலுவலர், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர், வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வினய் குமார் (வயது21). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாப்பான் சத்திரத்தில் வீடு எடுத்து தங்கி தண்டலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வினய்குமார் உடன் படிக்கும் தனது நண்பர்களான ரேவனு, திவ்ய தேஜாவுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    கல்லூரி அருகே பெங்களூர்-சென்னை தேசிய சாலையில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்த வினய் குமார் மீது திடீரென இடி தாக்கியது. இதில் வினய் குமார், மற்றும் உடன் இருந்த ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த வினய்குமாரை மீட்டு அருகில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினய்குமார் பரிதாபமாக இறந்தார். இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் இடி தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவ ரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    பிரகாஷ் குடும்பத்துடன் உறவினரின் மகன் பிறந்த நாள் விழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    சாலவாக்கம் - திருமுக்கூடல் சாலையில் பொற் பந்தல் கிராமம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கத்தி முனையில் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி தீபாவை மிரட்டி அவர் அணிந்திருந்த நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சாலவாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்த சுரேஷ், அருண் குமார் மற்றும் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த பாரதி ராஜா என்பதும், பொற் பந்தல் அருகே தம்பதியை மிரட்டி நகை-பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்த போது 25 வீச்சரிவாள்கள், கையுறை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் வேறு எந்தெந்த இடங்களில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
    • “ஓம் சக்தி,பராசக்தி” கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் வெள்ளிக் கிழமையையொட்டி நேற்று இரவு தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்கத்தேர் உற்சவத்தையொட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மஞ்சள் நிற பட்டு உடுத்தி சாமந்தி பூ மலர் மாலைகள் அணிவித்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்த தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

    • மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்கள்.
    • காலநிலை மாற்றத்தால் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் காலநிலை மாற்ற பயிலரங்கம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது. இப்பயிலரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட காலநிலை மாற்றத்தை குறித்தும், இந்த ஆண்டிற்கான மழைப்பொழிவின் மாறுதலை பற்றியும், மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்கள்.

    இதில் பல்வேறு துறைகளில் இருந்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டதால் காலநிலை மாற்றத்தால் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. இப்பயிலரங்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் துணை இயக்குநர் மணிஷ் மீனா, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி ஆட்சியர் சங்கீதா கலந்து கொண்டனர்.

    • திம்மசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
    • பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. முகாமில் 218 பயனாளிகளுக்கு ரூ.3.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்த முகாமில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க. செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ரம்யா, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் தாசில்தார் புவனேஷ்வரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன்கடையை பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு நிலையை கேட்டறிந்தார். மேலும் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்தது.
    • முகாமில் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 18 வயது வரையிலான மாற்றுதிறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்தது.

    முகாமில் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர், பேரூராட்சி துணைத் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனசேகர், வாலாஜாபாத் மேற்பார்வையாளர் குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியை சொர்ணலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் நந்தாபாய், அசோக்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி அளவில் 6 லட்சம் மாணவர்களும், மாவட்ட அளவில் 1.9 லட்சம் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
    • மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-23 -ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் 'மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக 2022-23-ம் ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலையரசன், கலையரசி விருதுகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.

    பள்ளி அளவில் 6 லட்சம் மாணவர்களும், மாவட்ட அளவில் 1.9 லட்சம் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும் கலை அரங்கம் செயல்பாடுகள் மூலம் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    கலைத்திருவிழா போட்டிகள் 6 முதல் 8 -ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் தனி நபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு: கவின்கலை / நுண்கலை,

    இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை - தோற் கருவி, 4. கருவி இசை துளை காற்றுக்கருவிகள், கருவி இசை தந்திக் கருவிகள் 6. இசைச் சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழ் போட்டி நடைபெறும்.

    11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, தோற் கருவி, கருவி இசை துளை / காற்றுக்கருவி, கருவி இசை தந்திக் கருவிகள், இசைச்சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

    போட்டிகள் தனி நபராக அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம் ஒரு மாணவர் ஏதேனும் 3 தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிகபட்சமாக பங்கு பெற முடியும்.

    பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை (முதலிடம்) வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் (முதலிடம் மற்றும் இரண்டாமிடம்) மாவட்ட அளவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    மாநில அளவிலான கலைத்திருவிழா இறுதி போட்டிகள் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

    மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்காணும் அட்டவணையின்படி கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது.

    பள்ளி அளவில் வருகிற 14-ந்தேதிக்குள், வட்டார அளவில் 18-ந்தேதி முதல் 21-ந்தேதிக்குள், மாவட்ட அளவில் 26-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள், வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இந்த கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அத்தியாவசியத் தேவைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.
    • ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சியில் வாழும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.

    அந்த பகுதியில் நிலவி வரும் சுகாதாரச் சீர்கேடுகளை சரி செய்யவும், பாலாற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள தரைப் பாலத்தை சீரமைக்கவும், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமிக்கவும் வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (12-ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புச் செயலாளர்களான மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் பா. கணேசன் ஆகியோர் தலைமை வகிப்பார்கள். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குண்டுகுளம் அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை ராகுல் முந்தி செல்ல முயன்றார்.
    • விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகள் மோனிஷா (வயது 18). இவர் காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதைபோல காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (18). இவரும் அதே கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும் பள்ளி பருவம் முதல் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் ராகுல் மோனிஷாவிடம் உன்னை நான் வீட்டில் விட்டு செல்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ராகுல் தனது நண்பரின் பைக்கில் மோனிசாவை ஏற்றி கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    குண்டுகுளம் அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை ராகுல் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாரதவிதமாக எதிரே வந்த கனரக லாரி மீது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் லாரியின் சக்கரம் இருவரும் மீதும் ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×