என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது.
    • சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    ஆயுத பூஜையை முன்னிட்டு காஞ்சிபுரம் மார்க்கெட்டுகளில் இன்று பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. ரோஜா ரூ.150-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • இன்று 3- வது முறையாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
    • கூட்டத்தை புறக்கணித்ததால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் போனது.

    சென்னை:

    சென்னையை அடுத்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி மற்றும் அக்டோபர் 2-ந்தேதி நடந்த கிராம சபை கூட்டத்தை ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து இன்று 3- வது முறையாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக அந்த ஊர் முழுவதும் நோட்டீசுகள் வழங்கப்பட்டது.

    இன்று காலை கிராமசபை கூட்டம் தொடங்கியது. இதில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கிராம மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்ததால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் போனது.

    • மின்வாரியத்தில் தொழில் சங்கங்களுடன் 22-2-2018 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்.
    • முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒலி முகமது பேட்டையில் அமைந்துள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இ-டெண்டர் முறையை ரத்து செய்யக்கோரியும் கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மின்வாரியத்தில் தொழில் சங்கங்களுடன் 22-2-2018 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களையும் எழுப்பினர்.

    போராட்டத்தினை ஆர். மதியழகன் தலைமையேற்று நடத்தினார். கோட்டி மாநிலத் தலைவர் ஜெய்சங்கர், கோட்டி காஞ்சிபுரம் செயலாளர் படவேட்டான், கோட்டி திட்ட பொறுப்பாளர் பி. கேசவன், திட்டத் துணைத் தலைவர் ஆர். பாபு, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு தலைவர் ஸ்ரீதர், ஒப்பந்த ஊழியர் சி.கலைமணி மற்றும் சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் இ. முத்துக்குமார் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • உலகம் முழுவதும் 1922-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது.
    • வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.

    மீனம்பாக்கம்:

    உலகம் முழுவதும் 1922-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் சர்வதேச வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.

    சென்னை விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் வாயிலாக சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 450 விமான சேவைகள் கையாளப்படுகின்றன.

    சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் செயற்கைகோள் வாயிலாக கடல் மேல் செல்லும் விமானங்களை கண்காணிப்பதற்கான நவீன தொழில் நுட்பங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. அதே போல தென் இந்தியா முழுவதும் சுமார் 25 ஆயிரம் அடி முதல் 46 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் விமானங்களில் உள்ள விமானிகளுடன் தொடர்பு கொள்ள அதி உயர அலைவரிசை தொழில்நுட்பமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் தென் இந்தியா முழுவதும் 1500 விமானங்கள் கையாளப்படும். விமானங்கள் தடையில்லாமல் வானில் பறக்க, தரையிறங்க, ஓடுபாதைக்கு செல்ல, வானில் ஒரு விமானத்துடன் மற்றொரு விமானம் மோதாமல் இருக்க செய்வது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் பணி ஆகும். எந்தொரு பயணிக்கும் பாதிப்பு இல்லாமல் விமான பயணத்தை மேற்கொள்ள தரையில் இருந்து கையாளும் பணியை விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
    • முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக கண்ணன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் தாம்பரம் மாநகராட்சியின் துணை ஆணையராக பணி புரிந்து வந்த செந்தில்முருகனை காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

    இதன் பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 3-வது ஆணையராக செந்தில் முருகன் மாநராட்சி ஆணையரக அலுவலகத்தில் நேற்று முறைப்படி பதிவேட்டில் கையெழுத்திட்டு பணி பொறுப்பேற்றார். முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • கண்காட்சி தொடக்க விழாவிற்கு நெசவாளர் சேவை மையத்தின் மண்டல உதவி இயக்குநர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார்.
    • கண்காட்சியில் பொருட்கள் தள்ளுபடியில் குறைந்த விலைக்கு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் நெசவாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பில் காதி மகோற்சவம் என்ற பெயரில் மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சி காஞ்சிபுரம், பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதனை எழிலரசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார்.

    கண்காட்சி தொடக்க விழாவிற்கு நெசவாளர் சேவை மையத்தின் மண்டல உதவி இயக்குநர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார். கைத்தறி அலு வலர் எம்.நாகராஜன், தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழக உதவி மேலாளர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காண்காட்சியில் கடலூர், கரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆரணி, பரமக்குடி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கைத்தறி நெசவாளர்கள் தங்களது பொருட்களை அரங்குகளில் வைத்திருந்தனர். கைவினைப் பொருட்கள், பட்டுச் சேலைகள், கதர்வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள், மூலிகை மற்றும் பாரம்பரிய அரிசியில் மதிப்புக்கூட்டி செய்யப்பட்ட பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தனர். இந்த கைத்தறி கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெறஉள்ளது. இது குறித்து சேவைமைய உதவி இயக்குநர் ஆர்.சசிகலா கூறும்போது, இந்தியா முழுவதும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் கண்காட்சி நடைபெறுகிறது.தமிழகத்தில் திருச்செங்கோடு, காஞ்சி புரம், திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியில் பொருட்கள் தள்ளுபடியில் குறைந்த விலைக்கு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளன என்றார்.

    • பரந்தூரில் விமான நிலையம் அமையும்போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
    • ரெயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 4791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகள் மற்றும் இதற்கான இடம் தேர்வு மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு மாநில அரசின் நிர்வாக அனுமதி இன்னும் 2 வாரத்தில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் நிலம் கையகப்படுத்துதல், எல்லைகள் நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே பரந்தூரில் விமான நிலையம் அமையும்போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

    பரந்தூர் புதிய விமான நிலையம் சென்னை நகரில் இருந்து சுமார் 67 கி.மீட்டர் தூரத்தில் வருகிறது. அரக்கோணம்-காஞ்சிபுரம் ரெயில் பாதையில் திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் அமைய உள்ளது.

    இதைத்தொடர்ந்து ரெயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது. பரந்தூரில் புதிய ரெயில் நிலையம் அமையும்போது ரெயில் பாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவேண்டும். இதற்கான ஆய்வு பணியை செங்கல்பட்டு-அரக்கோணம் ரெயில்வே பாதையில் விரைவில் மேற்கொள்ள ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.

    ரெயில்வே வாரியம் ஏற்கனவே மாநிலத்தில் 390 கி.மீட்டர் தூரத்துக்கு 7 வழித்தடங்களில் புதிய ரெயில்வே பாதை அமைக்க அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
    • பரந்தூர் விமான நிலையத்தை சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் 400 நாட்களை தாண்டி நீடித்து வருகிறது.

    மேலும் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிலையம் அமைய உள்ள பகுதி நீர்நிலைகளை ஆய்வு செய்ய வந்த ஓய்வு பெற்ற அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி. குழுவினரை பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் தொடர்ந்து பரபரப்பான நிலையே நீடித்து வருகிறது. இதற்கிடையே பரந்தூர் விமான நிலைய பணிக்கு மாநில அரசுக்கு நிர்வாக அனுமதியை 2 வாரத்தில் வழங்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே புதிய விமான நிலையம் தொடர்பான திட்ட அறிக்கைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    பரந்தூர் விமான நிலையத்தை சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கான நிலையங்கள் கையகப்படுத்துதல், எல்லைகள் வரையறுத்தல், விரைவில் இறுதி செய்யப்பட இருக்கிறது. நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பின்னர் விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விரிவான தொழில்நுட்பம்-பொருளாதார அறிக்கையை நிறைவு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

    • தீ விபத்தை தடுக்கும் நோக்கத்தில் பட்டாசுகளை கவனமாக கையாள்வது தொடர்பாகவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
    • பாதுகாப்பு குழுக்கள் ஆய்வின்போது மேற்கொள்ள வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    காஞ்சிபுரத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் வருவாய் அலுவலர் ஆலோசனை மேற்கொண்டார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீ விபத்துக்களை தடுக்கும் பொருட்டு அரசின் உத்தரவின்படியும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்திற்காகவும் மாவட்டத்தில் உள்ள நிரந்தர பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் வட்ட அளவிலான ஆய்வுக்குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தொடர்பாகவும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் தீ விபத்தை தடுக்கும் நோக்கத்தில் பட்டாசுகளை கவனமாக கையாள்வது தொடர்பாகவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    மேலும், பாதுகாப்பு குழுக்கள் ஆய்வின்போது மேற்கொள்ள வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் வெடிபொருள் துணை தலைமை கட்டுப்பாட்டு அலுவலர், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தீயணைப்பு அலுவலர், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர், வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வினய் குமார் (வயது21). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாப்பான் சத்திரத்தில் வீடு எடுத்து தங்கி தண்டலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வினய்குமார் உடன் படிக்கும் தனது நண்பர்களான ரேவனு, திவ்ய தேஜாவுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    கல்லூரி அருகே பெங்களூர்-சென்னை தேசிய சாலையில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்த வினய் குமார் மீது திடீரென இடி தாக்கியது. இதில் வினய் குமார், மற்றும் உடன் இருந்த ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த வினய்குமாரை மீட்டு அருகில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினய்குமார் பரிதாபமாக இறந்தார். இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் இடி தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவ ரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    பிரகாஷ் குடும்பத்துடன் உறவினரின் மகன் பிறந்த நாள் விழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    சாலவாக்கம் - திருமுக்கூடல் சாலையில் பொற் பந்தல் கிராமம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கத்தி முனையில் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி தீபாவை மிரட்டி அவர் அணிந்திருந்த நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சாலவாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்த சுரேஷ், அருண் குமார் மற்றும் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த பாரதி ராஜா என்பதும், பொற் பந்தல் அருகே தம்பதியை மிரட்டி நகை-பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்த போது 25 வீச்சரிவாள்கள், கையுறை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் வேறு எந்தெந்த இடங்களில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
    • “ஓம் சக்தி,பராசக்தி” கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் வெள்ளிக் கிழமையையொட்டி நேற்று இரவு தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்கத்தேர் உற்சவத்தையொட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மஞ்சள் நிற பட்டு உடுத்தி சாமந்தி பூ மலர் மாலைகள் அணிவித்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்த தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

    ×