என் மலர்
காஞ்சிபுரம்
- பழைய ரெயில் நிலையம், வளக்கடி கோவில் தெரு, ராஜாஜி மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியது.
- உத்திரமேரூர் பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மேலும் பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டுள்ளதால் பழைய சீவரம், வள்ளிபுரம் மற்றும் வாயலூர் பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. இதனால் பழைய ரெயில் நிலையம், வளக்கடி கோவில் தெரு, ராஜாஜி மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியது.
உத்திரமேரூர் பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே சமயம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், அச்சிறுப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
- கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயில் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது பெண்கள் பெட்டியில் ஈரோடு தாராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 69) அமர்ந்திருந்தார். அதிகாலை என்பதால் அந்தப் பெட்டியில் யாரும் இல்லை.
அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பெட்டியில் ஏறினார். லட்சுமியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார்.
அவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
பேசிய சில நிமிடங்களில் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? என கேட்டு வாலிபர் மிரட்டினார்.
மேலும் லட்சுமியிடம் இருந்த ரூ.1000 பிடுங்கினார்.
இதனை கண்டு கதறிய லட்சுமியிடம் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டி தர கூறினார்.
மூதாட்டி கழட்ட தயங்கிய போது கத்தியால் கையை வெட்டினார். இதனால் கம்மலை கழட்டி கொடுத்தார். இதற்குள் ரெயில் அரக்கோணம் 6-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.
இந்நிலையில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.
காலை நேரம் என்பதால் பயணிகள் இல்லாத நிலையில் திருமால்பூர் ரெயில் நிலையம் வந்தபோது 2 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து காஞ்சிபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் காஞ்சிபுரம் சென்றவுடன் லட்சுமியை ரெயில்வே போலீசார் மீட்டனர். அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தற்போது அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஓடும் ரெயிலில் பெண்களிடம் கொள்ளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- “பிங்க் அக்டோபர்” என்ற பெயரில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
காஞ்சிபுரம்:
இந்தியாவில் ஆண்டு தோறும் அக்டோபர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை "பிங்க் அக்டோபர்" என்ற பெயரில் மார்பக புற்று நோய் குறித்து பொது மக்கள் மற்றும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் 9 ஆயிரம் இறப்புகளுடன் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு மார்பக புற்று நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் இறப்பதை ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் புற்று நோய் பாதிப்புக்குள்ளாவதை முற்றிலும் அகற்றும் வகையில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
இதை முன்னிட்டு காஞ்சிபுரம் காரைப்பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பேரணியை கலெக் டர் கலைச்செல்வி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கினார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டு மார்பக புற்று நோயை தடுக்க முறையாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
நிகழ்ச்சியில் காரைப் பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை இயக்குனர் சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்க தலைவர் மனோகரன், நிலைய மருத்துவமனை அலுவலர் சிவகாமி, உதவி பேராசிரியர் ஜெயபாரதி, டாக்டர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த 10 நாட்களுக்கு முன் தான் இதே கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி சென்று இருந்தனர்.
- கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமின் அன்சாரி. நேற்று இரவு 8 மணியளவில் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் என்பவர் மட்டும் கடைக்கு வந்து திடீர் சோதனை நடத்தினார்.
விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மீது புகார் வந்திருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமின் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் தான் இதே கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி சென்று இருந்தனர். மீண்டும் சோதனையில் ஈடுபட்டதால் மனவேதனை அடைந்த தமின்அன்சாரி தனது குடும்பத்தினை கடைக்கு வரவழைத்து பெட்ரோல் பாட்டிலுடன் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை கடையின் சுவரில் அதிகாரி ஒட்டிச் சென்றார். இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- மணிகண்டீஸ்வரர் லிங்கம் 1350 வருடங்கள் பழமையானது.
- மணிகண்டீஸ்வரர் குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே தேவரியம்பாக்கம் ஊராட்சி தோண்டான்குளம் கிராமத்தில் உள்ள மணிகண்டீஸ்வரர் லிங்கம் 1350 வருடங்கள் பழமையானது. இந்த லிங்கம் வெட்ட வெளியில் இருப்பதை கண்டு, கிராம மக்கள் கோவில் கட்டமுடிவு செய்தனர். இதற்காக கால்கோள் பூஜை திருவாரூர் சிவ நடராஜன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய திருப்பணிக் குழுவினர், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் மற்றும் தோண்டான்குளம் கிராமம், தேவரியம்பாக்கம் ஊராட்சி மக்கள் செய்து இருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தலவரலாறு
பிரம்மன், திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் மணிகண்டீஸ்வரரை வழிபட்டு உள்ளனர். மணிகண்டீஸ்வரர் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு பொதுவாக காணப்படுகிறது. திருப்பாற்கடலை கடைந்த போது தோன்றிய நஞ்சுவால் துயரம் அடைந்த, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அந்ந நஞ்சை இறைவனுக்கு கொடுத்து உண்ணுமாறு செய்த பாவம் நீங்கும்படி பிரம்மன், திருமால் ஆகியோர் தங்களை காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம்-கழுத்து) போற்றி செய்யும் வகையில் `மணிகண்டம்' எனும் பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டனர் என்பது தல வரலாறாகும்.
சிவன் அருள் பெற்ற இங்குள்ள குளம் மனிதர்களால் தோண்டப்படாமலே சுவையான நீரூற்று பெற்று இயற்கையாகவே அமைந்ததன் பொருட்டு தோண்டாகுளம் என்றும் பின் தோண்டாங்குளம் என்றும் மருவியது.
- மாணவர்களுக்கு பற்களை பரிசோதனை செய்து தேவைப்படுபவர்களுக்கு மாத்திரைகள் இலவசமாக வழங்கி சிகிச்சை அளித்தார்கள்.
- நிகழ்ச்சியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்களும், அரிமா சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
வாலாஜாபாத்:
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உடல் நலம் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 500 மாணவர்களுக்கு வாலாஜாபாத்தில் செயல்படும் அரிமா சங்கம் மற்றும் அஞ்சலாட்சி பல் ஆஸ்பத்திரி இணைந்து பல் பரிசோதனை முகாமை நடத்தியது. முகாமில் பல் மருத்துவ சிகிச்சை சிறப்பு டாக்டர் ஆச்சியப்பன் தலைமையில் பல் மருத்துவர்கள் கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பற்களை பரிசோதனை செய்து தேவைப்படுபவர்களுக்கு மாத்திரைகள், பற்பசை போன்றவற்றை இலவசமாக வழங்கி சிகிச்சை அளித்தார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்களும், அரிமா சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
- ரத்தினவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
- விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.
குன்றத்தூர்:
குன்றத்தூர் குளக்கரை தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 57), காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் தேரடி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
ரத்தினவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரத்தினவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.
- ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் ஆண்கள் 1,79,657 பேர், பெண்கள் 1,89,828 பேர் மாற்று பாலினத்தவர்கள் 60 பேர் என மொத்தம் 3,69,545 பேர் உள்ளனர்.
- காஞ்சிபுரம் தொகுதியில் ஆண்கள் 149570 பேர், பெண்கள் 1,60,088 பேர், மாற்றுபாலினத்தவர்கள்22 பேர் என மொத்தம் 3,09,680 பேர் உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் கலைசெல்வி மோகன் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார். இதில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யா தேர்தல் அலுவலர் புண்ணியகோட்டி தாசில்தார் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1398 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 13 லட்சத்து 24 ஆயிரத்து 581 வாக்களர்கள் உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக ஆலந்தூர் தொகுதியில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 758 வாக்களார்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 615 பேர், பெண்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 86 பேர், மாற்றுபாலினத்தவர்கள் 57 பேர் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் ஆண்கள் 1,79,657 பேர், பெண்கள் 1,89,828 பேர் மாற்று பாலினத்தவர்கள் 60 பேர் என மொத்தம் 3,69,545 பேர் உள்ளனர். உத்திரமேரூர் தொகுதியில் ஆண்கள் 127960 பேர், பெண்கள்137595 பேர், மாற்று பாலினத்தவர்கள் 43 பேர் என மொத்தம் 2,65,598 பேரும், காஞ்சிபுரம் தொகுதியில் ஆண்கள் 149570 பேர், பெண்கள் 1,60,088 பேர், மாற்றுபாலினத்தவர்கள்22 பேர் என மொத்தம் 3,09,680 பேர் உள்ளனர்.
- தங்கம் கடத்தலுக்கு உடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஒப்பந்த ஊழியரான தினகரன் என்பவரும் உதவி வந்தது தெரிந்தது.
- வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் 4.70 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக கிலோ கணக்கில் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் தங்கம் கடத்தல் குறையவில்லை. மேலும் தங்கம் கடத்தலுக்கு சென்னை விமான நிலையம் முக்கிய இடமாக மாறி வந்தது.
இந்த நிலையில் தங்கம் கடத்தலுக்கு உதவியதாக சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் 2 பேர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கும்பலுக்கு துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிலர் உதவி செய்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துப்புரவு பணியில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்து வரும் சீனிவாசன் என்பவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரிடம் சோதனை நடத்தினர். அவர், தனது உள்ளாடைக்குள் ஒரு கிலோ தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 3.70 கிலோ தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து வரும் கடத்தல் கும்பலிடம் சென்னை விமான நிலையத்துக்குள் சீனிவாசன் தங்க கட்டிகளை வாங்கி அதனை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்து கொடுத்து உதவி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட மொத்தம் 4.70 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.70 கோடி ஆகும்.
மேலும் இந்த தங்கம் கடத்தலுக்கு உடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஒப்பந்த ஊழியரான தினகரன் என்பவரும் உதவி வந்தது தெரிந்தது. அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். கைதான சீனிவாசன், தினகரன் எந்தெந்த தங்கம் கடத்தல் கும்பலிடம் தொடர்பில் இருந்தனர், அவர்களிடம் தங்க கட்டிகளை கொடுத்து சென்றவர்கள் யார்? அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வேறு எந்த ஊழியர்களும் உதவினார்களா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாலாற்று மேம்பாலத்தில் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை, பள்ளத்தெரு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது27). ஏ.சி.மெக்கானிக். இவர் நேற்று இரவு காஞ்சிபுரத்தில் வேலையை முடித்துவிட்டு குருவிமலையில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். இரவு 11 மணியளவில் ஓரிக்கை, பாலாற்று மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே தேனம்பாக்கம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீசியன்கள் ஆனந்தன் (50) மற்றும் தாமரை குளம் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (17) எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
திடீரென மூர்த்தி மற்றும் ஆனந்தன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் மூர்த்தி மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்சு மூலம் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தியும் இறந்து போனார். சதீசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலாற்று மேம்பாலத்தில் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓரிக்கை பாலாற்று மேம்பாலத்தில் வாகனங்கள் அனைத்தும் கட்டுப்பாடின்றி அதிவேகமாக செல்வதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே மேம்பாலத்தில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நீர்நிலைகள் கெடாமல் விமான நிலையம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மச்சேந்திர நாதனை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும்.
- விமான நிலையம் அமைப்பது சம்பந்தமான எதிர்ப்புகளை தெரிவிக்க அரசின் தலைமைச் செயலாளரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்பட சுற்றி உள்ள 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவும் அமைக்கப்பட்டு போராட்டங்கள் நீடித்து வருகிறது. இந்தநிலையில் பரந்தூர் விமான நிலைய போராட்ட எதிர்ப்பு குழுவின் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் அக்குழுவைச் சேர்ந்த 15 பேர் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்தனர்.
அப்போது விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பரந்தூரில் பழமையான கட்டிடமாக இருந்த கிராம நிர்வாக அலுவலகத்தின் இடித்த கட்டிடத்தை திருப்பி கட்டி தர வேண்டும். நீர்நிலைகள் கெடாமல் விமான நிலையம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மச்சேந்திர நாதனை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும். விமான நிலையம் அமைப்பது சம்பந்தமான எதிர்ப்புகளை தெரிவிக்க அரசின் தலைமைச் செயலாளரை சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- அதிகாலை முதலே காஞ்சிபுரம் மீன் சந்தையில் கடும் கூட்டம் காணப்பட்டது.
- தாங்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
காஞ்சிபுரம்:
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்று புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஏராளமானோர் குவிந்தனர்.
அதிகாலை முதலே காஞ்சிபுரம் மீன் சந்தையில் கடும் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் தாங்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் செயல்பட்டு வரும் மீன், இறைச்சி கடைகளில் கடந்த 5 வாரங்களாக விற்பனை குறைவாக நடந்த நிலையில் இன்று வழக்கம் போல் விற்பனை சூடுபிடித்தது.
இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






