என் மலர்
காஞ்சிபுரம்
- விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டியது.
- மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் பரவலாக மழை பெய்தது. காலை 7 மணி வரை விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டியது. பின்னர் சாரல் மழையாக நீடித்தது. இதேபோல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், சுங்குவார் சத்திரம், ஓரகடம், பாலு செட்டி சத்திரம், சாலவாக்கம், என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.
திடீர் மழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- சுர்ஜித் பி.யூ.எம்.எஸ். அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- மாணவரை அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், குருவிமலை கிராமத்தின் பிரமுகர்கள் உள்பட பலரும் பாராட்டினார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மகன் சுர்ஜித் (வயது 11). காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதியில் உள்ள பி.யூ.எம்.எஸ். அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் திருப்பத்தூரில் அண்மையில் மாநில அளவில் நடந்த சிலம்பத்தின் துணை விளையாட்டான சுருள்வீச்சு போட்டியில் கலந்துகொண்டு 2-வது இடத்தைப் பிடித்தார். இவருக்கு 4 கிராம் அளவில் வெள்ளிப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த மாணவர் இதற்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒற்றைக்கம்பு சுற்றும் சிலம்ப போட்டியில் முதல் பரிசும், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த இரட்டைக்கம்பு சுற்றும் சிலம்ப போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றவர். இந்த மாணவரை அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், குருவிமலை கிராமத்தின் பிரமுகர்கள் உள்பட பலரும் பாராட்டினார்கள்.
- திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறை ஊழியர் சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர் உமாதேவி. இவர் வங்கியில் உள்ள பணியாளர்களை தரக்குறைவாக பேசியும், பணியாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியும், துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொ ள்ள பரிந்துரை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நகர வங்கியின் துணைப்பதிவாளர் உமாதேவியை இடமாற்றம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தில் எதிரே நடைபெற்றது. கூட்டுறவு துறை ஊழியர் சங்க தலைவர் சத்ய நாராயணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் மற்றும் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறை ஊழியர் சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது துணைப்பதிவாளர் உமாதேவிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அவர் இதற்கு முன்பு மயிலாடுதுறை, செங்கல்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் போதும் இதே போன்று பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேட்டுக்கொண்டார்.
- கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர்நித்தியா சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார்.
பெறப்பட்ட 316 மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுகாடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதிகம் இருந்தன.
இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 389 பயனாளிகளுக்கு ரூ. 452.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர்நித்தியா சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
- புகார்களை பொது மக்கள் எளிதில் தெரிவிக்க 044-27237107,27237207 வாட்ஸ்அப் எண்-938405 6227-ல் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள், சார்ந்த அலுவலர்களுடன் 24*7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
பேரிடர் காலங்களில் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தை சுலபமாக தொடர்பு கொள்ளவும், தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல், கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களை பொது மக்கள் எளிதில் தெரிவிக்க 044-27237107,27237207 வாட்ஸ்அப் எண்-938405 6227-ல் தெரிவிக்கலாம். மேலும் பருவமழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள், உள்ளூர் வாசிகள் அரசு அலுவலர்களுடன் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டினை மட்டும் பின் தொடருமாறும் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
சுற்றுச் சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டமாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்தனர்.
- சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
ஸ்ரீபெரும்புதூர்:
படப்பை அருகே உள்ள செரப்பணஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலூர் அரசு குடிசை மாற்று வாரியகுடியிருப்பில் 2800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பனப்பாக்கம் பகுதியில் இருந்து நாவலூர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக சேதம் அடைந்து உள்ளது.
மேலும் குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரகடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.05 அடிக்கு தண்ணீர் உள்ளது.
- புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இதில் 18.58 அடிக்கு தண்ணீர் உள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளன.
ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 909 ஏரிகள் உள்ளது. இதில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 47 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 101 ஏரிகள் 75 சதவீதமும், 153 ஏரிகள் 50 சதவீதமும், 409 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ளனர். வரும் நாட்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஏற்கனவே நிரம்பி உள்ள ஏரிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.05 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் 3,132 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 188 கனஅடி தண்ணீர் வருகிறது. 188 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இதில் 18.58 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் 2,726 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்க 189 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
- சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 4.6 லட்சம். உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 10.5 லட்சம்.
- சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1,218 விமானங்கள் அதிகரித்து உள்ளன.
ஆலந்தூர்:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம், 3,129 சர்வதேச விமானங்கள், 8,962 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் முழுவதும், சென்னை உள்நாட்டு விமான நிலையம், சர்வதேச விமான நிலையம் இரண்டிலும் சேர்த்து மொத்தம் 12,873 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 104 சர்வதேச விமானங்களும், 299 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 403 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த செப்டம்பர் மாதம் சென்னை சர்வதேச உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. மொத்தம் 17.6 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதில் சர்வதேச பயணிகள் 5.02 லட்சம். உள்நாட்டு பயணிகள் 12.58 லட்சம் ஆவர். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்ட மொத்த விமானங்கள் 10,873. அதில் சர்வதேச விமானங்கள் 2,704. உள்நாட்டு விமானங்கள் 8,169. நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 சர்வதேச விமானங்களும், 272 உள்நாட்டு விமானங்களும் மொத்தம் 362 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. 2022 செப்டம்பரில், சென்னை விமான நிலையத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 15.1 லட்சம். அதில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 4.6 லட்சம். உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 10.5 லட்சம்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1,218 விமானங்கள் அதிகரித்து உள்ளன. அதேபோல் பயணிகள் எண்ணிக்கை, 1.8 லட்சம் அதிகரித்துள்ளது. அகில இந்திய அளவில் ஒப்பிட்டுப் பார்க்கையில், சென்னை விமான நிலையத்தில், விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகள், தொழில், வர்த்தக துறையினர் அதிகரித்து வருவதால், இந்த சாதனையை சென்னை விமான நிலையம் படைத்து உள்ளது என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
- மீன் பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்திய பொருளாதாரத்திற்கு உதவும் அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய மீன்பிடி தொழில் நடைபெறும் பகுதியாகவும், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய ஏரியான பழவேற்காடு ஏரியும் வங்கக் கடலும் இணையக்கூடிய முகத்துவாரம் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்களுக்கும், மீன் பிடி தொழில் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கும் வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் முகத்துவாரம் அடைபடுவதும் அதனை மீனவ மக்கள் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலங்களில் பள்ளம் தோண்டி விடுவதும் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் நிரந்தர முகத்துவாரம் அமைப்பதற்காக ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்த ஆண்டும் வழக்கம் போல முகத்துவாரம் குறுகிய நிலையில் மணல் தூர்ந்து முற்றிலுமாக முகத்துவாரம் அடைப்பட்டு விட்டது. இதனால் பழவேற்காடு ஏரிபகுதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் ஒரு வாரமாக மீன் பிடிக்க செல்லவில்லை. பழவேற்காட்டில் துறைமுகம் இல்லாததால் ஏரியில் இருந்து தான் மீனவர்கள் மீன் பிடிக்க செல்கிறார்கள். இதனால் மீன் பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழவேற்காடு மீன் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் மீன்கள், நண்டு, இறால் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
சுமார் 50 ஆயிரம் மக்களின் நேரடியான வாழ்வாதாரத்தை பாதிக்கும் முகத்துவாரம் அடைபட்டுள்ள இந்த சூழலில் மீனவ கிராம மக்கள் ஒன்று கூடி இதுகுறித்து கோட்டகுப்பத்தில் மீனவ நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதில் மீனவ கிராமங்களிலேயே வசூல் செய்து 22-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தலா ரூ.50,000 வீதம் வசூலித்து ஜேசிபி, மற்றும் ராட்சத இயந்திரங்களுடன் பணி ஆரம்பிக்கப்படுவதாகவும், வருகின்ற மழைக்காலத்துக்கு முன்பு முகத்துவாரத்தை தூர்வாராவிட்டால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படுவதாகவும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முகதுவாரம் தூர்வாரும் பணிக்காக இன்று பல கிராம நிர்வாகிகளுடன் படகில் சென்று இடத்தை ஆய்வு செய்து பணியை ஆரம்பித்து உள்ளதாகவும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
- ஏழு நேர்கல் தடுப்பு அமைக்கும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- பணிகளை திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி ஆய்வு செய்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உள்பட்ட கொக்கிலமேடு மீனவர் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் நீண்டகாலமாக கடல் சீற்றத்தால் ஏற்படும் கடலரிப்பால், தங்களது படகு, வலை, எந்திரங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதை தடுப்பதற்காக கடற்கரை ஓரத்தில் நேர்கல் தடுப்பு மற்றும் மீன் இறங்குதளம் அமைத்து தரவேண்டும் என அரசிடம் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதற்கு அரசு 9.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது மீன்வளத்துறை சார்பில், கடலில் பாறை கற்கள் கொட்டப்பட்டு ஏழு நேர்கல் தடுப்பு அமைக்கும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி மீனவர்களிடம் நேர்கல் தடுப்பு பணிகள் குறித்தும், அவர்களது மீன்பிடி தொழில் வளம் சார்ந்த குறைகளையும் கேட்டறிந்தார்.
- கால்வாயில் மழைநீர் சீராக செல்வதற்கு கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
- தொடர்ந்து தேனாம்பாக்கம் பகுதியில் உள்ள மழை வடிநீர் கால்வாயை கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம்:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழை வடிநீர் கால்வாய்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மேட்டுத் தெரு சந்திப்பில் அவர் பார்வையிட்டு, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் சந்தைவெளி அம்மன் கோயில் அருகே உள்ள மழை வடிநீர் கால்வாயை பார்வையிட்டு, கால்வாயில் மழைநீர் சீராக செல்வதற்கு கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை பார்வையிட்டு, மழை காலங்களில் மழை வெள்ளத் தடுப்புப் பணிக்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை பார்வையிட்டு, சாலை பயன்பாட்டாளர்களுக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் வாகனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு ஒலிமுகமதுபேட்டை சந்திப்பில் மழைநீர் தேங்காமல் இருக்க சிறு பாலம் அமைக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து தேனாம்பாக்கம் பகுதியில் உள்ள மழை வடிநீர் கால்வாயை கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் பெரியண்ணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் மாநகராட்சி நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






