என் மலர்
காஞ்சிபுரம்
- பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
காஞ்சிபுரம் மாதா கோவில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோவில் தெரு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி செல்கிறது.
அதேபோல காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆவா கூட்டை தெரு, லிங்கப்பன் தெரு முருகன் காலனி பல்லவர் மேடு போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழையின் காரணமாக உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம்ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல்சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி ஆகிய முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
காஞ்சிபுரம் பகுதியில் மொத்தம் 381- ஏரிகள் உள்ளன. இதில் ஏரிகள் முழுவதும் நிரம்பியது. 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு இந்த பயன்பாட்டுக்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, உத்திரமேரூர், மணிமங்கலம், போன்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
- 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
- 134 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.
காஞ்சிபுரம்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டிவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்ந 2 நாட்களாக பலத்த மழை பெய்கிறது. நேற்று இரவு முழுவதும் விட்டு,விட்டு பலத்த மழை கொட்டியதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஒரே நாளில் 39 ஏரிகள் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் 149 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 233 ஏரிகள் 50 சதவீதம், 294 ஏரிகள் சதவீதத்துக்கு மேலும், 134 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- மார்க்கெட் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.
- காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.9 கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், ராஜாஜி மார்க்கெட் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மதுக்கடை செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மது பிரியர்கள் இங்கு மதுவாங்கிவிட்டு சாலை யோரம் அமர்ந்து அங்கேயே குடித்து வருகின்றனர். இதனால் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அவர்கள் அந்த பாதையை தவிர்த்து சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் போதை நபர்கள் அங்கேயே கும்பலாக நின்று ரகளையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடமாக விளங்கும் ராஜாஜி மார்க்கெட் வரவே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மார்க்கெட் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும். சாலையில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தீபாவளி பண்டிகையின் போது காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.9 கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பலத்த காயம் அடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது26). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சூர்யாவுக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் கார்த்திக்கிற்கும் அடிக்கடி சிறு,சிறு தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் இருவரும் ஆரிய பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி கரையில் மதுகுடித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த கார்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்யாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் பாலு செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கார்த்திக்கிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
வண்டலூைர அடுத்த கூடுவாஞ்சேரி, மணிமேகலை தெருவை சேர்ந்தவர்கள் கன்னியப்பன, வினித். இருவரும் நேற்று தீபாவளியை முன்னிட்டு வீட்டின் அருகில் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாளுடன் வினித்தை தாக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்னியப்பன் மர்ம கும்பலை தடுக்கு முயன்றார். இதில் அவருக்கு வெட்டு விழுந்தது.
இதைத்தொடர்ந்து கன்னியப்பன் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரிடம் இருந்து கத்தியை பறித்து எதிர்தரப்பு கோஷ்டியினரை சரமாரியாக வெட்டினார். இதில் வயிறு, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த எதிர்தரப்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே பலத்த காயம்அடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கோபால கண்ணன்(23) என்பது தெரியவந்தது. இந்த மோதலில் கன்னியப்பனுக்கும் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கன்னியப்பனின் நண்பர் வினித் மற்றும் அவரது சகோதரர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை தாக்கி உள்ளனர். அந்த வாலிபருக்கு ஆதரவாக நண்பர்களான கோபால கண்ணன் உள்பட 7 பேர் வந்து வினித்தை தாக்கினர். நண்பரை காப்பாற்ற முயன்றபோது கன்னியப்பன் எதிர்தரப்பினரின் கத்தியை பிடுங்கி வெட்டியதில் கோபால கண்ணன் பலியாகி விட்டார். மோதலுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் முறுக்கு கம்பெனி உள்ளது. நேற்று இரவு இந்த கம்பெனி அருகே வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையுண்ட வாலிபர் யார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. முறுக்கு கம்பெனியில் வேலைபார்த்த வாலிபர் ஒருவர் மாயமாகி உள்ளார். அவருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? கொலையுண்ட வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
- ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக 55 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன.
111 ஏரிகள் 75 சதவீதமும், 174 ஏரிகள் 50 சதவீதமும், 406 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
- மோசடி, மிரட்டல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
பிரபல தமிழ் நடிகை கவுதமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியை சேர்ந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சால் சதீஷ்குமார், ஆர்த்தி, பாஸ்கரன் மற்றும் ரமேஷ் சங்கர் ஆகியோர் போல் ஆவணங்கள் தயாரித்து நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் உள்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மீது மோசடி, மிரட்டல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
- விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டியது.
- மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் பரவலாக மழை பெய்தது. காலை 7 மணி வரை விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டியது. பின்னர் சாரல் மழையாக நீடித்தது. இதேபோல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், சுங்குவார் சத்திரம், ஓரகடம், பாலு செட்டி சத்திரம், சாலவாக்கம், என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.
திடீர் மழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- சுர்ஜித் பி.யூ.எம்.எஸ். அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- மாணவரை அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், குருவிமலை கிராமத்தின் பிரமுகர்கள் உள்பட பலரும் பாராட்டினார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மகன் சுர்ஜித் (வயது 11). காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதியில் உள்ள பி.யூ.எம்.எஸ். அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் திருப்பத்தூரில் அண்மையில் மாநில அளவில் நடந்த சிலம்பத்தின் துணை விளையாட்டான சுருள்வீச்சு போட்டியில் கலந்துகொண்டு 2-வது இடத்தைப் பிடித்தார். இவருக்கு 4 கிராம் அளவில் வெள்ளிப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த மாணவர் இதற்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒற்றைக்கம்பு சுற்றும் சிலம்ப போட்டியில் முதல் பரிசும், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த இரட்டைக்கம்பு சுற்றும் சிலம்ப போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றவர். இந்த மாணவரை அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், குருவிமலை கிராமத்தின் பிரமுகர்கள் உள்பட பலரும் பாராட்டினார்கள்.
- திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறை ஊழியர் சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர் உமாதேவி. இவர் வங்கியில் உள்ள பணியாளர்களை தரக்குறைவாக பேசியும், பணியாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியும், துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொ ள்ள பரிந்துரை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நகர வங்கியின் துணைப்பதிவாளர் உமாதேவியை இடமாற்றம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தில் எதிரே நடைபெற்றது. கூட்டுறவு துறை ஊழியர் சங்க தலைவர் சத்ய நாராயணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் மற்றும் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறை ஊழியர் சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது துணைப்பதிவாளர் உமாதேவிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அவர் இதற்கு முன்பு மயிலாடுதுறை, செங்கல்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் போதும் இதே போன்று பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேட்டுக்கொண்டார்.
- கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர்நித்தியா சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார்.
பெறப்பட்ட 316 மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுகாடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதிகம் இருந்தன.
இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 389 பயனாளிகளுக்கு ரூ. 452.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர்நித்தியா சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
- புகார்களை பொது மக்கள் எளிதில் தெரிவிக்க 044-27237107,27237207 வாட்ஸ்அப் எண்-938405 6227-ல் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி துறை மற்றும் பேரூராட்சிகள், சார்ந்த அலுவலர்களுடன் 24*7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
பேரிடர் காலங்களில் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தை சுலபமாக தொடர்பு கொள்ளவும், தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல், கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களை பொது மக்கள் எளிதில் தெரிவிக்க 044-27237107,27237207 வாட்ஸ்அப் எண்-938405 6227-ல் தெரிவிக்கலாம். மேலும் பருவமழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள், உள்ளூர் வாசிகள் அரசு அலுவலர்களுடன் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டினை மட்டும் பின் தொடருமாறும் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
சுற்றுச் சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டமாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






