என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம் சாலையில் சுற்றும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி
- இந்தியாவில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் இடமாக மாமல்லபுரம் மாறி உள்ளது.
- சுற்றுலா பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு, ஜி 20 மாநாடு மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, காற்றாடி திருவிழா, சர்பிங் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளும் இங்கு நடைபெற்றதால் தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை பலமடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் இந்தியாவில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் இடமாக மாமல்லபுரம் மாறி உள்ளது.
இந்த நிலையில் மாமல்லபுரம் பகுதிகளில் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் மாடுகள் ஹாயாக சுற்றி வருகின்றன. பூஞ்சேரி கூட்டுரோடு கிழக்கு கடற்கரை சாலை, கல்பாக்கம் சாலையோரம் கொட்டப்படும் உணவுக்கழிவுகளுக்காக மாடுகள், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் வாகனங்கள் செல்லும் போது திடீரென குறுக்கே செல்வதால் விபத்துக்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இது குறித்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சாலையில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் அபராதமும் வசூலிக்கபட்டது. தற்போது இந்த நடவடிக்கை தீவிரம் காட்டாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் மாடுகள் இரவிலும் பகலிலும் சுற்றி திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாபயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரியிடம் கேட்டபோது,
மாடுகளை பிடித்து அடைக்க நிரந்தரமான பவுண்டு வசதிகள் பேரூராட்சியில் இல்லை. அப்படி பல மாடுகளை பிடித்து அடைத்தால் அவற்றிற்கு உணவு ஏற்பாடுகள் செய்வதிலும் சிக்கல் வருகிறது. கூட்டமாக சுற்றும் மாடுகளை பிடித்து ஏற்றுவதற்கான வாகனம் இல்லை. மேலும் பணியாட்களும் பற்றாக்குறை உள்ளது. எனினும் சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






