என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்குன்றம், காஞ்சிபுரம், கூடுவாஞ்சேரி ஒரே நாளில் 3 வாலிபர்கள் கொலை
- பலத்த காயம் அடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது26). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சூர்யாவுக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் கார்த்திக்கிற்கும் அடிக்கடி சிறு,சிறு தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் இருவரும் ஆரிய பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி கரையில் மதுகுடித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த கார்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்யாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் பாலு செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கார்த்திக்கிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
வண்டலூைர அடுத்த கூடுவாஞ்சேரி, மணிமேகலை தெருவை சேர்ந்தவர்கள் கன்னியப்பன, வினித். இருவரும் நேற்று தீபாவளியை முன்னிட்டு வீட்டின் அருகில் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாளுடன் வினித்தை தாக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்னியப்பன் மர்ம கும்பலை தடுக்கு முயன்றார். இதில் அவருக்கு வெட்டு விழுந்தது.
இதைத்தொடர்ந்து கன்னியப்பன் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரிடம் இருந்து கத்தியை பறித்து எதிர்தரப்பு கோஷ்டியினரை சரமாரியாக வெட்டினார். இதில் வயிறு, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த எதிர்தரப்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே பலத்த காயம்அடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கோபால கண்ணன்(23) என்பது தெரியவந்தது. இந்த மோதலில் கன்னியப்பனுக்கும் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கன்னியப்பனின் நண்பர் வினித் மற்றும் அவரது சகோதரர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை தாக்கி உள்ளனர். அந்த வாலிபருக்கு ஆதரவாக நண்பர்களான கோபால கண்ணன் உள்பட 7 பேர் வந்து வினித்தை தாக்கினர். நண்பரை காப்பாற்ற முயன்றபோது கன்னியப்பன் எதிர்தரப்பினரின் கத்தியை பிடுங்கி வெட்டியதில் கோபால கண்ணன் பலியாகி விட்டார். மோதலுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் முறுக்கு கம்பெனி உள்ளது. நேற்று இரவு இந்த கம்பெனி அருகே வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையுண்ட வாலிபர் யார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. முறுக்கு கம்பெனியில் வேலைபார்த்த வாலிபர் ஒருவர் மாயமாகி உள்ளார். அவருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? கொலையுண்ட வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






