என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

    ஆலந்தூர்:

    ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த அக்டோபர் மாதத்தில் 6 முறை அடுத்தடுத்து கைது செய்தது.

    இலங்கை சிறையில் இருந்த அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

    இதைத்தொடர்ந்த இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து ஒரு மீனவரை தவிர மற்ற 63 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. ஒரு மீனவர் மட்டும், தற்போது இரண்டாவது முறையாக கைதாகி இருப்பதாக கூறி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    விடுவிக்கப்பட்ட 63 மீனவர்களில் 3 கடந்த 21-ந் தேதி 15 மீனவர்கள், 22 -ந்தேதி 15 மீனவர்கள், 24-ந் தேதி 12 மீனவர்கள் என்று மூன்று தடவையாக 42 மீனவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று கடைசி கட்டமாக மேலும் 21 தமிழக மீனவர்களும் விமானம் பயணிகள் சென்னை திரும்பினர். அதிகாலை 4:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், அவர்களுடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்ச அடைந்து உள்ளனர்.

    • கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு.
    • நேற்று 200 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை 9 மணி முதல் 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் வடகிழக்கும் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஏரியில் இருந்து குடிநீர் மற்றம் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் கொள்ளளவு 22.35 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இன்று காலை 9 மணியில் இருந்து 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    கடந்த சில நாட்களாக புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வேகமாக உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குவதால் 200 கனஅடி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    ஏற்கனவே வினாடிக்கு 25 கனஅடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 175 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

    இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறப்பட்டது. ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை வரவேற்று வழியனுப்பி வைத்தார்.
    • பாடல் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46-வது பிறந்த நாள் விழாவை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 1 மாதம் விளையாட்டு போட்டிகள் நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்து உள்ளார்.

    இதையொட்டி நேற்று ஆலந்தூரில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை பரிசாக வழங்கினார்.

    இதன் பிறகு தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை வரவேற்று வழியனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழ்பாடும் 'மாமன்னா' பிரசார பாடலையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.

    பம்மல் நகர இளைஞரணி நிர்வாகி ராஜசேகர் உருவாக்கிய இந்த பாடல் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த பாடலை வெளியிட்டதும் வாட்ஸ்-அப், யூ டியூப்பில் மாமன்னா பாடல் வைரலானது.

    • பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
    • கடந்த 24 மணி நேரத்தில் 13 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக விட்டு, விடடு கனமழை கொட்டுகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

    இதில் 153 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 13 ஏரிகள் முழு கொள்ள ளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் 164 ஏரிகள் 75 சதவீதமும், 226 ஏரிகள் 50 சதவீதமும், 86ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருக்கிறது. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று இரவும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 532 கனஅடியாக உயர்ந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம்24 அடி. இதில் 22.19 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 3170 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதே போல் புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீரு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2788 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 281 கனஅடியாக உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 743 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 174 கனஅடி தண்ணீர் வருகிறது. 12 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி. இதில் 1886 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. 38 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 437 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 15 கனஅடி நீர் வருகிறது. 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • ராம மூர்த்தி, கமலக்கண்ணன், மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
    • பல்வேறு நலத்திட்ட உதவிகளை மிகவும் கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் செயற குழு கூட்டம் அடையாறில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாணவரணி அமைப்பாளர் பிரபு, துணை அமைப்பாளர்கள் கோ.ஜானகிராமன், ராம மூர்த்தி, கமலக்கண்ணன், மணிகண்டன், இன்சமாம் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றினார். அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    இளைஞர் அணியை மேலும் வலுப்படுத்துவதற்காக தன்னையே அர்ப்பணித்து கொண்டு அயராது உழைத்து, அதிக அளவில் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்த்து, இளைஞர்களை வழி நடத்தும் இளம் தலைவர்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்த நாளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் கழகத்தினரும், இளைஞர் அணியினரும், மாணவர் அணியினரும் நாளை முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை ஒரு மாதம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு உடை வழங்க உள்ளோம். மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம், மாரத்தான் ஓட்டம், கிரிக்கெட், இறகு பந்து, கால்பந்து, கைப்பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசு வழங்க உள்ளோம். மேலும் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மிகவும் கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி நடைபெறும் இளைஞரணி 2-வது மாநாட்டில் காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் அணியினர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

    • பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதி அளித்துள்ளது.
    • வீடுகளை அப்புறப்படுத்த மாட்டோம், நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என்று எங்களிடம் கூறிவிட்டு அரசு எங்களை ஏமாற்றி விட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு உள்ளன.

    இதனால் வீடுகள், விளைநிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 487-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடிக்கிறது.

    இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்காக தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளது.

    தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1,822.45 கோடி இழப்பீடு கணக்கிடப்பட்டு உள்ளது. நிலம் எடுப்பு பணிக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு துணை ஆட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்பட 326 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடங்க மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை அறிந்ததும் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்த போராட்டக்காரர்கள் 12 பேர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.

    அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு வழங்கிய நிர்வாக அனுமதிக்கான நகலை அவர்களிடம் வருவாய் அலுவலர் வழங்கினார்.

    இதையடுத்து நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழுவினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்ததும், விவசாயிகளை வஞ்சிக்கக்கூடாது என்றும் கோஷம் எழுப்பினார்கள்.

    தகவல் அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    12 பேர் கைது செய்யப்பட்ட தகவல் பரந்தூர் கிராமத்தில் பரவியது. இதையடுத்து பெண்கள் பரந்தூரில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு திரண்டு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 12 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பரந்தூர் கிராம மக்கள் கூறியதாவது:-

    அரசு நிர்வாகம் எங்களிடம், உங்களை கைவிட மாட்டோம், உங்கள் குடியிருப்புகளை பாதுகாப்போம், நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கி இருப்பது ஏமாற்றம் தருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பரந்தூர் போராட்டக்குழு செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    வீடுகளை அப்புறப்படுத்த மாட்டோம், நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என்று எங்களிடம் கூறிவிட்டு அரசு எங்களை ஏமாற்றி விட்டது. எனவே கிராம மக்கள் நாளை (26-ந்தேதி) ஒன்று கூடி பேசி அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராவோம். என்னென்ன போராட்டங்களில் ஈடுபடலாம் என்று நாளை ஆலோசனை நடத்த உள்ளோம்.

    ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் இனிவரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். தொடர்ந்து வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வருகிற திங்கட்கிழமை முதல் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரம் அடைய உள்ளது.

    • மாவட்ட செயலாளர் க. சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநில உரிமையை மீட்டெடுப்போம்.

    காஞ்சிபுரம்:

    தி.மு.க. மாநில இளைஞரணி 2-வது மாநாடு டிசம்பர் மாதம் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இரு சக்கர வாகன பிரசார பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து பேரணி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

    நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் சென்றடைந்தது. நேற்று மாலை காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான காஞ்சிபுரம் அருகே உள்ள சின்னையன் சத்திரத்தில் மாவட்ட செயலாளர் க. சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிள் பேரணி காஞ்சிபுரம் பொன்னேரி கரை மற்றும் பெரியார் தூண், அண்ணா இல்லம் போன்ற பகுதிகளில் சென்றது. பெரியார் தூணில் பிரசார பேரணிக்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தசரதன், பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் .எஸ். சுகுமார், வக்கீல் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மோட்டார்சைக்கிள் பிரசார பேரணியின் போது எழுத்தாளர் ராஜா தமிழ் மாறன் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே பிரசாரம் மேற்கொண்டார் . அப்போது அவர் பேசியதாவது:-

    கருப்பு என்றால் தியாகம், சிவப்பு என்றால் வீரம். வீரத்திற்கும் தியாகத்துக்கும் தமிழர்களுக்கு தமிழர்கள் தான் நிகரானவர்கள். நம்மை பிளவுபடுத்த ஒன்றிய அரசு நினைக்கிறது. இதை ஒருபோதும் நடத்திட முடியாது. கல்வி, சுகாதாரம் மூலம் நம்மை பின்னுக்கு தள்ள நினைக்கிறது. நிதி வசூல் மூலம் நம்மை ஒன்றிய அரசு வஞ்சிக்க நினைக்கிறது . அவர்கள் நினைப்பது ஒரு நாளும் பலிக்காது. நமது கடமையும் கண்ணியமும் கட்டுப்பாடும் நமது தமிழ் டி.என்.ஏ.வில் ஊறி இருக்கிறது. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநில உரிமையை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆறடி உயரம் கொண்ட வேணுகோபால் சுவாமியும் மற்றும் துவார பாலகர்கள், விநாயகர், முருகர் ஆகிய புதிய சிலை வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
    • சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணா ஹுதியும் தீபாராதனை நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஓ.பி.கே. புது தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோபால சுவாமி ஆலயம் புதிதாய் நிர்மாணிக்கப்பட்டு ஆறடி உயரம் கொண்ட வேணுகோபால் சுவாமியும் மற்றும் துவார பாலகர்கள், விநாயகர், முருகர் ஆகிய புதிய சிலை வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    இதில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணா ஹுதியும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று மூலவர் விமானம் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன், உப தலைவர்கள் தீனதயாளன், ராமு, செயலாளர் தயாளன், துணைச் செயலாளர்கள், கருணாமூர்த்தி, வரதன், திருவேங்கடம், பொருளாளர் துரை.கணேசன் மற்றும் அப்பகுதி வாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். இதில் தேவராஜ் பட்டாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.

    ஆலய நிர்வாக பணியினை நந்தகோபால் ஸ்பதி சிறப்பாக செய்திருந்தார். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இதில் 16-வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சாந்தி துரைராஜன், கண்ணன், சப்தகிரி, காஞ்சி காமராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வேணுகோபாலின் பேரருளை பெற்று சென்றனர்.

    • விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான காஞ்சிபுரத்தில் செயல்படும் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024 ஆம் ஆண்டு 23 வது கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர புதிய பாடத்தின்படி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே 30:11.2023 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி தொடர்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது 044-27237699 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு எதுவும் கலக்கப்படவில்லை.
    • குடிநீருக்காக வேறு தொட்டி உள்ளது.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 96 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த பள்ளிக்கூட்டத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், உத்திரமேரூர் தாசில்தார் ஞானவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் கலைச்செல்வி மோகன், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு எதுவும் கலக்கப்படவில்லை. பறவைகள் அழுகிய முட்டையை எடுத்து வந்து குடிநீர் தொட்டியில் போட்டு இருக்கலாம். குடிநீருக்காக வேறு தொட்டி உள்ளது. ஆகவே இந்த குடிநீர் தொட்டியை இடித்து விடும்படி கூறியிருக்கிறேன். மேலும் அதே இடத்தில் புதிதாக வேறு ஒரு குடிநீர் தொட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளேன். தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.

    இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் அதிகாரிகள் முன்னிலையில் மனிதக்கழிவு கலந்ததாக கூறப்பட்ட குடிநீர் தொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது.

    ×