என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் 205 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளது.
    • குன்றத்தூர் மணிகண்டன் நகரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் படகு மூலம் மீட்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம்:

    மிச்சாங் புயல் வரலாறு காணாத மழையை கொட்டித்தீர்த்தது. இதானால் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பலத்த வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் வடிந்தாலும் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மிச்சாங் புயல் மற்றும் மழை வெள்ளத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 162 வீடுகள் சேதம் இடிந்து சேதம் அடைந்து உள்ளன. மேலும் 65 கால்நடைகள் இறந்துள்ளன.

    பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் 205 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளது. குன்றத்தூர் தாலுகாவில் வரதராஜபுரம் அய்யப்பன்தாங்கல், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இன்னும் மின்சாரம் தடைபட்டு உள்ளது. அதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    வரதராஜபுரம் ஊராட்சியில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளான ராயப்பா நகரில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் படகில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    குன்றத்தூர் சோமங்கலம் பெரிய ஏரியில் கரை பலவீனமாகி மண் சரிவு ஏற்பட்டதால் நீர்வளத் துறை சார்பில் மண் மூட்டைகளை அடுக்கி கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் ஏரி வளர்புரம் ஏரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியை கடந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    குன்றத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பரணிபுத்தூர் ஊராட்சியில் ஜோதி நகர் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அய்யப்பன்தாங்கல் பகுதியில் பிரபு நகரில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. இதில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாத குழந்தை உட்பட 5 பேரை தீயணைப்பு வீரர்கள் படகு மூலமாக பத்திரமாக மீட்டனர்.

    குன்றத்தூர் மணிகண்டன் நகரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் படகுமூலம் மீட்கப்பட்டனர். மாங்காடு, சாதிக்நகர், ஓம்சக்தி நகர், சக்கரா நகர், கொளப்பாக்கம், மனப்பாக்கம், பழந்தண்டலம் உள்ளிட்ட பகுதியில் மழை நின்றும் வெள்ளநீர் வடியாததால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
    • பூண்டி ஏரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 35 அடியில் 31.74 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது.

    'மிச்சாங்' புயலையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.23 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வருகிறது. 3-வது நாளாக ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.27 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 522 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி அகும். இங்கு தற்போது நீர்மட்டம் 16.65 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 600 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 35 அடியில் 31.74 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 370 கன அடி தண்னீர் வருகிறது.

    இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 285 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 21.23 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 2916 டி.எம்.சி. ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 609 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 3000 கன அடியாக உள்ளது மேலும் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 285 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மொத்தமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3285 கன அடியாக உள்ளது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    • 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் (ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், 'மிச்சாங்' புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 25 பேர் கொண்ட குழு மாங்காடு பகுதிகளுக்கும், மீதமுள்ள 25 பேர் கொண்ட குழு காஞ்சிபுரம் பகுதியிலும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

    • குழந்தைகளை அரசு பள்ளிகூடத்திற்கு அனுப்பாமல் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர்.
    • ஏகனாபுரம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 111 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. புதிய விமான நிலையத்துக்கு எதிராகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக புதிய விமான நிலைய அறிவிப்பு வந்த நாள் முதல் போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக கிராமசபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

    இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டது. இதனால் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13 கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதற்கிடையே ஏகனாபுரத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் புதிய போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

    பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் எடுக்க போடப்பட்ட அரசாணையை திரும்ப பெறும்வரை நாளை (1-ந்தேதி)முதல் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகூடத்திற்கு அனுப்பாமல் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர்.

    ஏகனாபுரம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 111 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்வதில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

    இதேபோல் விமான நிலையம் நில எடுப்பில் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்களான நாகப்பட்டு நெல்வாய், மேலேறி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதனால் பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது.
    • சில இடங்களில் 12 செ.மீட்டருக்கும் அதிகமான மழை கொட்டித்தீர்த்தது.

    இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது. இன்று காலை ஏழு மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரத்திற்குள் சில இடங்களில் 12 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


    செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து 1500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், அது 2429 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் உபரி நீர் திறப்பு 6000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    • தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

    ஆலந்தூர்:

    ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த அக்டோபர் மாதத்தில் 6 முறை அடுத்தடுத்து கைது செய்தது.

    இலங்கை சிறையில் இருந்த அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

    இதைத்தொடர்ந்த இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து ஒரு மீனவரை தவிர மற்ற 63 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. ஒரு மீனவர் மட்டும், தற்போது இரண்டாவது முறையாக கைதாகி இருப்பதாக கூறி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    விடுவிக்கப்பட்ட 63 மீனவர்களில் 3 கடந்த 21-ந் தேதி 15 மீனவர்கள், 22 -ந்தேதி 15 மீனவர்கள், 24-ந் தேதி 12 மீனவர்கள் என்று மூன்று தடவையாக 42 மீனவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று கடைசி கட்டமாக மேலும் 21 தமிழக மீனவர்களும் விமானம் பயணிகள் சென்னை திரும்பினர். அதிகாலை 4:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், அவர்களுடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்ச அடைந்து உள்ளனர்.

    • கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு.
    • நேற்று 200 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை 9 மணி முதல் 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் வடகிழக்கும் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஏரியில் இருந்து குடிநீர் மற்றம் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் கொள்ளளவு 22.35 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இன்று காலை 9 மணியில் இருந்து 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    கடந்த சில நாட்களாக புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வேகமாக உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குவதால் 200 கனஅடி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    ஏற்கனவே வினாடிக்கு 25 கனஅடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 175 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

    இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறப்பட்டது. ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை வரவேற்று வழியனுப்பி வைத்தார்.
    • பாடல் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46-வது பிறந்த நாள் விழாவை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 1 மாதம் விளையாட்டு போட்டிகள் நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்து உள்ளார்.

    இதையொட்டி நேற்று ஆலந்தூரில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை பரிசாக வழங்கினார்.

    இதன் பிறகு தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை வரவேற்று வழியனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழ்பாடும் 'மாமன்னா' பிரசார பாடலையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.

    பம்மல் நகர இளைஞரணி நிர்வாகி ராஜசேகர் உருவாக்கிய இந்த பாடல் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த பாடலை வெளியிட்டதும் வாட்ஸ்-அப், யூ டியூப்பில் மாமன்னா பாடல் வைரலானது.

    • பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
    • கடந்த 24 மணி நேரத்தில் 13 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக விட்டு, விடடு கனமழை கொட்டுகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

    இதில் 153 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 13 ஏரிகள் முழு கொள்ள ளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் 164 ஏரிகள் 75 சதவீதமும், 226 ஏரிகள் 50 சதவீதமும், 86ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருக்கிறது. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று இரவும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 532 கனஅடியாக உயர்ந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம்24 அடி. இதில் 22.19 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 3170 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட 22 அடியை தாண்டி உள்ளதால் தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதே போல் புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீரு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2788 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 281 கனஅடியாக உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 743 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 174 கனஅடி தண்ணீர் வருகிறது. 12 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி. இதில் 1886 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. 38 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 437 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 15 கனஅடி நீர் வருகிறது. 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ×