என் மலர்
காஞ்சிபுரம்
- படிக்கட்டு பயணத்தின் போது மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
- பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் படிக் கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிப் போய்விட்டது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் மாணவர்களின் படிக்கட்டு பயணம் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே மாறிப்போய் இருக்கிறது. இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுப்ப தற்கு போலீசாரும் போக்கு வரத்து அதிகாரிகளும் எவ்வளவோ முயற்சி செய் தும் படிக்கட்டு பயணத்தை மாணவர்கள் கை விடுவதாக இல்லை.
இதனால் படிக்கட்டு பயணத்தின் போது மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு கடிவாளம் போடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பஸ்சின் பின்பக்க வாசலில் உள்ள படிக்கட்டில் தொங்கிய படியேதான் மாணவர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அருகிலுள்ள ஜன்னல் கம்பிகளை கையால் பிடித்துக் கொண்டு உயிரை பனையம் வைத்து அவர்கள் பயணம் மேற் கொள்வது வழக்கம். இதனை தடுக்கும் வகையில் படிக்கட்டு அருகில் ஜன்னல் கம்பிகள் வெளியில் தெரியாத அளவுக்கு மூடுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி மாணவர்கள் பிடித்து தொங்கும் படிக்கட்டு அருகில் உள்ள 2 ஜன்னல் களையும் இரும்பு தகரம் கொண்டு மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்கான பணி களை காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மண்டலத்துக்குட்பட்ட ஒரிக்கை, மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடுகின்றன. இதில் 140 பஸ்கள் மாநகர பேருந்துகளாகும். உள்ளூர்களில் இயக்கப்படும் இந்த பஸ்கள் அனைத்திலும் இரும்பு தகடுகள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது வரையில் 47 பஸ்களில் முழுமையாக இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவ டிக்கை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதனை செயல்படுத்தி மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
- இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
- அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தில் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் நிறுவனரானஏ.என் ராதாகிருஷ்ணன் அவர்களை நினைவூட்டும் வகையில் விழாவின் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பிறகு, பட்டமளிப்பு விழா தொடங்கியது.
விழாவிற்கு தலைமை தாங்கிய மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் இடைக்கால வேந்தரான கோமதி ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் இ.என்.டி ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் பேராசிரியருமான பத்மஸ்ரீ. டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமை வகித்தார்.
விழாவில் சிறந்த கல்வி சாதனைகளை அங்கீகரித்து, இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் கழகத்தின் மதிப்பிற்குரிய ஏழு முன்னாள் மாணவர்கள் 'சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது' களைப் பெற்றனர்.
தொடர்ந்து, உட்சுரப்பியல் மருத்துவரும் மற்றும் பொது மருத்துவரும் ஆன டாக்டர் உஷா ஸ்ரீராம் அவர்களுக்கு மகப்பேறு மருத்துவ நலன் மற்றும் பெண் முன்னேற்றம் ஆகிய துறைகளில் அவர் கொடுத்த சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் "ஹானரிஸ் காசா" கவுரவ விருது வழங்கப்பட்டது. மேலும், டாக்டர். நிமல் ராகவனுக்கு சமூகப் பொறுப்பு விருது வழங்கப்பட்டது.
- 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சோழிங்கநல்லூர்:
மிச்சாங் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மழை வெள்ளத்தின் போது திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள 3,4,10, -ம் வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்தனர். ஆனால் அங்கு வசிப்ப வர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப் படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கானாத்தூர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புயல் மழையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். எங்கள் பகுதியில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி பொருட்கள் சேதம் அடைந்தன. 4 நாட்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது. ஆனால் எங்களுக்கு நிவாரணத்தொகை வழங்காதது ஏன்? என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொது மக்களை கலைந்து போகச் செய்தனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
- ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
கன்னியாகுமரியில் இருந்து காசி செல்லும் காசி தமிழ்ச்சங்க விரைவு ரெயில் காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது. இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் கட்சியின் துணைத் தலைவர்கள் செந்தில்குமார்,ஜம்போடை சங்கர்,மேற்கு மண்டல தலைவர் காஞ்சி ஜீவானந்தம்,தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
அந்த ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. மேலும் பூசனிக்காய் சுற்றி உடைத்தும்,பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
- சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது.
- நிலங்களை கையகப்படுத்த தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 746.18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதில் 1917.17 ஏக்கர் நிலம் மட்டுமே அரசுடையது. மற்றவை அனைத்தும் விவசாய மற்றும் பட்டா நிலங்கள் ஆகும். இவை அனைத்தும் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது.
புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள்முதலே பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த மாதம் விமான நிலைய பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
இந்தநிலையில் நிலங்களை கையகப்படுத்த தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நிலங்களை கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிப்பது, கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை, இழப்பீடு தொகை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
விமான பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பணி முடிவடைய குறைந்தது ஒரு ஆண்டு ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும்
பொன்னேரி:
மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரை பகுதிக்கும் பரவியதால் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தாசில்தார் மதிவாணன். மீன்வளத்துறை அதிகாரி கங்காதரன், சுற்றுச்சூழல் அதிகாரி லிவிங்ஸ்டன் ஆகியோர் நேரில் பழவேற்காடு கடற்கரை மற்றும் ஏரிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரை சேகரித்து பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக கடலுக்குள் செல்லாமல் இருந்த மீனவர்கள் தற்போது கடலில் எண்ணெய் கழிவு கலப்பால் 20நாட்களாக வாழ்வாதாரம் பாதித்து தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி, கோட்டைக்குப்பம் ஊராட்சி, தாங்கல் பெரும்புலம் ஊராட்சி அவுரிவாக்கம் ஊராட்சி, பழவேற்காடு ஊராட்சி ஆகிய ஊராட்சி மீனவர் கிராமங்களின் கூட்டமைப்பு சார்பில் 33 கிராம மீனவர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து 33 மீனவ கிராம பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் நிவாரண உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், பழவேற்காடு கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவினால் மீன்கள், இறால்கள் நண்டுகள் உற்பத்தி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது.
- எந்திரங்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.
காஞ்சிபுரம்:
பாராளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதை தொடர்ந்து, அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு கிராமத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கிலிருந்து, முதல் நிலை சரிபார்ப்பு முடிவுற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலிருந்து, அலுவலர்களுக்கு பயிற்சியும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் ஆகியவை, மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பொது மக்களின் விழிப்புணர்வுக்காக, வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.
- வெறி நாயை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேக்குபேட்டை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டை நடுத்தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சாலியர் தெருவிற்கு செல்லும் குறுக்கு சந்து பகுதியில் வெறி நாய் ஒன்று திரிகிறது.
இப்பகுதியில் தனியார் பட்டு ஜவுளியகம் உள்ளதால் பட்டு சேலை எடுக்க வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை, வெறி நாய் கடித்து வருகிறது.
இதுவரை உள்ளூர் மற்றும வெளியூர்வாசிகள் என மொத்தம் 15 பேரை, இந்த வெறி நாய் கடித்துள்ளதாக இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். எனவே அச்சுறுத்தும் வெறி நாயை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேக்குபேட்டை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் வெறி நாய் ஒன்று சுற்றி வருகிறது. அதே கிராமத்தை சேர்ந்த பிரபாவதி (வயது 67) என்பவரை கடித்து உள்ளது. அதே நாளில் அடுத்தடுத்து தட்சணாமூர்த்தி, கவிதா, கோமளா உள்ளிட்ட ஏழு பேரை வெறி நாய் கடித்துள்ளது. தொடர்ந்து அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
- மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம்:
மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக குன்றத்தூர் தாலுகாவில் பெரும் பகுதியும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மேவலூர் குப்பம், சிவன் தாங்கல், கச்சிப்பட்டு ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1.37 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை கிடைக்க இருக்கிறது.
- பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
- ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மறுத்து போரட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள சுமார் 20 கிராமங்களில் 3 ஆயிரத்து 774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியாள நாள் முதலே கிராமமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மறுத்து போரட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள், பணியாற்ற உள்ளனர். மேலும் இந்த அதிகாரிகளின் கீழ் 24 தாசில்தார்கள், 24 துணை தாசில்தார்கள், சர்வேயர், வருவாய் ஆய்வாளர்கள், 326 வருவாய் துறை ஊழியர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிலம் எடுப்புக்காக பணியாற்ற உள்ளனர். நில எடுப்புக்கு நியமிக்கப்பட உள்ள மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்களில் முதற்கட்டமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் நாராயணன் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும் நில எடுப்பு அலுவலகம் செயல்பட இடம் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
- ஏரியின் ஒருபகுதியில் 1300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
- வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் அமைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருநின்றவூர்:
மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. தற்போது வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.
எனினும் திருநின்றவூர் நகராட்சியில் ஈசா ஏரியையொட்டி உள்ள ராமதாஸ்புரம் பெரியார் நகர், முத்தமிழ் நகர், பாரதியார் தெரு, கம்பர் தெரு, ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
வெள்ள நீரை ராட்சத மோட்டார்கள் அமைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி அலுவலர்களுக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டனர்.
இதேபோல் கொட்டாமேடு பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை கால்வாய் அமைத்து கல்வெட்டு மூலம் வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. இதனையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, கனமழையால் திருநின்றவூர் நகராட்சிக் குட்பட்ட 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈசா ஏரி 11.5 அடி உயரம் நிரம்பியது. இதனால் ஏரியின் ஒருபகுதியில் 1300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டிற்கு பிறகு மிச்சாங் புயலினால் 2 நாட்களில் 68 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலமும், கொட்டமேடு பகுதியில் தனியாக கால்வாய் அமைத்தும் வெளியேற்றப்படுகிறது என்றார்.
- சட்ட நன்னடத்தை அலுவலர் தயாளன் உடன் இருந்தனர்.
- பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விபரங்கள் கேட்டறிந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறை உள்ளது. இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனரா? என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது கிளை சிறை கண்காணிப்பாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் மெர்லின் ஜெயா , மாவட்ட நீதி குழும உறுப்பினர் மற்றும் சமூக பணியாளர் சக்திவேல், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சுரேஷ் , சட்ட நன்னடத்தை அலுவலர் தயாளன் உடன் இருந்தனர். ஆய்வின் போது கைதிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விபரங்கள் கேட்டறிந்தனர்.






