என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளான ராயப்பா நகரில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் படகில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
மிச்சாங் புயல்-வெள்ளம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 162 வீடுகள் இடிந்தன
- பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் 205 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளது.
- குன்றத்தூர் மணிகண்டன் நகரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் படகு மூலம் மீட்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்:
மிச்சாங் புயல் வரலாறு காணாத மழையை கொட்டித்தீர்த்தது. இதானால் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பலத்த வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் வடிந்தாலும் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மிச்சாங் புயல் மற்றும் மழை வெள்ளத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 162 வீடுகள் சேதம் இடிந்து சேதம் அடைந்து உள்ளன. மேலும் 65 கால்நடைகள் இறந்துள்ளன.
பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் 205 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளது. குன்றத்தூர் தாலுகாவில் வரதராஜபுரம் அய்யப்பன்தாங்கல், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இன்னும் மின்சாரம் தடைபட்டு உள்ளது. அதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
வரதராஜபுரம் ஊராட்சியில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளான ராயப்பா நகரில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் படகில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
குன்றத்தூர் சோமங்கலம் பெரிய ஏரியில் கரை பலவீனமாகி மண் சரிவு ஏற்பட்டதால் நீர்வளத் துறை சார்பில் மண் மூட்டைகளை அடுக்கி கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் ஏரி வளர்புரம் ஏரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியை கடந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
குன்றத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பரணிபுத்தூர் ஊராட்சியில் ஜோதி நகர் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அய்யப்பன்தாங்கல் பகுதியில் பிரபு நகரில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. இதில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாத குழந்தை உட்பட 5 பேரை தீயணைப்பு வீரர்கள் படகு மூலமாக பத்திரமாக மீட்டனர்.
குன்றத்தூர் மணிகண்டன் நகரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் படகுமூலம் மீட்கப்பட்டனர். மாங்காடு, சாதிக்நகர், ஓம்சக்தி நகர், சக்கரா நகர், கொளப்பாக்கம், மனப்பாக்கம், பழந்தண்டலம் உள்ளிட்ட பகுதியில் மழை நின்றும் வெள்ளநீர் வடியாததால் மக்கள் தவித்து வருகிறார்கள்.






